தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
தொடக்க நூல் 15:5-12,17-18
பிலிப்பியர். 3:17-4:1
லூக்கா 9:28-36
திருப்பலி முன்னுரை:
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!. புயலுக்குப்பின் அமைதி, இரவுக்குப்பின் பகல், துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப்போல் இயேசுவின் பாடுகளுக்குப்பின் மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம் மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம். அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில் நிறைந்திருக்கட்டும்..
மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும் அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார். அதுபோல அன்றாட வாழ்வில் பல மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார். சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார். ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே நமக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும் நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பது இல்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
புதியநாட்டைப் பெற்ற ஆபிராமுடன் இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில் மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல். விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்ற வாக்குறுதி. உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல் ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின் கீழ்ப்படிதல். இவ்வாறு கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராமின் கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் என்று அவரின் அன்பைப் பதிவு செய்கின்றார். நாம் நமது தன்னல வாழ்வுக்குள் இறந்துப் புதைக்கப்பட்டால் தான் வேற்றுரு பெற்றுக் கிறிஸ்துவைப் போல உயிர்த்தெழமுடியும். தன் மக்கள் மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டாடும் அவர் "ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்" என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 27: 1,7-8,9-13-14
பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? -பல்லவி
ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ”புறப்படு அவரது முகத்தை நாடு” என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.-பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது "என் அன்பார்ந்த மைந்தர் இவரே! இவருக்கு செவிசாயுங்கள்"
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1.உடன்படிக்கையின் நாயகனே! எம் இறைவா! இத் தவக்காலத்தில் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறைமகன் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் வழியில் செல்லவும், எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று பற்றி நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்! என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தைப் பயன்படுத்த வேண்டி வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் திருத்தூதர்களைப் போல் வாழ்ந்திடவும், விண்ணகதே எமது தாய் நாடு, அங்கிருந்து வரும் இறைமகன் இயேசுவிற்காகக் காத்திருக்கவும், மாட்சிமைக்குரிய அவரின் உடல் போன்று உருமாற்றம் பெற்றிடவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நிலையான நாடு விண்ணகமே என்ற உணர்த்திய எம் இறைவா! அரசியல் தலைவர்கள் இவ்வுலகச் சொத்துக்களையும் புகழையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு மக்களின் நலன்கள் காக்கும் தன்னலமற்ற போக்கைக் கடைப்பிடிக்கவும், உக்ரைன் நாட்டில் நடைப்பெற்று வரும் விரைவில் முடிவுக்கு வந்து அனைத்து மக்களுக்கும் நல்லதோரு எதிர்கலத்தையும் வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அருட்செல்வங்களின் நாயகனே! எம் இறைவா! தொற்று நோயினால் ஏற்பட்ட மாற்றங்களினால் அவதியுறும் எம் மாணவ, மாணவிகள் அனைவரும் தேவையாக உடல், உள்ளச் சுகமும், தேர்விற்குத் தேவையான ஞானத்தையும் மனத் தைரியத்தையும் கொடுத்து, பெற்றோர்களின் அன்பும், தேற்றவும் பெற்றுத் தங்களின் எதிர்கால வாழ்வில் வெற்றிப் பெறவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5, ஏழைகளுக்கு இறங்குபவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்று கூறிய எம் இறைவா! உலகமுழுவதும் உணவின்றி, உடையின்றி, வாழ்வை இழந்து உம்மையே நம்பி இருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள், வறுமையில் வாடுவோர் தனிமையில் தவிப்போர் போன்ற இவர்களின் தேவைகளைச் சந்தித்து, தங்கள் அன்பையும், அரவணைப்பையும் பகிர்ந்தளிக்கத் தேவையாக நல்ல மனப்பக்குவத்தை எமக்கு இத்தவக்காலத்தில் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment