தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்:
யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
லூக்கா 15:1-3, 11-32
திருப்பலி முன்னுரை:
இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுத் திருப்பலியைக் கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி / பாஸ்காக் கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், / நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் / முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே,/ இறைவனை நோக்கிய, / பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.
இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்தத் தவக்காலம் நம்மில் வீழ்ந்துக் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காணவும், அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் நல்ல உள்ளத்தை நமக்குத் தர வேண்டியும் இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுப் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவைப் படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காத் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையைச் சீரியமுறையில் மனதில் பதிவு செய்து அதனை செயலாக்குவோம்.
பதிலுரைப் பாடல்:
திபா 34: 1-2. 3-4. 5-6
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். –பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை என்பது அருட்பணியாளரும், பொது நிலையினரும் இணைந்த செயல்பாடுகளே. இவை திருஅவையில் நிலவிட, திருத்தந்தை முதல் பொதுநிலையினர்கள் வரை அனைவரும் உம் இறைஇரக்கத்தின் கருணையினால் நல்ல மாற்றங்கள் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா! உலக நாடுகளில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள், ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்தால், நல்ல தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எம் அன்புத் தந்தையே, இறைவா! நீண்ட இடைவெளிக்கு பின் தமிழகத்தில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் அனைத்து மாணவ மாணவியர்களை உம் பாதத்தில் வைக்கின்றோம். அவர்கள் பயம், கவலை, மறதி போன்ற தீயசக்திகளிடமிருந்து விடுவித்து, ஞானத்தோடு செயல்பட, எதிர்காலத்தின் கனவுகள் நினைவாகிட உம் ஆவியின் வல்லமையைப் பொழிந்திட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பு இறைவா! உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம், பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மனமாற்றத்தை வாஞ்சையுடன் எதிர்பார்க்கும் இறைவா! அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் பரந்த மனப்பான்மையும், உமது அன்பு, கருணை, மன்னிப்பு, அரவணைக்கும் பண்பு, மனமாற்றத்தில் மகிழ்ச்சி, பிறர் சுதந்திரத்தை மதித்தல் ஆகிய பண்புகளை எமதாக்கிக் கொள்ள அருள் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment