Monday, April 18, 2022

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:12-16
திருவெளிப்பாடு 1:9-11அ,12-13, 17-19
யோவான் 20:19-31

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. இறைஇரக்கத்தை நாடி ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

இறந்து உயிர்த்த இயேசு முதல் முதலாகத் தன் சீடத்தத்தி மதலா மரியாவின் வழியாகத் தனது உயிர்ப்பை உறுதிச் செய்து விட்டுக் கலிலேயாவில் தன் சீடர்களைச் சந்திக்கச் செல்லுகிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின் மற்ற சீடர்கள் பயந்திருக்கத் துணிவோடு வெளியே சென்று வந்த தோமையார் மூலம் மீண்டும் தன் உயர்ப்பை அறிக்கையிடச் செய்கிறார். நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று போற்றி ஆண்டவரைக் கண்டு கொண்ட தோமையார் மூலம் காணாமல் இயேசுவை நம்பும் நம்மை எல்லாம் பேறு பெற்றோர் என்று வாழ்த்துகின்றார்.

இயேசுவைச் சந்தித்த பலரும் தாங்கள் வாழ்க்கையில் பெரியதோர் மாற்றத்தை அடைந்தது போல நாமும் அவர் பெயரில் நம்பக்கைக்கொண்டு அவரின் பேரிரக்கத்தைப் பெற்று அவரின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டங்களில் நிறைவாய் பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்றுப் பகர்ந்தத் திருத்தூதர்களின் வாழ்க்கை முறைப் பற்றிப் பதிவுச் செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றியும் இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாகப் பதிவு செய்கின்றார். தொடர் ஓட்டத்தில் ஓடுவதுபோலக் கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். நிழலாக இன்றும் தொடர்கின்றார். இதனை விளக்கும் முதல் வாசகமான திருத்தூதர் பணிகளின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 118:2-4, 22-24, 25-27அ
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.`என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

2.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!  ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

3.ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை:

பத்முதீவுக்கு நாடு கடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்கின்றார். அவரைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும், இயேசு உயிர்த்தபின் மனித நிலையிலிருந்து மாறி, இறை நிலையில் உயர்ந்து நிற்பதையும் நாம் இரண்டாம் வாசகத்தில் அறிகின்றோம். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு கூடிவருதலால், நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவிச் செய்ததோடு, நம்பிக்கைக் குன்றியவர்களுக்குத் துணிவையும் தந்து, எங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலைப் போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையில் ஒருமனத்தோடு வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களை எங்கள் மேல் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் அன்பு தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது  இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட  உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களைப் பராமரித்துப் பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் வாழ்வின் வழிகாட்டியான இறைவா! தங்கள் பள்ளிப்படிப்புக்களை முடித்து விட்டு மேற்படிப்பிற்காகக் கல்லூரிகளில் இடம் தேடி அலையும் எம் இளையோர், சிறந்த வழிகாட்டிகளின் மூலமாகத் தாங்கள் விரும்பும் கல்வியினைப் பெற்று, பெற்றோருக்கும், திருஅவைக்கும், நாட்டிற்கும் உவந்தவர்களாகத் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment