Tuesday, April 26, 2022

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19


திருப்பலி முன்னுரை:


அன்புச் சகோதரர் சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின் போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடியச் சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பைத் தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்குப் பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதைச் சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகமுன்னுரை:


தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:
திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை:


இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! எங்கள் திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.மனமாற்றத்தின் நாயகனே எம் இறைவா! இறை அழைத்தலின் மேன்மையை, அனைத்து மாந்தரும் உணர்ந்து, சுயநலம் கருதாமல் குருத்துவத்தின் மேன்மையைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தித் திருச்சபைக்குப் பணிச் செய்திடத் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டிய அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அணைகடந்த உமது அன்பினால் எம்மை அரவணைக்கும் இறைவா! இன்று உலகில் நடைபெறும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள், துறவற வாழ்வை மேற்கொண்டவர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள், மதத்தின் பெயரால் ஆங்காங்கே நடைபெறும் செயல்களை இனம் கண்டு, மனித வாழ்வின் மேன்மையை இவர்கள் உணரவும், உம் ஆவியின் ஆற்றலை இவர்களும் உணர்ந்துச் சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எல்லாம் வல்ல இறைவா! ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், நோயாளிகள் ஆகியோருக்கு உமது அன்பையும், இரக்கத்தையும், அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறத் தேவையான உதவிகளைச் செய்யும் நல்மனதை எங்களுக்குத் தருமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் நல்லாயனை! இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

3 comments:

  1. Monday mass introduction in tamil

    ReplyDelete
  2. Could you give ur whatsapp number?

    ReplyDelete
  3. please use our Email

    ReplyDelete