Sunday, June 5, 2022

மூவொரு இறைவன் பெருவிழா

 மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்று நமது தாய்திருச்சபை மூவொரு இறைவன் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. மூவொரு இறைவன் என்றால் தந்தை படைப்பாளராகவும், மகன் மீட்பராகவும், தூய ஆவி எந்நாளும் நம்மை பராமரிப்பவராகவும் நாம் விவிலியத்தின் அடிப்படையில் இம்மறைபொருளை உணர்கிறோம். அதன்படி வாழ்கின்றோம். மூவொரு கடவுளும் மூன்று கடவுளா? என்று சிலர் கேட்கலாம். ஆனால் படைத்தவர் தந்தை. அகரமும் னகரமும் நானே என்றவர் மகன். நீரில் அசைவாடிக் கொண்டிருந்தவர் தூயஆவி.

மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. தந்தை படைப்பவராகவும், மகன் மீட்பவராகவும், தூய ஆவி அர்ச்சிப்பவராகவும், சாதாரண முறையில் நாம் புரிந்துக் கொண்டாலும் எந்த ஒரு பணியையும் எந்த ஓர் ஆளும் தனித்துச் செய்வதில்லை. மூன்று ஆட்களும் எல்லாவற்றிலும் இணைந்துச் செயல்படுகின்றனர்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாளமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

 
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை “நமது இறுதி நியத்தீர்ப்பின் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும், நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன், அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார்” என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றுரைத்த எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசே! எம் இறைவா! 'உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவர் என எண்ணுங்கள்' என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளுக்கேற்ப அடுத்திருப்பவருடன் அன்பும், சுயநலமில்லாத சேவை மனப்பான்மை மனம் கொண்டவர்களாகவும், உலகமெங்கும் உம் அன்பின் சாட்சிகள் வலம் வர உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எல்லாம் வல்ல இறைவா! நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment