Tuesday, July 26, 2022

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 31/07/2022

  பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சபை உரையாளர் 2:1-2
கொலோசையர். 3:1-5, -9-11
லூக்கா 12:13-21

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறான இன்று இறையருள் வேண்டி இறைவனின் திருப்பாதம் தேடி வந்துள்ள இறைமக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இன்றைய சூழலில் மக்கள் ஓய்வின்றி உழைத்துத் தேடிவைக்கும் செல்வங்களின் நிலையையும், அவர்களின் மனநிலையையும் அழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றது இன்று தரப்பட்டுள்ள வாசகங்கள். கடினமாய் உழைத்துச் சேர்த்த சொத்துகள் அதற்காக உழைக்காதவரிடம் செல்வது பெரிய அநீதி. எல்லாம் வீண் என்கின்றது முதல் வாசகம். நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். நீங்கள் புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். எனவே உங்களிடையே வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார் என்கின்றார் திருத்தூதர் பவுல்.

இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? " என்று கேட்கின்றார் இறைமகன் இயேசு. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற இறைவார்த்தையின் மகத்துவத்தை உணர்ந்த நாம், இன்றையத் திருப்பலியில் இறைவனின் இல்லத்தில் நாம்,  செல்வங்களை சேர்த்து வைக்க, வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்..  வாரீர்.

 வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் பதிவு செய்கின்றது இந்த வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்குத் துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் தான் மிஞ்சுகிறது என்று எடுத்துரைக்கும் சபை உரையாளரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


பல்லவி: என் தலைவரே தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்!
திபா. 90: 3-4,5-6,12-13,14,17
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புளுதியாகுங்கள்' என்கின்றீர்.  ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். - பல்லவி
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.  ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!  ஆம் நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

இரண்டாம் வாசகம்:

கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றிக் கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகுச் சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகுச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார் திருத்தூதர் பவுல். அவரின் நினைவூட்டலைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கின்றது.
 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. ஏழையிரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்று மொழிந்த எம் இறைவா! திருஅவையின் நல்மேய்ப்பர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் இறைவார்த்தையின் ஒளியில் தன்னைப் புதுபித்துக் கொள்ள, அனைவரும் உம்மைப் பின்பற்ற உலகபற்றுகளைத் துறந்தவர்களாக வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.ஒப்பற்ற நாயகனே எம் இறைவா! இன்றைய நவீன உலகில் ஒருவரை ஒருவர் அழிக்கும் அளவிற்குப் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகில் நடைபெறும் தீவிரவாதம், இனவாதம், மொழிப் போன்றவற்றில் தங்களையே ஈடுபடுத்திக் கொள்ளும் நவீன உலகில், மனித மாண்புகள் நசுக்கப்படும் இச்சூழலில் “எகிப்தில் படும் வேதனைகளை நான் கண்டேன்” என்று நீர் இஸ்ரயேல் மக்களை மீட்டது போல வேதனையில் துன்புறும் மக்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்கிடத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர், இளம் பெண்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 அன்புத் தந்தையே எம் இறைவா! உலகில் ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடுகளைக் களைந்துச் செல்வம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு ஏழைகளின் வாழ்வு வளம் பெற உதவிப் புரியவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் அனைத்து மாந்தருக்கும் சாதி, மத வேறுபாடுகள் களைந்துத் தன்னலமற்றவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
www.anbinmadal.org


Print Friendly and PDF

4 comments:

  1. Responsorial psalm in the form of music is so great. Hats off to you.

    ReplyDelete
  2. Pls share the introduction and prayers of the faithfull for 7th August.pls

    ReplyDelete
    Replies
    1. Pls ,share the prayers of the faithfull and the introduction atleast this morning.we are fully depending on you.it has to be distributed among the students for practise and preparation.

      Delete