ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு 10/07/2022
இன்றைய வாசகங்கள்:-
இணைச்சட்ட நூல் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37
திருப்பலி முன்னுரை:-
பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்! இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு மிக அருகில் உள்ள இறைவன், அயலான் இவர்களை உணர்ந்துக் கொண்டு நிலைவாழ்வு எவ்வாறு நம்மில் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றிய நமக்கு எடுத்துரைக்கின்றன.
அன்பின் எதிர்பதம் வெறுப்பு அல்ல, "அக்கறையின்மை": ஒரு தேவையான விடயத்தை ஒதுக்கி தள்ளுதல், ஒரு துன்பத்திலிருந்து விடுபட, நாம் ஏதாவது செய்ய வேண்டிய நேரத்தில், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது, அக்கறையோடு இல்லாமல் இருப்பது தான் அன்பின் எதிர் செயல்கள் ஆகும். நாம் கடவுளை நமது முழு உள்ளத்தோடும், நமது முழு ஆற்றலோடும் அன்பு செய்தோமானால், தாமாகவே மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவர்கள் புதியவர்கள் ஆக இருந்தாலும், அல்லது நாம் நமக்கு பிடிக்க தேவையில்லை என்று இருந்தாலும், அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும்.
திருச்சட்ட அறிஞர் இயேசுவை சோதிக்கும் நோக்கில் 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டக் கேள்வியின் மூலம் நமக்கு வெகு அருகாமையிலுள்ள அயலானை அடையாளம் காட்டுகிறார். இதன் மூலம் மூன்று வித அன்பைப் பதிவுச் செய்கிறார் ஆண்டவரை, அடுத்தவரை, என்னை - இதே வரிசையில் என் வாழ்வில் இருக்க வேண்டும் அந்த அன்பு. இந்த அன்பு நம்மில் நிறைவாய் இருந்தால் நிலைவாழ்வு நமக்கு வெகு அருகிலே! என்ற எண்ணங்களைத் தாங்கியவர்களாய் முழு 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' இத்திருப்பலியில் பங்குக்கொள்வோம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...
வாசக முன்னுரை:-
முதல் வாசக முன்னுரை:-
எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றபின், வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி, இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே “ஆண்டவர் மீது அன்புகூர்வாயாக!” என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் போது, கட்டளை என்பது “புரியாததோ” அல்லது “வெகு தொலைவில் இருப்பதோ,” “விண்ணிலோ” அல்லது “கடலுக்கு அப்பாலோ” இருப்பது அல்ல, மாறாக, “உனக்கு மிக அருகில்,” “உன் வாயில்,” “உன் இதயத்தில்” இருக்கிறது என்கிறார். ஆக, ஒருவர் தன் உள்ளத்திலிருந்தே இந்தக் கட்டளையை உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடியும். ஒருவரின் உள்ளுறைந்து கிடப்பதே இறைவனின் கட்டளை. இணைச்சட்ட நூலிருந்து வரும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக!
திபா. 69: 13,16,29-30,35,36
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
எளியோன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி
கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:-
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து தொடக்கமில்லாதவர், படைப்பனைத்தையும் முந்தியவர் என்று சொல்லும் திருத்தூதர் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவே திருச்சபையின் தலை' என்கிறார். ஆக, தூரமாக இருந்த ஒருவர் இன்று திருச்சபை என்னும் உடலின் தலையாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளார். கிறிஸ்துவில் நடந்தேறிய இந்தநெருக்கத்தை, 'ஒப்புரவாதல்' என்ற இறையியல் கருத்துகள் வழியாக முன்வைக்கிறார் திருத்தூதர் பவுல். விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் ஒன்றையொன்று கிறிஸ்துவில் கைகோர்த்து நிற்கின்றன என்று விவரிக்கும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.
நம்பிக்கயாளரின் மன்றாட்டுகள்:-
1.மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டாற்றுவதற்கே என்று கூறிய எம் இறைவா, இன்றைய காலக்கட்டத்தில் திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறைவார்த்தையின் ஒளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதன் மூலம் தங்களை அயலானைக் கண்டுகொண்டு உணர்ந்து அவர்களுக்குத் தொண்டாற்றத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற எம் இறைவா இன்று உலகில் நிலவும், தீவிரவாதம், மனிதநேயமற்ற, செயல்கள், இனக்கலவரங்கள், சாதி, மதப் பேதமின்றி அனைத்து மாந்தர்க்கும் இப்புவிச் சொந்தம் என்ற பரந்த மனநிலையை அளித்து இவர்கள் அனைவரும் உண்மையான மனமாற்றமடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ஏழைகளுக்கு இறங்குகிறவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்று இறைவார்த்தைக்கு ஏற்ப, ஏழை, பணக்காரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் உழல்வோருக்கு தேவையான உதவிகளைச் செய்திடவும், ஆதரவற்றோர்க்கு ஆதரவளித்திடவும் எல்லோரும், எல்லாம் நிறைவாகப் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உன்னைப் படைத்தவனை உன் வாலிபநாட்களில் நினை என்று கூறிய எம் இறைவா, எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment