Monday, September 19, 2022

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 25/09/2022

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு

Luke: 16:14-31 – Church By The Sea

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

ஆமோஸ் 6:1,3-7
1திமோத்தேயு 6:11-16
லூக்கா 16:19-31

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவின் இனிய நண்பர்களே! நம்பிக்கை வாழ்வில் வெற்றியைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும், இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனம் இல்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு. இறைவன் கொடுத்த செல்வங்களையும், திறமையையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்தாவிடினும் அச்செயல்கள் இறைவனுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. இதனை வலியுறுத்தும் செல்வந்தர், இலாசர் உவமையே இன்றைய நற்செய்தி வாசகமாகும்.
ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள நம்பிக்கை வாழ்வில் போராட்டம் நடத்திட திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.
பொருளாசையிலிருந்து விலகிச் செல்லவும், இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றை நாடி நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், நாம் பெற்ற செல்வங்களையும் திறமைகளையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்திடவும், இயேசுகிறிஸ்துவைப் போல் நம்பிக்கையின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வர இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம். பேரின்பம் பெற்றிடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

பழைய ஏற்பாட்டின் காலத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாகக் கடவுள் கடின உள்ளத்தைக் கொண்ட இஸ்ரயேல் மக்களின் மேல் சினம் கொள்ளுகிறார். உண்டு கொழுத்து ஆடம்பரத்திலும், சொகுசான வாழ்விலும் திளைத்துப் போன மாந்தர்களை மனம் மாற, அவர்களுக்கு நேரப்போகும் அவலங்களையும் தண்டனையையும் எடுத்துக் கூறியுள்ளார். இந்நிலை மாற இறைவனின் அழைப்பை எடுத்துரைக்கும்இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது.  யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றை விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்களா? நம்மை நாம் சோதிக்க திருத்தூதர் பவுல் அழைக்கின்றார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர் என்று போற்றி புகழ்ந்திடும் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைஇரக்கத்தின் சாயலாக இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மகிழ்ச்சியும், எம்புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! எம்மை உம் இறையரசில் செல்வந்தராய் மாற்றிடும், உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, தீமையை வெறுத்து நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும், அதனால் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற்றவும், நிலைவாழ்வில் இடம் பெறவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச் செவிசாய்ப்பவரே, எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து அதற்கேற்ப எம்பங்கு நிகழ்வுகளில் பங்கேற்று உம்மை மகிமைப்படுத்தவும், எங்களைச் சுற்றியுள்ளவர்களின் துன்பதுயரவேளைகளில் சொல்லாலும், பொருள் உதவியாலும் இவர்களை ஆற்றுப்படுத்தும் நல்ல இதயங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் இறைவா! எம்நாட்டில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களால் ஏற்படும் குழப்பங்கள், மனக்கசப்புகள், பொருளாதார இழப்புகள் மற்றும் உயிர் இழப்புகள் ஆகியவற்றால் பரிதவிக்கும் மக்களுக்காய் உம்மை இறைஞ்சுகிறோம். அவர்களுக்குத் தேற்றுதலும் ஆற்றுதலுமாய் இருந்து நிம்மதியான, மனநிறைவான, அமைதியான வாழ்க்கை வாழவும், மக்களை வழி நடத்தும் எம் அரசியல் தலைவர்கள் அனைத்தையும் உணர்ந்துச் சமத்துவச் சமூதாயத்தை உருவாக்க அருள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! அனைத்துப் அருள்பணியாளர்களும் தங்களுக்குரிய மதிப்பையும், உரிமைகள் பாதுகாப்பையும் பெறும்படியாகவும், பணிவாய்ப்பு தேடுவோர் பொது நன்மைக்குத் தங்களது பங்களிப்பை வழங்கும் வாய்ப்புப் பெறும்படியாகவும் வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 comments:

  1. இறையாண்மைக்கு வழி நடத்திச் செல்லும் உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete