Tuesday, September 27, 2022

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 02/10/2022

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு

Sunday Scriptures Reflection for Sunday, October 6, 2013

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

அபாக்கூக்கு 1:2-3, 2:2-4
 2திமோத்தேயு 1:6-8,13-14
 லூக்கா 17:5-10

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நம்பிக்கை தான் வாழக்கை! இறைஇயேசுவின் மீதுள்ள நம்பிக்கை தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை. இந்த நம்பிக்கை -விசுவாசம் இவற்றைப் பற்றியே இன்றைய வாசங்கள் அமைந்துள்ளன.
இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மைப் பற்றியே பேசுகிறது. தன் சமகாலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். இந்த இறைவாக்கின் இரண்டாம் பகுதியைத்தான் தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இந்த இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
சீடர்கள் 'இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!' என இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இயேசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. உள்ளதே போதும் - இதைக் கொண்டே நீங்கள் அரிய பெரிய காரியங்கள் செய்யலாம் என்கிறார். தாழ்ச்சி, மன்னிப்பு என வாழ்வியல் பாடங்களை வழங்கும் இயேசு அவற்றின் ஒரு பகுதியாக நம்பிக்கைப் பற்றியும் சொல்கின்றார். இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும், நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்றக் கவலைகள் மறைந்து விடுகின்றன என்பதை மனதில் கொண்டு. இயேசுவின் சீடர்களாய் இத்திருப்பலியில் இணைந்து செபித்திடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகம்  நம்பிக்கையின் மேன்மை பற்றியே பேசுகிறது. அபக்கூக்கு அவர்களின் காலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள்.  இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;  நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.   நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;  புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.  அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;  நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் ”இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும்” என்பதைத் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார். இதே நம்பிக்கையின் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்: 'கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு...' திமோத்தேயுவின் வாழ்வு அனைத்திற்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது நம்பிக்கை என்ற ஒன்றே என்று அறிவுறுத்தும் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் எம்திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும் அனைத்து திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள், துறவியர் ஆகிய அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்க பணி புரியவும், உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவனே எம் இறைவா! எம்நாட்டில் நிலவும் கொலை, வன்முறை, தீவிரவாதம், பாலியல் வன்முறைகள், இனக்கலவரம், சாதி வேறுபாடு, தீண்டாமை அவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கும் எம் உடன்பிறவா சகோதர சகோதரிகள், முதியோர் ஆகிய அனைவரும் மீதும் உம் கருணையின் பார்வையைப் பொழிந்து நிம்மதியோடும், சமாதானத்தோடும் வாழ வழிவகைச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சமூக மாற்றத்தின் நாயகனே எம் இறைவா! நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.   

5.எம்குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய  அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment