Tuesday, October 4, 2022

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 09/10/2022

 பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு

                                   Reflection on Luke 17:11-19 | New Life Narrabri

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


2அரசர்கள் 6:14-17
2திமோத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாடத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் எல்லாப் பெயர்களுக்கும் மேலான இறைமகன் இயேசுவின் பெயரால் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
சிரியாஅரசனின் படைத்தலைவனான நாமானின் நம்பிக்கை அவரது நோயிலிருந்து விடுதலைக் கொடுத்தது. இஸ்ரயேலரின் கடவுள் யாவே தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை என்று அறிக்கையிடுகிறார். இயேசுவோடு நாம் இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்திருந்தால் அவரோடு ஆட்சி செய்வோம் என்று தன் ஆழமாக நம்பிக்கையை உறுதியாகப் பதிவுசெய்கிறார் பவுலடியார்.
இயேசுவின் மீது வைத்த விசுவாசம் தொழுநோயுற்ற சமாரியரின் உடலையும், ஆன்மாவையும் காப்பாற்றியது. அவரது குறைகள் குணப்படுத்தப்பட்டது. சமாரியரான அவர் தன்னை யார் குணப்படுத்தினாரோ அவரைப் பாராட்டினார், நன்றி கூறினார். கடவுளுக்கு அவராலே அவருக்குக் கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும், நன்றியும் நம்மிடமிருந்து வர வேண்டும். இயேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு, நாம் இயேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறோமா? நன்றி மட்டுமே விரும்பும் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறுத் தான் என்ன? சிந்திப்போம்.
இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நன்றியோடு இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, மகிழ்வுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் பல்லவி
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாவது வாசகத்தில்," இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்” என்பது தனது நற்செய்தியென அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. அன்புத் தந்தையே எம் இறைவா! இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவ சமூகங்களுக்கும், மானிட வாழ்விற்கும், இறைமனித உறவிற்கும் எதிராக நடைபெறும் அனைத்துப் பிரச்சனைகளுக்கு இயேசுகிறிஸ்துவின் மனநிலையோடு எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் பயணம் செய்யத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம்நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலமும் தங்களிடம் உள்ளத்தேவைக்கு அதிகமான அனைத்தையும் ஒருவர் மற்றவர்களுடன் பகிர்ந்து, பிரிவு, மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு சிறந்து விளங்கிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! இன்றைய உலகளவில் நவீன பொருளாதாரச் சீர்கேடுகள், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவர் என்ற வேற்றுமை நிலைக் களைந்து ஒற்றுமையோடு செயல்படவும், ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு என்று, உம் உன்னத மனநிலையோடு ஏழைகளுக்கு இரங்குகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்ற விவிலியசிந்தனையை உணர்ந்து உமது இரக்கம் எமை மீது பொழியப்பட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க, இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய எம் இறைவா! அவரவருக்கு உரியது அவரவருக்குக் கொடுக்கப்பட்டால் இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. இதனை உணர்ந்து எம் இளையோர்கள் இனிவரும் காலங்களில் தங்களின் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புடன் மாறி அமைத்திட தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment