திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 11:1-10
உரோமையர் 15:4-9
மத்தேயு 3:1-12
திருப்பலி முன்னுரை
இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு.
இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் மனமாற்றத்திற்கான அழைப்பை ஏற்றுத் தெய்வத்தின் திருவடியை நோக்கி வந்துள்ள இறைகுலமே வருக. உங்கள் வரவு உங்களுக்கு நலமும் வளமும் தருவதாக.
கிறிஸ்துவின் வருகை நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம். இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ எசாயா இறைவாக்கினர் வேறுவேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் பவுலடியார்.
மனமாற்றத்தை நம்மிடையே விரும்பும் திருமுழுக்கு யோவான் அந்த மனமாற்றத்திற்கேற்றச் செயல்களால் வாழ்ந்துக்காட்டுங்கள் என்று வலியுறுத்துகின்றார். அமைதியையும் உறவையும் நிலைநாட்ட வந்த இயேசுவின் பிறப்பு நம் முறிந்த உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும். நம் குடும்பங்களில் உறவுமுறிவுகளையும், தவறுகளையும் சீர்படுத்த முன்வருவோம். இவ்வாறு நாம் வாழும் இடங்களில் அமைதியையும் அன்பையும் நிலைநாட்டும்போது அங்கே ஆண்டவர் இயேசு பிறக்கின்றார். இவ்வாறு ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்து பயனுள்ள விதத்தில் கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். வாரீர்.
அமைதி |
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா அழைப்பு விடுக்கின்றார். சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும், பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும். எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
அகமகிழ்வோடு ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
திருப்பாடல்72: 1-2, 7-8, 12-13,17
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பதிலுரை
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பதிலுரை
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பதிலுரை
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பதிலுரை
இரண்டாம் வாசக முன்னுரை
எசாயாவின் கனவுகளை நினைவாக்க நீங்கள் கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. எனவே இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் அனைவரும் ஒரு மனத்தினராய்ச் செயல்படுமாறு எடுத்துரைக்கும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று இயேசுவைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லா நிலைகளிலும் உமது அன்பை உணர்ந்தவர்களாய் தந்தை மகன்போல் ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளைஉம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானம், விட்டுகொடுக்கும் நல்ல உள்ளங்கள், உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, உலகமெங்கும் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்காவும், அவைகள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், புலம்பெயர்ந்தோர் மற்றம் குடிபெயர்ந்தோர் மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுப் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எதிர்பார்ப்பின் நமபிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment