Monday, November 7, 2022

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 13/11/2022

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் "ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும்" என்று உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.
 
எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில்  மலாக்கி நூலில் ஆண்டவரின் நாள் வருவதைப் பற்றி முன்னுரைக்கின்றார். இரு கருத்துகளை நம் கண் முன்னே வரைகின்றார். ஒன்று ஆணவக்கார்ர்களுக்கும், கொடுமை செய்வோருக்கும் நிகழபோவதையும், இரண்டு கடவுளை மனவுறுதியுடன் பற்றிக்கொள்பவர்களின் வெற்றியைப் பற்றியும் ஆகும். இந்தச் சிறிய வாசகம் “சரியானப் பாதையில் உறுதியுடன் நடந்தால் வெற்றி நமதே” என்பதை விளக்கிக்கூறுவதை கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல்

 மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
திருப்பாடல் 98: 5-6, 7-8, 9

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.  ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,  பல்லவி

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!  ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்;   பல்லவி

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உழைக்காதவன் உண்ணலாகாது. நாங்கள் உழைப்பது போல் நீங்களும் உழைக்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். பிறர் உழைப்பில் வாழ்வதைக் கண்டிக்கும் அவர் கிறிஸ்துவின் பெயரால் உழைக்க மனமில்லாத அனைவரையும் உழைத்து உண்ணவேண்டுமென்று கட்டளையிடும் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நம் வாழ்வை வளமாக்குவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நீதியின் கதிரவனை எம்மேல் எழச் செய்யும் இறைவா! உம் திருஅவை இயேசு கிறிஸ்துவின் பெயரின் நிமித்தம் எதிர்க்கொள்ளும் எல்லாவிதமான நிந்தனைகளையும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் கடந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், திருப்பணியாளர்கள் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய மன உறுதியையும், ஞானத்தையும் அருள்மாரிப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நாவன்மையையும் ஞானத்தையும் எம்மேல் பொழியும் இறைவா! உங்கள் பங்கில் உள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் தம் சொந்த உழைப்பில் வாழவும், அதில் உண்மையுடனும் நேர்மையுடனும் இருந்து உமது விழுமியங்களை வாழ்வாக்கவும், உழைக்கமுடியாத நிலையிலுள்ளவர்களைப் பேணிக்காக்கவும், மனித மாண்பை நிலைநாட்டவும் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அருட்கொடைவள்ளலே இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் புனிதர்களின் வாழ்விலிருந்து நல்லவற்றை நாங்கள் எங்கள் வாழ்வில் கடைபிடிக்கவும், உத்திரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் விரைவில் ஈடேற்றம் பெற்று உமது புனிதர்களின் கூட்டத்தில் இணைந்து உம்மைப் போற்றிட வேண்டிய அருள் வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்களின் பேரின்பமாகிய எம் இறைவா! எங்கள் அருகில் உள்ள ஏழைகள், துயருறுவோர், தனிமையில் விடப்பட்டோர், நோயாளிகள், அனைவருக்கும் இறைவனின் அன்பையும் பரிவையும் அளிக்கும் அன்புக் கருவியாக எம் இளைய சமுதாயம் மாறிவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment