பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 07-05-2023
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
திருத்தூதர்பணிகள் 6:1-7
1 பேதுரு 2:4-9
யோவான் 14:1-12
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு. ‘நானே உங்களுக்கு எல்லாம்’ என்று இறைமகன் இயேசு ஆணித்தரமாகத் தன் வார்த்தைகள்மூலம் தன் உடனிருப்பைப் பதிவுச் செய்யும் இன்று கிறிஸ்துவின் சீடர்களாய் ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
யோவான் நற்செய்தியில் இயேசு ஏழு முறைத் தன்னைப் பற்றி "நானே..." என்ற வாக்கியங்களைக் கூறியுள்ளார். எனினும் நம் அனைவரின் உள்ளங்களில் ரீங்காரமிடும் மிகவும் பிரபலமான இயேசுவின் வாக்கியமாய் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே..." என்ற வாக்கியம் என்றால் அது மீகையாது. இயேசு தன்னைப் பற்றிக் கூறிய "நானே..." வாக்கியங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால், எல்லாமே எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு கூறிய வார்த்தைகள் என்பதை உணரலாம். தன்னைச் சுற்றிப் போராட்டமும், குழப்பமும் நெருக்கும்போது ஒருவர் 'நான் இப்படிப்பட்டவன்' என்று கூறுவதில் நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இயேசு இன்று அத்தகைய பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறார்.
இது மேமாதம். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பலருக்கு வேலை மாற்றம், இடம் மாற்றம், வீடு மாற்றம், கல்விக்கூட மாற்றம் என்று பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் எழுந்திருக்கலாம். பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில் தெரியும்போது, இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக் காட்ட வேண்டும் என்று நம் வழியும், உண்மையும், வாழ்வும் ஆன உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
திருத்தூதர்கள் இறைபணியிலும், இறைவேண்டலிலும் அதிகமாய் ஈடுபட்டு அதில் உறுதியாய் நிலைத்திருக்க, மற்றப்பணிகளில் ஈடுபடுவது சரியல்ல என்பதை எடுத்துரைக்கும் வகையில் இறைஞானம் நிறைந்த எழுவரை அப்பணியில் ஈடுபடுத்தினர். இதன் மூலம் திருத்தூதர்கள் இறையரசை அறிவிக்கும் பணியைச் செவ்வனே செய்து திரளான மக்களை இயேசுவின் சீடர்களாக்கினர். நாமும் இறைவேண்டலிலும் நற்செய்திப் பணிகளில் சிறந்து விளங்க இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி : ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33:1-2,4-5, 18-19
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகம் உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள் என்று அழைக்கின்றது. அதன் மூலம் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், தூய மக்களினத்தினராகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் ஆக்கப்படுகிறோம். எனவே வியத்தகு ஒளிக்கு அழைத்துவந்தவரின் மேன்மைகளை அறிவிப்பது நம் கடமை என்று வலியுறுத்தும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. எம்மைப் படைத்து ஆளும் எம் இறைவா! எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகி வரும் இவ்வுலகில் உம் திருஅவையின் ஆயனாம் திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற இயேசுவின் வார்த்தைகளைத் தங்கள் உள்ளத்தில் பதித்து உம் உயிருள்ள சாட்சிகளாய் வலம் வரவும், பிறரன்பில் நிலைத்திருந்து நல் வழிகாட்டிகளாய் வாழ்ந்திடத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. மனமாற்றத்தை விரும்பும் எம் அன்புத் தந்தையே இறைவா! எம்குடும்பத்தில் நிகழவிருக்கும் பலவேறு மாற்றங்களான எங்கள் பணிமாற்றம், இடமாற்றம், பாடசாலை மாற்றங்கள், திருமணங்கள் போன்ற மாற்றங்களைச் சந்திக்கத் தூயஆவின் கொடைகளாம் உறுதி, துணிவு, ஞானம் ஆகியவற்றைத் தந்து எங்கள் குடும்பங்கள் மகிழ்வுட பயணிக்கச் சரியான வழியை, சரியான திசையை எமக்குக் காட்ட வேண்டும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எமக்கு நல்வழிக் காட்டும் எம் இறைவா! எம்குடும்பங்களில் பல இளையோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு கூறும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற வார்த்தைகள் அவர்களை நல் வழிக்கு, ஒளிமிக்க, உண்மையான வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.
4. உம் அன்பால் எம்மை ஒன்றிணைக்கும் இறைவா! அனம் பறக்கும் இவ்வெயில் காலத்தில் இவ்வையகமும், நாங்களும் சிந்தைக் குளிர்ந்திட, வறட்சியும் வறுமையும் நீக்கிட, வெயிலின் தாக்கத்தால் துன்புறும் எம்முதியோர், நோயுற்றோர், குழந்தைகள் அனைவரின் நலம் காக்கப்பட எங்களுக்கு உமது இரக்கத்தை அருள்மாரிப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பு நிறை பார்வையாளர்களுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள். கடந்த பத்தாண்டுகள் தொடர்ந்து இந்தச் சேவையைச் செய்திட எமக்கு ஊக்கமளித்த இறைவனுக்கு, உங்கள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகளும், செபங்களும் என்றும்...
எமது பணிகள் தடையின்றி தொடர எம்மை உங்கள் செபத்தில் தாங்கிட அன்புடன் வேண்டுகிறோம்
இறைவனின் அருள் என்றென்றும் இருக்கட்டும்.ஆண்டவருக்கு நன்றி.
ReplyDeleteஉங்களின் இறைவார்த்தைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்களும் செபங்களும்.
ReplyDeleteநன்றி
செபத்துடன் நன்றிகள்!!!
ReplyDelete