Tuesday, May 9, 2023

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 14-05-2023

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 14-05-2023

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 

 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப் போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திரு அவையை வழி நடத்தும் எம்திருத்தந்தை, அவர் வழியாய் மந்தைகளைச் செவ்வனே பராமரித்து வழி நடத்தும் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக மீண்டும் தங்கள் பணிவாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைசமூகத்தை ஆன்மீக வாழ்விற்கு அழைத்துச் செல்லத் தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2.ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரங்களால் மரித்தவர்களை நினைவு கூர்கின்றோம். இன்று அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழவும், அரசியல், மதக்கலவரங்கள் முடிவுக்கு வரவும், அமைதியான வாழ்க்கை மீண்டும் மலரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா! நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா! இந்தக் கல்வி ஆண்டில் எம் இளையோர்களைக் கரம்பிடித்து வழிநடத்தும். தொற்றுநோயின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள குழப்பங்களிலிருந்து காத்து அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிடவும், நவீன உலக மாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்தை பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே எம் இறைவா! புதியதாய் குருத்துவப்பணிகளுக்குத் தங்களை அப்பணியிருக்கும் அருட்பணியாளர்கள் அனைவரையும் குருக்களாய் அருட்பொழிவு செய்து, அவர்களின் மனவுறுதியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்கி, உம் பணியை வளமையாகச் செய்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment