பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 15.10.2023
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 25: 6-10
பிலிப்பியர் 4: 12-14, 19-20
மத்தேயு 22: 1-14
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறுத் திருப்பலி விருந்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
வாழ்வில் நமக்கு வந்துள்ள அழைப்புக்கள், அந்த அழைப்புக்களுடன் நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் எத்தனை, எத்தனை... இந்த அழைப்புக்களையும் வாய்ப்புக்களையும் ஏற்க மறுத்து, நாம் கூறிய சாக்கு போக்குகள் எத்தனை, எத்தனை... இவைகளைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இந்த அழைப்பை ஏற்போமா?
விருந்துண்ண அழைக்கும் இறைவன்/ அழைப்பை ஏற்க மறுக்கும் நாம் / ஆகியவை இன்றைய வாசகங்கள் வழியே நமக்குத் தரப்பட்டுள்ள மையக் கருத்துக்கள். “வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம்” என்று எசாயா குறிப்பிடும் இந்த ஒரு பானத்தை உருவாக்க நேரமும், கவனமும் தேவை. நல்ல சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில் அன்னை மரியா கானாவூர் திருமணத்தின்போது இயேசுவை அணுகிய அந்தச் சம்பவம் நமக்கு நினைவிற்கு வருகிறது அல்லவா!
இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை எத்தனை முறை கொன்று குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றும், இனி வரும் நாட்களிலும் பதில்கள் தேடுவது நமக்கு மீட்பைத் தரும். அதற்காகச் சிறப்பாக இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர் எசாயா இறைவன் தரும் இந்த விருந்தை விவரிக்கும்போது, முதலில் அங்குப் பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து வந்த அடிமை வாழ்வை நினைத்துப் பார்த்தால், இந்தப் பட்டியல் அவர்கள் ஏங்கித் தவித்த ஒரு விடுதலை வாழ்வின் அடையாளங்கள் என்பது புரியும். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு ரொட்டிக்காகப் போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் தரும் ஒரு விருந்தைப் பற்றி விவரிக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 23: 1-3. 3b-4. 5. 6
பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி
2. தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி
3 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி
4 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் பிலிப்பியர்க்கு எழுதிய கடைசி மடலை எழுதி முடிக்கும் முன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைக் கூறுகிறார். வறுமையிலும் வளமையிலும் வாழப் பழகிக் கொள்ள அழைக்கின்றார். இறைஆசீர் கூறி அவர் முடிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு நாம் வாழ்க்கை முறைகளை மாற்றிடுவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! . அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. எங்கள் திருஅவையின் நாயகனே! எம் இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் நீர் தரும் விருந்திற்குத் தகுதியானவர்களாகத் தங்களேயே தயாரித்துக் கொள்ளவும், எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் நிலைமாறாது உமது சாட்சிகளாய் வாழ தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் குடும்பங்களின் நாயகனே! எம் இறைவா! எம்குடும்பங்களில் உள்ள அனைவரும் வறுமையிலும், வளமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும் நேரிய வழியில் நடந்திவும், தன்னலம் துறந்துப் பிறர் நலம் காணும் நல்மனம் படைத்தவராய் வாழவும், என்றும் உமது உன்னதச் சீடர்களாய் உலகெங்கும் வலம் வரவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்
3. எங்கள் வளமையின் நாயகனே! எம் இறைவா! தமிழகம் எங்கும் மக்கள் டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்சுகத்தையும், போதிய மருத்துவ வசதிகள் பெறவும், நாங்கள் அனைவரும் நல்ல சமுதாய உணர்வுடன் சுற்றுசூழலைப் பேணிக்காக்கவும் எங்கள் ஆண்டவரும், மருத்துவருமானக் கிறிஸ்துவின் அருளால் நலமடைய அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பின் நாயகனே! எம் இறைவா! மன்னிப்பதால் மன்னிப்பைப் பெறுகிறோம், அன்புச் செய்வதால் அன்பு செய்யப்படுகிறோம் என்பதனை உணர்ந்து எம் அடுத்திருபவர்களை மன்னிப்பதிலும், நட்புப் பாராட்டுவதிலும் அசிசியாரைப் போல் அன்பின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ்ந்து நிலைவாழ்வைப் பெற்று கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.அமைதியின் இறைவா! இன்றைய காலகட்டத்தில் உலகெங்கும் நிலவும் போர்காலப் பதட்டை தவிர்த்திடும். மக்கள் ஒரே குடும்பமாக இவ்வுலகில் வாழ்ந்திட, அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த வாழ்வு வாழ, உலகநாட்டு தலைவர்களை வழிநடத்தி தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment