Wednesday, October 4, 2023

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 08.10.2023


  பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 08.10.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 5: 1-7
பிலிப்பியர் 4: 6-9
மத்தேயு 21: 33-43

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
"இறையாட்சிக்கு யார் அதிக கனிகளைக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே இறையாட்சிக் கிடைக்கும்" என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் தன் தோட்டத்தை முழுமையாக நம்பிப் பணியாட்களிடம் ஒப்படைப்பது போல இறைவனும் நம்மீது முழுநம்பிக்கை வைத்து இறையரசுப் பணியை ஒப்படைத்துள்ளார். அவர்கள் வேலைச் செய்ய வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதுபோல இறையரசுப் பணியில் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நம் திறமைகளையும் படைப்புத் தன்மைகளையும் வெளிக்கொணர இறைவன் வாய்ப்புக் கொடுக்கிறார். அதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? எனச் சிந்திக்க இயேசு இன்று நம்மை அழைக்கின்றார்.
கடவுள் தன் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். மனிதனோ தனது சுயநலத்தால் பூமியைப் பாழ்படுத்தினான். உறவுகளில் பிளவு ஏற்படுத்தினான். மனிதத்தைச் சிதைத்தான். ஆனாலும் வாழ்வதற்குப் பல வாய்ப்புகள் கொடுத்தார். கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். எனவே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி உறவில் நிலைத்து நன்று வாழவும் நற்கனித் தரும் மனிதர்களாய் வாழ வரமருள வேண்டி இத்திருப்பலியில் இறைவனை மன்றடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களைத் திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடுகிறார் இறைவாக்கினர் எசாயா. எதிர்பார்த்துப் பலனைத் தராமல் கடவுளின் திட்டத்திற்கு எதிராக அநீதியும், இரத்தப்பழியும் விளைந்தது. இஸ்ரயேல் மக்களின் திட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டாலும் கடவுள் அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை மீட்க மெசியாவை அனுப்பினார். கடவுளின் பேரிரக்கத்தை எண்ணி இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.; பல்லவி

பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கூறுவது போல் பயனுள்ளவர்களாய் மாற, உண்மை எதுவோ, நீதி எதுவோ, இனியது எதுவோ எதுவெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ அவற்றை மனதில் கொண்டு நன்றியோடு கூடிய இறைவேண்டல் செய்ய நமக்கு அறிவுத்துகின்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள்

1. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுகள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திருஅவையின் அனைத்து நல்மேய்ப்பர்களுக்கும் தூயஆவியின் கொடைகளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! எம்குடும்பங்களில் உள்ள அனைவரும் வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி வாழவும், சிறப்பாக, ஏழைகள்மீது அக்கறை கொண்டு, அவர்களது நல்வாழ்வுக்காக உழைக்கவும் இவ்வாறு எங்கள் வாழ்வு பிறர்க்கு எடுத்துக்காட்டாக அமையவும் உமதருள் வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! கிறிஸ்துவின் வார்த்தைகளைச் செவிக்கு உணவாக உட்கொண்ட நாங்கள் மேன்மேலும் அவராகவே மாறச் செய்தருளும். எங்கள் வாழ்வில் எல்லாச் சூழ்நிலைகளிலும், சிறப்பாக எங்களது குடும்ப வாழ்க்கையிலும், கிறிஸ்துவின் மனநிலையை நாங்கள் எமதாக்கிக் கொண்டு ஒருவரையொருவர் ஏற்று, ஒன்றிணைந்து உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசுவைப் போன்று எம்நாட்டுத் தலைவர்களும் எம் இளையோர்களும் ஏழை, எளியவர்கள், நோயாளிகள், கைவிடப்பட்டோருக்குத் தாராள உதவி செய்ய முன்வரவும் அவர்களின் வாழ்வாதாரங்கள் உணர்ந்திவும், நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பின் ஊற்றாகிய எம் இறைவா! வடகிழக்கு இந்திய மாநிலத்தில் நடைப்பெறுவரும் வன்முறை தாக்குதலிலிருந்து உம் மக்களைப் பாதுகாத்தருளும். அவர்கள் முழுசுதந்திரம் அனுபவிக்க தேவையான அரசு உதவிகளை எந்தப் பகுபாடுகளின்றி பெற்றிட தேவையான அனைத்தும் அருட்கொடைகளை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF

1 comment: