Saturday, December 9, 2023

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2023

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2023


இன்றைய வாசகங்கள்:

எசாயா 61:1-2அ; 10-11
1 தெச 5:16-24
யோவான் 1:6-8,19-28

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப் போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு திருவழிபாடு நம்மை அழைக்கிறது. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த ஞாயிறை, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம்.


இன்றைய வருகைப் பல்லவியாக ஒலிக்கின்ற இறை வார்த்தைகள் ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மகிழ்வு என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்க இது ஒரு நல்ல தருணம்.


குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்தக் கிறிஸ்மஸ் நேரத்திலும் அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும் ஞாயிறு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.


இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய டார்ச் விளக்கு திருமுழுக்கு யோவான். இந்தத் திருவருகைக் காலத்தில்,  மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். என்பதனை உணர்ந்து இறையருள் வேண்டி மகிழ்ச்சியுடன் இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளை மறந்து வாழ்ந்ததால் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமை வாழ்விலே துன்பப்பட்டுத் துவண்டனர். ஆண்டவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவர்களுக்கு அருள் தரும் ஆண்டை அருளப் போவதாக இறைவாக்கினர் எசாயா ஆறுதல் கூறுகிறார். என் கடவுளால் என் உள்ளம் பூரிப்ப்பும் பெருமகிழ்ச்சியும் அடையும்  என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.
(லூக் 1: 47-48. 49-50. 53-54)

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எப்போதும் மகிழ்ந்திருத்தலும், செபித்தலும்,  இறைவனுக்கு நன்றி கூறுதலும், தீமையை விலக்குதலும் நமது பண்பாக விளங்கவேண்டுமென்று அழைக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது நமது உள்ளமும் ஆன்மாவும், உடலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அவர் விடுக்கும் அழைப்பை ஏற்று மனமாற மகிழ்வுடன் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார் அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.அன்பின் இறைவா! திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்கப் பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2 எங்களைக் காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா!  எங்கள் குடும்பங்களில்  இறைவாக்கினர் எசாயா, திருமுழுக்கு யோவான், திருத்தூதர் பேதுரு போல ஆண்டவரின் வருகையை நினைத்து அகமகிழவும், அவரது உடன் இருப்பை  எண்ணிக் களிகூறவும், அகமகிழ்ந்து, இத்திருவருகைக் காலத்தை நன்கு பயன்படுத்த அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா! மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம் காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாகச் சான்ற பகிரவும், தேவையில் உள்ளோரை அணுகி அன்பு பாராட்டவும் நல்மனதைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment