திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு - 24-12-2023
இன்றைய வாசகங்கள்:
2 சாமு. 7:1-5,8-12,14,16
உரோமையர் 16:25-27
லூக்கா 1:26-38
திருப்பலி முன்னுரை:
இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
தேடல்கள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அழைப்பை ஏற்று திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் விடைப் பெற்றிட வந்துள்ள இறைக்குலமே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.
யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு, எந்நேரத்திலும் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்தக் கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற தாவீது மன்னனின் எண்ணம் நிறைவேறவில்லை. அது அவருக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது. அப்போது கடவுள் தமது ஊழியன் நாத்தன் வழியாகப் பேசுகிறார். “நானே உன் வீட்டைக் கட்டுவேன். உன் வழித்தோன்றலின் அரசை நான் நிலை நாட்டுவேன். உனது அரசு என்றென்றும் நிலைத்திருக்கும்” என்ற கூறுவதை முதல் வாசகம் காட்டுகிறது. மன்னர் தாவீதின் வீட்டைத் தானே கட்டியெழுப்பப் போவதாக இறைவனே வாக்களிக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 3-4. 26,28
பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
ஆண்டவரின்
பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத்
தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும்
நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது.
-பல்லவி
நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை
செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: உன்
வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை
தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. -பல்லவி
`நீரே என் தந்தை, என்
இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். அவன்மீது கொண்ட
பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட
உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தொன்று தொட்டு மறைந்திருந்த உண்மைகள் இறைவாக்கினர் வழியாக இப்பொழுது புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. என்று கடவுளின் மாட்சியை எடுத்துரைக்கும் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் அன்பின் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் அன்பு திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் அன்பின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் நேர்மையான வாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் பெற்று வரும் விழாக்காலங்களில் இறைமகன் இயேசுவின் அன்பில் மகிழ்ந்திட உம் அருள் வேண்டுமென்று வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4.உன்னைப் படைத்தவரை உன் இளமையில் நினைத்துக்கொள் என்று சொன்ன எம் இறைவா! இளைஞர்கள் இவ்விழாக் காலத்தில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் பரிவன்பை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா! தமிழகம் எங்கும் நல்ல மழையைக் கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதரச் சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment