ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் வாரம்
இன்றைய வாசகங்கள்
விடுதலைப் பயண நூல் 16: 2-4,12-15
எபேசியர் 4: 17, 20-24
யோவான் 6: 24-35
திருப்பலி முன்னுரை:
இறைமகன் இயேசுவிடம் ஆன்மீக பசிப்போக்கிட வந்துள்ள அன்பர்களே! அவரின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறான இன்று தொடுக்கும் கேள்வி,
'உங்களுக்கு அப்பா கொடுக்கிற அப்பம் வேண்டுமா? அல்லது அப்பம் கொடுக்கிற அப்பா வேண்டுமா?' உங்களின் தேடல் அப்பமா? அல்லது அப்பாவா? எனக் கேட்கிறார் இயேசு. நம் பதில் என்னவாக இருக்கும்?
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு!
நமது ஆசைகளையும், பேராசை வெறிகளையும் நீக்கிவிட்டு, நமது தேவைகளையும், அடுத்தவர் தேவைகளையும் நிறைவேற்றும் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கனவு காண்பதில் தவறில்லையே... இந்தக் கனவை நமக்குள் விதைப்பவைகளே இன்றைய வாசகங்கள்.
ஆம் இறைமகன் இயேசுவின் இவ்வார்த்தைகளை மனதின் ஆழத்தில் பதிவு செய்து, பேராசை வெறிகளைக் களைந்து, நம்முடைய, பிறருடைய தேவைகளை நிறைவேற்றும் மனதை வளர்த்துக்கொள்ளவும், தேவைகளைத் தேவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்த ஞாயிறு வழிபாட்டில் உருக்கமாக மன்றாடுவோம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
விடுதலைப்பயணநூலிருந்து வரும் முதல் வாசகத்தில் பாலைநிலத்தில் பசியின் கொடுமையால் வருந்தி இஸ்ரயேல் மக்கள் யோவே கடவுளுக்கு எதிராக முறுமுறுத்தனர். அழைத்து வந்தவர் கருணையோடு அவர்களுக்கு உணவாக மன்னாவை அளித்தார். பேராசைக் கொள்ளாமல் தேவையை மட்டும் பூர்த்திச் செய்துகொள்ளுங்கள் என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 78: 3,4. 23-24. 25,54
பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.
1. நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம்மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம். வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். -பல்லவி
2. ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். -பல்லவி
3. வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
திருத்தூதர் புவுலடியார் எபேசிய மக்களிடம் புறவினத்தாரைப் போல் தங்கள் எண்ணங்களுக்கேற்ப வாழாமல், கடவுள் சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை நாம் அணிந்து கொள்ள அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1.அனைத்தையும் படைத்தவரே எம் இறைவா! பேராசை வெறிகளைக் களைந்து, தேவைகளை நிறைவேற்றும் மனதை வளர்த்துக்கொள்ளவும், அத்தகைய மனநிலையால், 'வாழத் தகுந்த பூமிளை' நாங்கள் உருவாக்கி, நமது அடுத்தத் தலைமுறைக்கு அதனை, அழகான ஓர் உறைவிடமாக விட்டுச் செல்லவும், இறைவன் நமக்கு நல்வழிக் காட்ட வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.எம்பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திடவும், உம் அன்பின் ஒளியில் அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3.என்றும் வழிநடத்தும் தந்தையே! இறைவா!எம் திருஅவையின் அனைத்தும் வெறும் நிறுவனங்களாக அல்லாமல் உம் அன்புப் பணியினை அகில உலகின் எல்லா மாந்தர்க்கும், வேறுபாடின்றிப் பணியாற்றிடவும், துணைபுரியும் உதவிக்கரமாக நின்று செயல்படத் தேவையான எளிய மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.எம்மை அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் எண்ணங்கள்போல் வாழாமல் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதர்களாக உண்மையான நீதியிலும், தூய்மையிலும் சிறப்புடன் வாழ்ந்திடத் தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
5.நம்பிக்கைக் கொள்வோரைச் சூழ்ந்து நிற்கும் பேரன்பு தெய்வமே! எம்நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி, எம்மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.