Monday, August 5, 2024

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் வாரம்

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் வாரம்



இன்றைய வாசகங்கள்

1 அரசர்கள் 19: 4-8
எபேசியர் 4: 30 - 5: 2
யோவான் 6: 41-51

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 19ம் ஞாயிறு நற்கருணை விருந்தில் பங்கெடுக்க வந்துள்ள இறை இயேசுவின் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இயேசுவின் திருப்பெயரால் இனிய நல்வாழ்த்துகள்.

இறைவன்‌ தம்‌ திருவுளத்தை நிறைவேற்றச்‌ சிலரைக்‌ கருவியாகத்‌ தேர்ந்தெடுப்பதோடு அவர்களைப்‌ பாதுகாக்கவும்‌ செய்கிறார்‌.இறைவனிடம்‌ நம்பிக்கைக்‌ கொண்டவரும்‌, இறைவனால்‌ தேர்ந்து கொள்ளப்பட்டவருமான இறைவாக்கினர்‌ எலியா பாலைநிலத்தில்‌ பசியால்‌ வாடி இறக்கத்‌ தயாரானபோது வானதூதர்மூலம் உணவும்‌ நீரும்‌ அளித்து அவரைக் காத்தார்.  

பிறரன்புக்கு எதிராக உள்ள வெறுப்பு, சினம்‌, பழிச்சொல்‌ ஆகியவை தூய ஆவியாருக்குத்‌ துயரம்‌ வருவிருக்கும்‌. இவற்றை விட்டொழித்துக்‌ கிறிஸ்துவின்‌ பிள்ளைகளாக மன்னிக்கும்‌ மனப்பான்மையுடன்‌ வாழவும்‌ இறை இயேசு தம்‌ அன்பின்‌ சின்னமாகத்‌ தம்மையே நமக்காகப்‌ பலியாக்கிய நற்கருணை வடிவில்‌ நம்மைச் சந்திக்க வருகிறார்‌.

அழியா ஆன்மாவுக்காக ஆண்டவர்‌ இயேசு தரும்‌ வானக உணவிற்கு முக்கியத்துவம்‌ கொடுத்து, தக்க தகுதியுடன்‌ அவ்வுணவை உண்டு என்றுமே பசியோ தாகமோயின்றி விண்ணகவாசிகளைப்‌ போல நாமும்‌ வாழ்ந்திட வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ தொடர்ந்து மன்றாடுவோம்‌.  

முதல்‌ வாசக முன்னுரை :   

பெற்ற தாய்‌ தன்‌ குழந்தைக்கு உணவளிக்க மறந்தாலும்‌ ஒரு நொடிகூட நம்மை மறவாது காப்பவர்தாம்‌ இறைவன்‌. இதனை, பாலைநிலத்தில்‌ பசியால்‌ வாடிச் சாவின் விளிம்பைத்‌ தொட்ட இறைவாக்கினர்‌ எலியாவுக்கு வானதூதர்மூலம் உணவளித்துக்‌ காக்கும்‌ இறைவனின்‌ கருணையை எடுத்தியம்பும்‌ முதல்‌ வாசகத்திற்குச் செவிகொடுப்போம்‌.  

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1. ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
2. என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி
3. அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி
4. ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

நம்‌ அயலார்‌ செய்யும்‌ குற்றங்களை மன்னிக்கவும்‌. சினம்‌, பழிவாங்குதல்‌, வெறுப்பு ஆகியவற்றை விட்டொழித்துத்‌ தூய ஆவியாரை மகிழ்விக்கவும்‌, இறை இயேசுவின்‌ அன்புப்‌ பிள்ளைகளாய்‌ வாழவும்‌ அறிவுறுத்துகின்ற புனித பவுலடியாரின்‌ இரண்டாம்‌ வாசக வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.  

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. தோழமையின் நாயகனே எம் இறைவா! எம்திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு அவருடைய வார்த்தையின்படி நடந்து அவருடைய திருவுடலை உண்டு நிலைவாழ்வு பெற்றுக்கொள்ளத் தேவையான இறைப்பற்றுதலும், ஆவியாரின் துண்டுதலும் பெற வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கிச் சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், ஒவ்வொரு குடும்பமும் மனுகுலத்தின் புதையல் என்பதை உணர்ந்து, உம் பணியாளராக வாழ வேண்டிய வரங்களைத் தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உம் பேரன்பால் உறவுகளைப் பேணிக்காக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்துப் பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றிக் கவனம் செலுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

5. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment