Wednesday, August 28, 2024

ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு


 ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

இணைச்சட்டம் 4:1-2, 6-82.  
யாக்கோபு 1:17-18,21-22, 273.   
மாற்கு 7:1-8, 14-15, 21-23

திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களே!  இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.
கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றைச் சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும், தேவையிலிருப்போருக்கு உதவிடவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்தில் உள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.  சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்கும், அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும், உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்தபோது மோசே கடவுளின் சட்டங்களைத் தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்குக் கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே  மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
1. மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி
2. தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி
3. தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! " தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் " அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா! எம்திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும், ஞானத்திலும், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா! இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள், கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கான பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் ஆதரிக்கும் எம் இறைவா! இயற்கைப் பேரிடர் காரணமாக அல்லப்படும் எம்மக்களை உம் கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்கு ஆறுதலும், தேற்றவும் தர, நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப் பெற்று, புதுவாழ்வு தொடங்க, நிறைவாய் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment