Wednesday, December 25, 2024

திருக்குடும்பத் திருவிழா - மூன்றாம் ஆண்டு

திருக்குடும்பத் திருவிழா
Invoke the Holy Family in Your Home| National Catholic Register

இன்றைய வாசகங்கள்

சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2,21-24
லூக்கா 2:41-52

முன்னுரை:

இறைஇயேசுவில் அன்பு மாந்தர்களே!
நமது குடும்பங்கள் நாளும் நம்பிக்கையில் வளர இன்று திருஅவை திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறது. இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் நமக்குத் தரும் செய்தி நீங்கள் எங்களைப் போல உங்களை அன்பு செய்யும் கடவுள்மீது முழு நம்பிக்கை வையுங்கள்! வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்பது தான்.
குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.
குடும்பம் என்பது அன்பு உள்ளங்களின் சங்கமம். ஆழமான உறவுகளின் அர்ப்பணம். சமுதாயக் கூட்டமைப்பின் அடிப்படையான ஓர் அங்கம். இது இறைவனால் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீக அமைப்பு. அதன் மையம் இயேசுகிறிஸ்துவே. பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பதுதான் குடும்பம். இதற்கு அடிப்படை தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரிய பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத்திருக்குடும்பப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகம் ஒன்று சாமுவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னா ஆண்டவரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டதன் மகன் சாமுவேலை இறைவனுக்கு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கின்றார். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தன் மகனுடன் காணிக்கைகளோடு இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்தார் என்ற இந்த நிகழ்வை விவரிக்கும் இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4)
பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.

1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. பல்லவி

 4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. பல்லவி

8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்!
9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்குச் சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப் போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், துன்பங்களினால் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment