புத்தாண்டு சிறப்புத் திருப்பலி
அன்னை மரியாள் -இறைவனின் தாய்
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1. எண்ணிக்கை6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21
திருப்பலி முன்னுரை
அன்பு இறைமக்களே!
புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.
பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாளென மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.
ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!
இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்:
நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இறையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!
ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நிறை அமைதியைப் பெறுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!
வாசக முன்னுரை
முதல் வாசகம்
புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. ஒன்று கடவுளை ஆண்டவர் என்று திரும்பத் திரும்ப அழைப்பதால் வரும் ஆசீர்! இரண்டு அவரது முகத்தின் திருவுருவின் காட்சி ஓர் ஆசீர்! மூன்று நிறைஒளி ஆசீர்! அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில் அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.
இரண்டாம் வாசகம்
கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்புச் செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றி கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1-2, 4, 5,7
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா,
அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம்
மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம்
பேசியுள்ளார். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம்தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.
2.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் நிறைந்திருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளுமின்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.
3.உம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
4. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துப் படைப்பின் மேன்மை உணர்ந்து இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
5 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்முறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட் தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.
6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...
🙏
ReplyDelete