Tuesday, February 11, 2025

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 17: 5-8
1 கொரிந்தியர் 15: 12,16-20
லூக்கா 6: 17,20-26

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஆறாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். ஏழைகள் உயர்த்திப் பேசப்படுவதையும், செல்வர்கள் கடுமையாக வார்த்தைகளால் இடித்துரைக்கப்படுவதையும் விவிலியத்தில் பல இடங்களில் காண முடிகிறது.
கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை. இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு. 

இவ்வுலகுக் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்றச் செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் உணர முடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது. வலியோரை அல்ல எளியோரையே இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இவர்கள் நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாமும் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்

வாசகமுன்னுரை:

முதல்‌ வாசக முன்னுரை:

இன்றைய முதல்‌ வாசகமானது இறைவாக்கினர்‌ எரேமியா நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம், புல்லென மடிந்து போகும்‌ மனிதரில்‌ நம்பிக்கை வைக்காமல்‌ ஆண்டவரில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு, நீர்‌ அருகில்‌ நடப்பட்ட மரம்போல் பசுமையாக வளர்ந்து கனி கொடுக்க அழைக்கும்‌ வார்த்தைகளைக்‌ கேட்டு ஆண்டவரில்‌ நம்பிக்கைக்‌ கொண்டு வாழும்‌ வரம்‌ கேட்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை:

இயேசு கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, இறந்த அனைவரும்‌ உயிருடன்‌ எழுப்பப்படுவதன்‌ முன்‌ அடையாளம்‌. இதுவே நம்‌ நம்பிக்கையும்‌. இயேசுவின்‌ உயிர்ப்பில்‌ நம்பிக்கை கொண்டு அவர்‌ வழியாக இறப்புக்கு பின்னும்‌ வாழ்வு உண்டு என்ற உண்மையில்‌ அசைக்க முடியாத நம்பிக்க கெண்டவர்களாய்‌ வாழப் புனித பவுல்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகத்திலிகுந்து வாசிக்கப்படும்‌ இரண்டாம்‌ வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 6: 23அ
அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. யூபிலி ஆண்டைக் கொண்டாடும் திருஅவையானது, இன்றைய திருப்பாடல் வரிகளுக்கேற்ப, நீரோடையோரம் நடப்பட்ட மரம்போலவும், பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் மரம்போல் செழிக்கவும், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவருமே, வற்றாத எதிர்நோக்குடன் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் மேகங்களும், கலவரச் சூழல்களும், பொருளாதாரப் பேதங்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிற நாங்கள், ‘ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்’ என்கிற இறைவாக்கினர் எரேமியா கூற்றுப்படி, உம்மையே நம்பி வேண்டுகிறோம்; பரந்துபட்ட இவ்வுலகிலும், எம்பாரதத் தேசத்திலும், அமைதியும் நீதியும் செழித்தோங்கி, அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். இஃது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது” என, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் முன்னிறுத்தும் நம்பிக்கையை எமதாக்கி, எம்குடும்பங்களில் மரித்த அனைவருக்காகவும், இவ்வுலகைவிட்டு மறைந்துபோன அத்தனை ஆண்மக்களுக்காவும் மன்றாடுகிறோம். “விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்” என்கிற நற்செய்தி, அவர்களிலே நிறைவடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இப்போது ஏழைகளாய் இருப்போரும், பட்டினியாய் இருப்போரும், அழுதுகொண்டிருப்போரும் பேறுபெற்றோர் என்கிற நற்செய்தியை, நீர் உரைக்கக்கேட்ட நாங்கள், எங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி இன்பம் பிறக்கும், நோய்கள் நீங்கி நலம் கிட்டும், பசியும், பிணியும், இல்லாமையும், ஏழ்மையும் மறைந்து, நாங்களும், மற்ற எல்லோரும் நிறைவு பெறுவோம் என்கிற எதிர்நோக்குடன் உழைக்கவும், உமை நம்பி வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

>Print Friendly and PDF


No comments:

Post a Comment