தூய ஆவியாரின் பெருவிழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26
திருப்பலி முன்னுரை :
இணைந்து பயணிக்கும் அன்பியமாகத் திரு அவையை வழிநடத்தக்கூடிய பெந்தகோஸ்து பெருவிழா எனச் சிறப்பிக்கத் திருச்சமூகமாய் ஒன்று கூடிய உங்கள் ஒவ்வொருவரையும் பாசத்தோடு வாழ்த்தி வரவேற்கின்றோம். தூய ஆவியாரின் திருவிழாவை அன்னையாம் திரு அவை தனது திரு அவையின் பிறப்பு பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. உடைந்து சிதைந்து கிடந்த திருத்தூதர்களை ஒன்றிணைத்து உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றக்கூடிய கருவிகளாக உருவாக்கியவர் தூய ஆவியாரே.
அடுத்து என்ன செய்யலாம் என்று கலங்கி நின்ற திருத்தூதர்களுக்கு ஆண்டவரைப் பற்றிய நற்செய்தி அகிலமெங்கும் எடுத்துரையுங்கள் என உள்ளொளி தந்து உடனிருந்து வழிநடத்தியவர் தூய ஆவியார்.
தூய ஆவியாரின் துணையோடு இயங்குபவர்கள் கடவுளின் மக்கள் என்பதை உணர்ந்து உண்மை, அன்பு, நீதி, நேர்மை, கனிவு, தாழ்ச்சி என்னும் தூய ஆவியாரின் கனிகளாலும் வரங்களாலும் நிரப்பப்படவும் புதிய கல்வி ஆண்டுத் தொடங்கவிருக்கும் இந்நாள்களில் நமது குழந்தைகள் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கித் தூய ஆவியாரின் துணையோடு சிந்திக்கவும் படிக்கவும் கல்வி ஆண்டின் தொடக்கமுதலே ஞானத்தோடு பாடங்களை உள்வாங்கிக் கொள்ளவும்
இறையருள் வேண்டிக் கல்வாரி பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்…
வாசக முன்னுரை :
முதல் வாசக முன்னுரை :
இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:
1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.
2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன.
இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை நாமும் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 104: 1,24. 29-30. 31,34
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை :
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் கடவுளின் பிள்ளையென அழைக்கப்பட முடியும். எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
********* தொடர் பாடல் பாடல் இசையுடன் *********
தொடர் பாடல்
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.
1. அன்பு இறைவா ! எல்லோரோடும் அமைதியுடன் வாழுங்கள் என்ற மகிழ்வின் செய்தியை நற்செய்தியாக எங்களுக்கு வழங்கக்கூடிய திருத்தந்தை, ஆயாகள், அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார்
செல்லும் இடமெல்லாம் தூய ஆவியாரின் துணையோடு பயணிக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. நாட்டை வழிநடத்தக்கூடிய நாட்டுத் தலைவர்கள் தூய ஆவியாரால் வழங்கக்கூடிய ஞானத்தையும் விவேகத்தையும் கொடையாகக் கொண்டு தூய ஆவியாரின் கனிகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி,
பரிவு என்ற பண்புகளால் தொடர்ந்து வழிநடத்த வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற மொழிந்த அன்பு இறைவா ! திருமுழுக்கின் வழியாக நற்செய்தி பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும் திரு அவையின்
கடமைகளையும் தேவைகளையும் உணர்ந்து இறையன்பிலும் பிறர் அன்பிலும் வளர வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்பு இறைவா! புதிய கல்வி ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கும் எம்பங்கு மாணவ செல்வங்களுக்காகவும் அவர்களை அறிவிலும் ஞானத்திலும் பக்தியிலும் ஒழுக்கத்திலும் வளர்த்தெடுக்கக்கூடிய கடமையை ஏற்றுள்ள எல்லா ஆசிரியர்களுக்காகவும் வேண்டுகின்றோம். இவர்கள் தூய ஆவியாரின் துணையோடு மனிதநேய மாண்புகளில் சிறந்து விளங்கிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment