Tuesday, July 7, 2026

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

 பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23 
மத்தேயு 13: 1-23

திருப்பலி முன்னுரை :-

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "இறைவார்த்தை" என்னும் விதையைப் பற்றியும், அதை ஏற்கும் "இதயம்" என்னும் நிலத்தைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறது. வானிலிருந்து பொழியும் மழையும் பனியும் நிலத்தை நனைக்காமல் திரும்புவதில்லை என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் கூறுகிறார். அதுபோலவே, ஆண்டவரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையும் அவரது திருவுளத்தை நிறைவேற்றாமல் அவரிடம் திரும்புவதில்லை.
நற்செய்தியில், இயேசு விதைப்பவர் உவமையைக் கூறி, நம் இதயம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறது எனச் சிந்திக்க அழைக்கிறார். வழி ஓரமா? பாறை நிலமா? முட்செடி சூழ்ந்த இடமா? அல்லது நூறு மடங்குப் பலன் தரும் நல்ல நிலமா? நாம் உலகக் கவலைகளிலும் செல்வம் என்னும் மாயையிலும் சிக்கி இறைவார்த்தையை நசுக்கிவிடாமல், அதை ஆழமாக ஏற்றுப் பலன் தரும் நல்ல நிலமாக மாறத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை 

முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 10-11)

மழையும் பனியும் நிலத்தை நனைத்து, பயிர்கள் வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும் உண்பவருக்கு உணவையும் தருகின்றன. அதுபோலவே, இறைவனின் திருவாயிலிருந்து வரும் வார்த்தையும் தமக்குரிய பணியைச் செம்மையாக நிறைவேற்றும் என ஆண்டவர் உறுதியளிக்கிறார். இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல் 

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13 
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 18-23)

இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள், இனி நம்மிடம் வெளிப்படப்போகும் மாட்சியோடு ஒப்பிடத்தக்கவை அல்ல என்று புனித பவுல் கூறுகிறார். படைப்பு அனைத்தும் அழிவுக்கு உட்பட்டிருந்தாலும், கடவுளின் பிள்ளைகளாகிய நாமும், ஒட்டுமொத்தப் படைப்பும் மீட்புக்காகவும் விடுதலையாகவும் ஏங்கித் தவிப்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் பெற்றுக்கொள்ளும் எதிர்நோக்கோடு பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றுரைத்த இறைவா, போர்கள் இல்லாத உலகிற்கான ஏக்கக்குரல்களையும், ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்துக்கான  பெரு-மூச்சுகளையும், வன்கொடுமை இல்லாத மாநிலத்துக்கான கதறல்களையும், கேட்கச் செவியுள்ளவர்களாக, இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களை மாற்றி, அனைவருக்குமான நல்லாட்சியை வழங்க அவர்களுக்கு நீர் தாமே ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அதீத அறிவியல் வளர்ச்சி, எந்திரமயமாக்கல், வணிகவயமாக்கல், நகரமயமாக்கல், கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம், நெகிழிப்பயன்பாடு போன்ற செயலகளால் “படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது” என்கிற பவுலடியாரின் கூற்று, இந்த நவீன உலகின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.  மாந்தர் அனைவரும் சமூகப் பொறுப்புடனும், சுற்றுச்சூழலைப் பேணுகிற அக்கறையுடனும் செயல்பட்டு, எங்கள் எதிர்கால சந்ததியரும் வாழத் தகுந்த உலகை விட்டுச்செல்ல   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்கிற வான்மழை தவறாது பெய்யவும், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய பிரமாநில தடுப்பு அணைத் திட்டங்கள் தடுக்கப்படவும், வேளாண் பெருமக்கள் வாழ்வு சிறக்க வேண்டுமென்றும், ஏனைய தொழிலாளர்கள், உழைக்கும் வர்கத்தினர், விளிம்பு நிலையில் வாழ்வோர் ஆகிய அனைவருமே நிறை வாழ்வைப் பெற   வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இக்காலத்தில் படுகிற துன்பங்கள் எதிர்காலத்தில் வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என்பதை உணர்ந்து, துன்பதுயரங்களைக் கண்டு துவண்டுபோகாமல், துணிவுடன் செயலாற்றவும், பலன் தராத பாறை நிலமாகவோ, வழியோரமாகவோ, முட்புதராகவோ எங்கள் வாழ்க்கையை வீணாக்காமல், நூறு மடங்கு பலன்தருகிற நல்ல நிலமாக நாங்கள் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment