Monday, June 29, 2026

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

 பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

மத்தேயு 11:29-30 (TAOVBSI) - நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இரு - Bible App

இன்றைய வாசகங்கள்

செக்கரியா 9: 9-10
உரோமையர் 8: 9, 11-13
மத்தேயு 11: 25-30

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகக் கல்வியிலோ அல்லது அறிவிலோ தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொள்பவர்களுக்கு இறை இரகசியங்கள் மறைக்கப்படுகின்றன; ஆனால், எளிய உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கு அவை வெளிப்படுத்தப்படுகின்றன.

இறைவன் ஒரு போர் வீரனாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் அமைதியான அரசராக வருகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நாம் ஊனியல்புக்கு அடிமையாகாமல் ஆவியின் இயல்புக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். நம் வாழ்வின் சுமைகளை இயேசுவின் பாதத்தில் இறக்கி வைக்கவும், அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (செக்கரியா 9: 9-10)

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அரசர், போர் குதிரையின் மேல் ஏறி வரும் அதிகாரியாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் நீதியுள்ள, எளிமையான அரசராக வருவார் என்று செக்கரியா இறைவாக்கினர் முன்னறிவிக்கிறார். அவர் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுவார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 9, 11-13)

கிறிஸ்தவர்களாகிய நாம் ஊனியல்புக்கு (உடல் இச்சைகளுக்கு) அடிமைப்படாமல், இறைவனின் ஆவியால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகிறோம். இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய ஆவியானவர் நம்மிலும் குடிகொண்டிருக்கிறார் என்றும், அந்த ஆவியின் வழியாகவே நாம் நிறைவாழ்வு பெறுகிறோம் என்றும் கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர் ஆகிய ஏனைய தலைவர்களும், இன்றைய முதல் வாசகம் முன்வைக்கின்ற தாழ்ச்சிநிறை தலைமைப் பண்புடன் வாழவும், பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், எளிமையின் அரசராம் உம்மை, எங்கள் வாழ்வில் பின்பற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சூழ்ந்திருக்கும் போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பலவகை அவலங்களால் அவதியுறும் இவ்வுலகிற்கு, போர்க் கருவிகள் இல்லாமல் போகும். ஆண்டவராகிய அரசரே அமைதியை அறிவிப்பார் என்கிற செக்கரியாவின் இறைவாக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்றும், இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள் பொறுப்புடன் எம்மை ஆளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று மகிழ்ந்த இயேசுவே, கல்வி ஆண்டின் முதல் பருவத்தில் இருக்கும் எம்பிள்ளைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மெய்யறிவையும், நிறைஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும், இளையோருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றுரைத்த இறைவா, வறுமை, கடன் தொல்லை, பசி, பிணி, பிணக்கு, பிரிவு, நோய், முதுமை, தனிமை, துன்பம், துயரம் எனப் பல்வேறு சுமைகளினால் அழுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும், நீர் தாமே இளைப்பாறுதலாகவும், அரணாகவும், பலமாகவும் இருந்து துணைநிற்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்கவும், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்து, உமக்கும் பிறருக்கும் ஏற்புடையவர்களாக வாழ்ந்து, கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

No comments:

Post a Comment