பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
உரோமையர் 8: 26-27
மத்தேயு 13: 24-43
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமையும் களைகளும் உவமையின் வழியாக இறைவனின் எல்லையற்ற பொறுமையையும் நீதியையும் நமக்கு எடுத்துரைக்கிறார். தீமையை உடனடியாக வேரோடு பிடுங்கி எறியாமல், கோதுமை மணிகள் வளர்ந்து பலன் தரும் வரை இறைவன் காத்திருக்கிறார். இது நாம் மனம் மாற அவர் தரும் வாய்ப்பு.
கடவுள் வலிமை மிக்கவராக இருந்தாலும், அவர் நீதியோடும் கனிவோடும் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நமது பலவீனங்களில் தூய ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். தீய எண்ணங்கள் என்னும் களைகள் நம் இதயத்தில் வளர இடம் கொடுக்காமல், கோதுமை மணிகளாக இறைவனின் களஞ்சியத்தில் சேரத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
வாசகமுன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை (சாலமோனின் ஞானம் 12: 13, 16-19)
ஆண்டவர் எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரம் கொண்டவர். இருப்பினும், அவர் தம் வலிமையைக் கடுமையாகப் பயன்படுத்தாமல், மிகுந்த கனிவோடும் பொறுமையோடும் நம்மை ஆளுகிறார். நாம் பாவம் செய்தாலும் மனம் வருந்தித் திரும்பி வர அவர் வழிவகை செய்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி
என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 26-27)
நாம் எப்படிச் செபிக்க வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும்போது, தூய ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்குத் துணையாக வருகிறார். அவர் சொல்வதற்கரிய பெருமூச்சுகளோடு நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்” எனச் சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசக கூற்றுப்படி தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், நன்னம்பிக்கையால் நிரப்பப்பட்டு, எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, அன்புச்செயல்களில் ஈடுபட்டு, இறையரசை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமையிலும் நீதியின் ஊற்ற்றாகிய உமது ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டு, போர்கள் இல்லாத உலகிற்காகவும் ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்கிற்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்கள் நல்லாட்சியை வழங்க நீர் தாமே அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ஆற்றல் மிக்கவராகவும், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறவராகவும் நீர் இருப்பதால்-தான் நாங்கள் மன்னிப்புப்பெற்றவர்களாகவும், ஆசி பெற்றவர்களாகவும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து, நாங்களும், அனைவருடனும் கனிவோடு நடந்துகொள்ளவும், எமது ஆற்றலை, ஆணவச் செயல்களுக்கும், வன்செயல்களுக்கும் பயன்படுத்தாமல் அன்புச்செயல்களுக்காகவும் அறச்செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தவும், வன்கொடுமைகளுக்கு ஆளாவோருக்கு ஆறுதலாக, ஆதரவாக இருக்கவும் நல்மனம் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. துன்பங்களாலும் துயர்களாலும் நோய்களாலும் தனிமையினாலும், வறுமையினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும், பொருளாதார பிரச்சனைகளாலும் கடன் தொல்லைகளாலும், வேதனையுற்று, வலுவற்ற நிலையில் உள்ளோரின் உள்ளங்களைத் துருவி ஆய்பவரும் துணைநிற்பவருமான தூய ஆவியாரை அனுப்பி, அவர்களது வாழ்வை, நீர் தாமே மேம்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சிறு கடுகாகவும், புளிப்பு மாவு போன்றவர்களாகவும் இருந்தாலும், விண்ணரசுக்கு நாங்களும் இன்றியமையாதவர்கள் என்பதை உணர்ந்து செயலாற்றவும், தீயோன் விதைக்கும் களைகளுக்கு இடம் கொடுக்காமல், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாகவே வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:
Post a Comment