Wednesday, September 2, 2026

பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு 06-09-2026

 பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு 06-09-2026

இன்றைய வாசகங்கள்

எசேக்கியேல் 33: 7-9
உரோமையர் 13: 8-10
மத் 18: 15-20

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 23-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "சகோதரத் திருத்தம்"  மற்றும் "அன்பு" ஆகிய இரண்டு முக்கியக் கருத்துகளை நமக்கு முன்வைக்கிறது. ஒரு சகோதரர் தவறு செய்யும்போது, அவரை ஒதுக்கிவிடாமல் அன்போடு திருத்தி நல்வழிப்படுத்த வேண்டியது நமது கடமை என்பதை முதல் வாசகமும் நற்செய்தியும் வலியுறுத்துகின்றன. மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே கடன் "அன்பு செலுத்துவது" மட்டுமேயென இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் விளக்குகிறார்.
"உங்களில் இருவர் மண்ணுலகில் ஒருமனப்பட்டு எதைக் கேட்டாலும் என் தந்தை அதைத் தருவார்" என்ற இயேசுவின் வாக்குறுதி, திருச்சபையின் ஒற்றுமைக்குத் தரும் பெரிய அங்கீகாரம். நாம் மற்றவர்களைக் தீர்ப்பிடுபவர்களாக இல்லாமல், அவர்களை அன்பு செய்து மீட்பின் பாதைக்கு அழைத்துச் செல்பவர்களாக மாற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை 

ஆண்டவர் எசேக்கியேலை இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு 'காவற்காரராக' நியமிக்கிறார். தீயவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகி வாழ எச்சரிக்கை செய்ய வேண்டியது ஒரு இறைப்பணியாளரின் கடமை. அந்த எச்சரிக்கையைத் தரத் தவறினால் அந்தக் குற்றத்திற்கு நாமே பொறுப்பேற்க நேரிடும் என்ற எச்சரிக்கையைத் தரும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.  பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.  பல்லவி      

இரண்டாம் வாசக முன்னுரை 

"உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்ற கட்டளைக்குள் மற்ற அனைத்துக் கட்டளைகளும் அடங்கியுள்ளன. அன்பு பிறருக்குத் தீமை செய்யாது; எனவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு என்பதைப் பறைசாற்றும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

 1. “என் பெயரின் பொருட்டு ஒன்றாகக் கூடியிருக்கின்றவர்களிடையே நான் இருக்கிறேன்” என்றுரைத்த இறைவா, உம் திருப்பெயரின் பொருட்டு ஒன்றாகக் கூடியிருக்கும் திருஅவை மீதும், எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய அனைவர் மீதும், உமது அருளாசியைப் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகாளும் தலைவர்களும், எமை ஆள்பவர்களும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், அமைதியை விரும்புகிறவர்களாகவும், வளர்ச்சிக்கு வித்திடுபவர்களாகவும் விளங்கிட வேண்டுமென்றும், எங்கள் தாய்த் திருநாடும், தமிழகமும், எல்லா வளமும் பெற்று முன்னேற்றப் பாதையில் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பிறரை நல்வழிப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களுக்குச் செவிமடுத்த நாங்கள், ஆசிரியப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் ஜெபிக்கின்றோம்.  தம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை, தம் சொல்லலும், செயலாலும், கற்பித்தலாலும், முன்மாதிரியினாலும் வழிநடத்துகிற ஆற்றலை அவர்கள் பெற்றிட வேண்டுமென்றும், மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற மந்திரத்தின்படி வாழுகிற நல்லொழுக்கம் உள்ளவர்களாய் நாங்கள் விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ என்பதை உணர்ந்து, எங்கள் குடும்பங்களில் ஏற்படுகிற பிணக்குகள் அனைத்தையும், புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் நிறைந்த பேச்சுவார்த்தையினாலும், மன்னித்து மறத்தல் என்கிற நற்பண்பினாலும் தீர்த்து, உறவுகளைப் பேணுகிறப் பண்பான குடும்பங்களாக மாற்றிட, வரமருள   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், யாருக்கும் எதிலும் கடன்படாதிருக்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நாங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் கொண்டு வாழவும், அனைத்து கட்டளைகளும், அடுத்திருப்பவர் மீது அன்பு கூர்வதில் அடங்கியுள்ளன என்பதை உணர்ந்து, மனமொத்து சிந்திக்கவும், ஜெபிக்கவும், வாழவும் வரம்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF