Sunday, August 23, 2026

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 30.08.2026

  பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 30.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20: 7-9
உரோமையர் 12:1-2
மத்தேயு 16:21-27

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
சென்ற வாரம் இயேசுவை "மெசியா" என்று அறிக்கையிட்ட பேதுரு, இன்று இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏற்க மறுக்கிறார். மானிடச் சிந்தனையோடு இருந்த பேதுருவைக் கடிந்துகொள்ளும் இயேசு, "என்னைத் பின்செல்ல விரும்பும் எவரும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்செல்லட்டும்" என்று சீடத்துவத்திற்குரிய நிபந்தனையை விதிக்கிறார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் இறைப்பணியில் வரும் துன்பங்களைக் கண்டு புலம்பினாலும், இறைவார்த்தை அவர் இதயத்தில் "எரியும் நெருப்பாய்" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில், "இவ்வுலகின் போக்கின்படி வாழாமல், உங்களையே உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுங்கள்" என்று பவுல் அடியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார். வாழ்வைப் பற்றிக் கொண்டிருப்பவர் அதை இழப்பார்; கிறிஸ்துவுக்காக வாழ்வை இழப்பவர் அதைக் கண்டடைவார். இந்த மேலான உண்மையை உணர்ந்து, நம் சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரை 

முதல் வாசக முன்னுரை 

இறைவார்த்தையை அறிவித்ததால் எரேமியா இறைவாக்கினர் ஏளனத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார். "இனி ஆண்டவரைப் பற்றிப் பேசமாட்டேன்" என்று அவர் நினைத்தாலும், இறைவார்த்தை அவர் எலும்புகளுக்குள் எரியும் நெருப்பைப் போலத் தூண்டுகிறது. இறைவனின் அழைப்பிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.  ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.   அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.  நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 12: 1-2)

புனித பவுல் அடியார் நம்மை ஒரு புதிய வழிபாட்டிற்கு அழைக்கிறார். விலங்குகளைப் பலியிடுவதற்குப் பதிலாக, நம்மையே 'தூய, உயிருள்ள பலியாக' இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வுலகின் மாயைகளுக்கு அடிமையாகாமல், கடவுளுக்கு உகந்தது எது என ஆய்ந்தறிய அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணாமல், கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணவும், பேசவும், செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரந்த இவ்வுலகு, எம்பாரதத் திருநாடு மற்றும் எங்கள் மாநிலம் ஆகியவற்றை ஆளுகிற தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்கிற நேரிய பாதையில் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உலகின் கவர்ச்சிகளால் சுண்டியிழுக்கப்படும் எம்பிள்ளைகளும், இளையோரும், உலகத்தின் போக்கின்படி ஒழுகாமல், உள்ளம் புதுப்பிக்கப்பெற்று கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிந்து, தங்கள் எதிர்கால வாழ்வை சீரிய முறையில் கட்டமைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பொருள் ஈட்டுவதிலும், உயர் பதவிகள் பெறுவதிலும், வசதிகளைப் பெருக்குவதிலும், வெளிநாடுகளில் குடியேறுவதிலும் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது எனக் கருதி, குடும்ப உறவுகளுடனும், கடவுளாம் உம்முடனும் காட்ட வேண்டிய நெருக்கத்தை தொலைத்துவிடுகிற அனைவரும், “உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழந்தால் கிடைக்கும் பயன் என்ன?” என்பதை உணர்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஞாயிறு மற்றும் கடன் திருநாள் அனுசரிப்பில் மட்டுமே எங்கள் நம்பிக்கை என்று வாழ்வை குறுக்கிக் கொள்ளாமல், கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக எங்களையே படைத்து, தன்னலம் துறந்து, எங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு உம்மைப் பின்பற்றும் உள்ளார்ந்த வழிபாடு செய்திடும் துணிவு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, August 17, 2026

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 23.08.2026

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 23.08.2026
Jesus é o Senhor!: EVANGELHO SÃO MATEUS 16:13-20 - 21° DOMINGO O TEMPO  COMUM - ANO "A" 2014 - 24/08/2014

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "அதிகாரம்" மற்றும் "அறிக்கை" ஆகிய இரண்டு முக்கியக் கருத்துகளை நமக்குத் தருகிறது. நற்செய்தியில், "மானிட மகனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு, பேதுரு "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று மிகச்சிறந்த விசுவாச அறிக்கையைச் செய்கிறார். இதற்காக இயேசு பேதுருவைப் பாராட்டி, திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பையும், விண்ணரசின் திறவுகோல்களையும் அவரிடம் ஒப்படைக்கிறார்.
முதல் வாசகத்தில், தகுதியற்ற செபுனாவிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, எலியாக்கிமிடம் ஒப்படைக்கப்படுவதைக் காண்கிறோம். அதிகாரம் என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கல்ல, அது பொறுப்புடன் சேவை செய்வதற்கே வழங்கப்படுகிறது. கடவுளின் ஞானம் அளவிட முடியாதது என இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் வியக்கிறார். நாம் இயேசுவை எப்படி அடையாளம் காண்கிறோம்? அவரே என் வாழ்வின் மெசியா என்று சொல்லும் துணிவை வேண்டிக் கொண்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எருசலேமின் மேலாளராக இருந்த செபுனா தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதால், ஆண்டவர் அவரைப் பதவியிறக்கம் செய்கிறார். அவருக்குப் பதிலாக எலியாக்கிம் என்பவரைத் தேர்ந்தெடுத்து, அதிகாரம் மற்றும் பொறுப்பின் அடையாளமாகத் தாவீது குடும்பத்தின் திறவுகோலை அவர் தோள்மேல் வைக்கிறார். அதிகாரம் என்பது கடவுள் தரும் கொடை என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் செல்வம், ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? அவரது முடிவுகள் யாராலும் ஆராய முடியாதவை. அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன என்று கடவுளின் மாட்சியைப் புனித பவுல் அடியார் போற்றும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா” என்கிற வாக்குறுதியோடு திருஅவையை நிறுவிய இறைவா! எங்கள் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய எங்கள் அனைவரையும், தீமை அனைத்திலுமிருந்து விடுவித்து, நம்பிக்கையிலும், எதிர்நோக்கிலும், அன்பிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்துலகின் அரசரே இறைவா! அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன; உம்மாலேயே உண்டாயின; உமக்காகவே இருக்கின்றன என்பதை உணர்ந்து, எமை ஆளும் தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், உமக்கே பணிந்து வாழவும், நீதி, நேர்மை, வாய்மை ஆகிய விழுமியங்களைப் பேணி, பகைமையற்ற அமைதியான உலகை உருவாக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் முன்னெடுப்புகளால், மனிதமும் புனிதமும் மங்கி வருகின்ற இவ்வேளையில், “கடவுளின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!” என்பதை உணர்ந்து, எம்பிள்ளைகளும், இளையோரும், கருத்தாய் கற்று வாழ்வில் உயர்வதோடு நில்லாமல், அறிவைக் கடந்த ஞானத்தையும், ஞானத்தின் தொடக்கமாகிய இறையச்சத்தையும் கொண்டு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விண்ணகத்தின் திறவுகோலையும், மன்னிக்கும் அதிகாரத்தையும் திருஅவைக்கு தந்தருளிய இறைவா! குட்டித் திருஅவையாகிய ஒவ்வொரு குடும்பத்திலும், மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும்    புரிந்துகொள்ளுதலும் இருந்தால் மகிழ்ச்சியின் திறவுகோலும் எம்மிடம் இருக்கும் என்கிற உணர்வோடு, நாங்கள் அனைவரும், எங்கள் குடும்பங்களையும், அன்பியங்களையும், பங்குத்தளத்தையும் அன்பிலும் ஒப்புரவிலும் கட்டியெழுப்ப  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “ஆண்டவரே! நீர் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப்பாடலாக ஜெபித்த எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்களையும், இங்கே கூடியுள்ள எங்கள் அனைவரது அவசரத் தேவைகளையும் நீர் தாமே சந்தித்து, ஆசி அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, August 10, 2026

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 16.08.2026

 பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 16.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 56:1,6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15: 21-28
 

திருப்பலி முன்னுரை 

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தி விசுவாசத்தின் வலிமையையும், கடவுளின் அன்பு எல்லைகளற்றது என்பதையும் பறைசாற்றுகிறது. ஒரு கானானியப் பெண் தன் மகளுக்காக இயேசுவிடம் வந்து மன்றாடுகிறார். அவர் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவர் அல்ல என்றாலும், அவரது தளராத விசுவாசத்தைக் கண்டு இயேசு வியந்து போகிறார். "அம்மா, உமது விசுவாசம் பெரிது!" என்று பாராட்டி, அவரது மகளைக் குணமாக்குகிறார்.

இறைவனின் இல்லம் "எல்லா மக்களுக்கும் செப இல்லம்" என்று அழைக்கப்படும் என முதல் வாசகத்திலும், கடவுள் எல்லாருக்கும் இரக்கம் காட்டவே அனைவரையும் கீழ்ப்படியாமையில் இருக்கச் செய்தாரென இரண்டாம் வாசகத்திலும் வாசிக்கிறோம். மீட்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது மொழிக்கோ உரியது அல்ல; அது இறைவனைத் தேடும் ஒவ்வொரு இதயத்திற்கும் உரியது. அந்தப் பெண்மணியைப் போல நாமும் சோர்ந்து போகாத விசுவாசத்தைப் பெற்றிடவும், எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் அன்பு செய்யவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை 

இறைவனைத் தேடி வரும் அன்னியர்களையும் இறைவன் கைவிடுவதில்லை. அவர்கள் ஆண்டவரின் பெயருக்கு அன்பு காட்டி, அவரது உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அவர்களைத் தமது புனித மலைக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியூட்டுவதாக ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார். இறைவனின் இல்லம் எல்லா மக்களுக்கும் உரியது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

1. கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். - பல்லவி  

2. வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி  

3. கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை 

புனித பவுல் அடியார் பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தான் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறார். இஸ்ரயேல் மக்கள் புறக்கணித்ததால் உலகம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டது. கடவுள் தமக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீதும் இரக்கம் காட்டுகிறார் என்ற உன்னத உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1. உமக்குத் திருப்பணி செய்வதற்கும், உமது பெயர்மீது அன்புகூர்வதற்கும், உம் ஊழியராய் இருப்பதற்கும், நீர் தெரிந்துகொண்ட எங்கள் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், ஆகிய அனைவரும், “விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளாத” உம்மைப் போலவே, பிரமாணிக்கம் தவறாது இருக்கவேண்டுமென்றும், இறைமக்களாகிய எங்களையும் பிரமாணிக்கத்தின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவையும் எம் இந்தியத் திருநாட்டின் விடுதலைத் திருநாளையும் நேற்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்த நாங்கள். “நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்” என்று இறைவாக்கினர் ஏசாயா வழியாக நீர் தரும் வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவும், எமை ஆளும் தலைவர்கள் “நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்” என்கிற உமது அறிவுறையை ஏற்று ஆட்சி செய்யவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்” என்றுரைத்து, அனைத்து மக்களையும் அரவணைக்கத் துடிக்கும் உம்மைப் பின்பற்றி, நாங்கள் அனைவரும், சாதி, சமய, மொழி, இன ஏற்றத்தாழ்வு கருதாமல், அனைவரோடும் அன்புறவோடு வாழவும், சமயச்சார்பற்ற, சமூகநீதி தழைக்கிற செழுமையான ஒரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவும், உலகம் கடவுளோடு ஒப்புரவாகவும், தம் சொந்த மகனையும் தாரை வார்த்த தந்தையே, நாங்கள் எத்தகையோராய் இருந்தாலும் எங்களைக் கண்ணோக்கி, உமக்கு உரியவர்களாய் மாற்ற வேண்டுமென்றும், நவீன உலகின் மாயக் கவர்ச்சிகளில் சிக்கித் தவிக்கும் எம் இளையோரை நல்வழிப்படுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியிலே வருகிற கனானேயப் பெண்போல, உம்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, எவ்வளவு துன்பப்பட்டாலும், எவ்வளவு அவமானப்பட்டாலும், தொடர்ந்து ஜெபிக்கவும், இடைவிடாது உழைக்கவும், இதன் வழியாக அற்புதங்களை அனுபவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, August 3, 2026

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 அரசர்கள் 19:9அ,11-13அ
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராமல் வரும் புயல்களையும், போராட்டங்களையும் நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? இன்றைய திருவழிபாடு இக்கேள்விக்கு விடை தருகிறது. முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் கடும் காற்றிலோ, நிலநடுக்கத்திலோ, நெருப்பிலோ இறைவனைக் காணவில்லை; மாறாக, மென்மையான தென்றல் காற்றில் இறைவனின் பிரசன்னத்தை உணர்கிறார்.
நற்செய்தியில், சீடர்கள் கடலில் புயலால் அலைக்கழிக்கப்படும்போது, இயேசு நீரின் மேல் நடந்து வருகிறார். பயத்தினால் சீடர்கள் அலறும்போது, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கூறுகிறார். பேதுருவின் விசுவாசம் தடுமாறும்போது, இயேசு தம் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றுகிறார். நம் வாழ்வின் புயல்கள் நம்மை மூழ்கடிக்கப் பார்க்கும்போதெல்லாம், ஆண்டவர் அருகில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை இன்றைய மறைவாக்குகள் நமக்குத் தருகின்றன. புயலின் நடுவே அமைதி தரும் அந்த இறைவனைச் சந்திக்க, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 19: 9a, 11-13a)

இறைவாக்கினர் எலியா தன் உயிருக்கு அஞ்சி ஓடி, ஒரு குகையில் தஞ்சம் புகுகிறார். ஆர்ப்பரிக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் அல்ல, மாறாக அமைதியான, மென்மையான ஒரு தென்றல் காற்றில் இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார். இறைவன் ஆரவாரத்தில் இல்லை, அமைதியிலேயே இருக்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 9: 1-5)

தன் சொந்த இனமாகிய இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதது குறித்து புனித பவுல் அடியார் பெரும் மனவேதனையோடு பேசுகிறார். அவர்களின் மீட்பிற்காகத் தான் சாபத்திற்கு உள்ளாகவும் அவர் தயாராக இருக்கிறார். கிறிஸ்துவின் வழியாகக் கிடைத்த உன்னதப் பேறுகளை விவரிக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், உம் பேரன்பையும், மீட்பையும், நிறைவாழ்வையும் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் வாக்களிக்கிறீர் என்பதை உணர்ந்து, இன்றைய பதிலுரை பாடலில் சொன்னது போல, ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டு எம்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இன்றைய தியானப் பாடலாக அமைந்த திருப்பாடல் எண்பத்து ஐந்து கூறுவது போல, இவ்வுலகிலும், எம்நாட்டிலும், ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளவும், பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கவும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடவும், மண்ணினின்று உண்மை முளைத்தெழவும், நல்விளைவை எம்நாடு நல்கவும், தலைவர்களும் குடிமக்களும் இவற்றிற்காகப் பொறுப்புடன் செயலாற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தன் சொந்த இனத்தைச் சேர்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக எந்தத் தியாகத்தையும் பழியையும் ஏற்கத் தயாராக இருந்த பவுலடியாரை பின்பற்றி, மதவாதமும், சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளில் வேகமும் அதிகரித்திருக்கும் இன்றையச் சூழலில், எம் இந்திய தேசம் உண்மை ஒளியாம் உம்மை ஏற்கவும், அதற்காக நாங்கள் அனைவரும் ஊக்கத்தோடு செயல்பட்டு, எங்கள் சாட்சிய வாழ்வின் மூலமும், துணிவான அறிக்கையிடுதல் வழியாகவும் மீட்பிற்கான வழியைப் பறைசாற்ற  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புயல் சூழ்ந்த துன்பச்சூழல்களால் எங்கள் வாழ்க்கைப் படகு அலைக்கழிக்கப்பட்டு, நாங்கள் திகிலுற்று தவிக்கும்போது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்கிற உமது உடனிருப்பை உணர்ந்து கொள்ளவும், இன்றைய முதல் வாசகத்தில் வருகிற இறைவாக்கினர் எலியா, மெல்லிய தென்றலில் உம து குரலொலியை கேட்டது போல, நாங்களும் பிரமாண்டங்களுக்காகக் காத்திராமல், எங்களது தினசரி வாழ்வின் எதார்த்தங்களிலும், அமைதியான எங்கள் தனிப்பட்ட இறைவேண்டலிலும் உம்மைக் கண்டுணர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்று கூறி, படகிலிருந்து இறங்கி, கடல்மீது நடந்து உம்மை நோக்கி வந்த பேதுருவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எதற்கும் அஞ்சாமல் உம்மையே நம்பி வாழவும், உம்மையே நோக்கி வரவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 

https://anbinmadal.org

Print Friendly and PDF