Thursday, September 14, 2017

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 17.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 17.09.2017





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சீராக்   27:30-28:7
உரோமையர் 14:7-9
மத்தேயு 18: 21-35



 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துநான்காம் ஞாயிறுத் திருப்பலியில் மன்னிப்பின் மேன்மையை உணர்ந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றிச் சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன் செபத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்று.

இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார். இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காகச் சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்னக் கல்வாரி நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா?
மன்னிப்பின் மேன்மையை உணர்ந்து வாழ நல்மனம் நம்மில் அமைந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்தக் கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."எனக் கூறுகின்ற சீராக்கின் ஞான நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாவது வாசகத்தில் உரோமையர் மத்தியில் உருவான உறவின் விரிசல்களை, குறிப்பாக விருந்துண்டதில், ஒருவரின் தீர்ப்பை உறவு பிரிக்கிறது. குறைநிறைகளோடு ஏற்றுக் கொள்வதிலும், தம்மையே பிறருக்குத் தருவதிலும் தான் உறவு பலப்படுத்தப்படுகிறது என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் அழைப்பை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.          

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
திருப்பாடல் 103: 1-2, 3-4, 9-10, 11-12

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி 


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன..அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை உள்ள அனைத்துதரப்பினரும் இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பைத் தன் சுவாசமாக்கியது போல, தங்கள் வாழ்வில் எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கவும். ஒருவர் ஒருவரை நட்புப் பாராட்டவும், உள்ளதை உள்ளதுபோல் ஏற்றுக்கொண்டு "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்பதை உணர்ந்த செயல்படத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் பிறருடைய குற்றங்கள், குறைகளை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கோபம், பழிவாங்குதல் போன்ற எதிர்மறைச் சிந்தனைகளுக்கு அடிமைகளாகித் தங்கள் உள்ளத்தையும் உடலையும் பாழ்படுத்திக் கொள்ளமால் அனைவரும் , மன்னிப்பின் மேன்மையை உணர்ந்து அதையே சுவாசக்காற்றை மாற்றி இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறைந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டடையச் செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகைச் செய்திடவும் , நாட்டிற்கும் உலகிற்கும் பயன்உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

4. சமூக மாற்றித்தின் நாயகனே எம் இறைவா! உலகெங்கும் கோபத்தாலும் வெறுப்புணர்வாலும் பிளவுப்பட்டுச் சிதறியடிக்கப்பட்ட உம் மக்களே கண்ணேக்கியருளும். பகைமையை மறந்து எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்..என்பதை அனைவரும் உணர்ந்து மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்


www.anbinmadal.org

Friday, September 8, 2017

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு 10.09.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*







எசேக்கியல் 33: 7-9 
உரோமையர் 13:8-10
மத்தேயு 18: 15-20

 *முன்னுரை*


அன்புடையீர்,
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறுத் திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்துக் கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.
அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் சகோதரனைத் திருத்தும் முறையை நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது. தனியாக இருக்கும் போது அவன் குற்றத்தை எடுத்துக் கூறுங்கள். இப்படிச் செய்தால் நாம் பலருடைய வாழ்க்கையில் ஒளியேற்றுகிறோம் என்பது பொருள். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லவே இல்லை. காரணம் இறுதிவரைப் போராடிய இயேசு அன்பின் உச்சகட்டமாகத் தனது உயிரையே நமக்காகக் கொடுத்தார். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவது ஆண்டவனின் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமையாகும்.
தயவுசெய்து,  நன்றி,  மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான மனநிலையோடு சொன்னால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. குடும்பங்களில் நல்ல சூழல் உருவாக, முன்னதாகச் சொல்லப்பட்ட எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே! இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்! விட்டுகொடுத்து வாழ நல்மனம் நம்மில் அமைந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


இவ்வுலகம் தீயவர்களால் கெடுவதில்லை; மாறாகத் தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு , கண்டனக் குரல் எழுப்பாமல் மெளனமாக இருப்பவர்களால்தான் கெடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியல் வழியாகக் கூறுகிறார். தீயவர்களை நாம் எச்சரித்தும், அவர்கள் தீமையில் செத்தால், அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல; மாறாக, தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில் இறந்தால் அவர்களுடைய அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் எனக் கூறுகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.            
.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாவது வாசகத்தில் கடவுளின் அன்பைப் பற்றியும், அதற்குப் பதிலாக நாமும் அயலாரை அன்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். கடவுளை நாம் அன்பு செய்யும் போது, நாம் கடவுளோடும், கடவுள் அன்பு செய்யும் மக்களோடும் ஒன்றிப்போகிறோம். மக்கள் அனைவரையும் அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். இக்கடமையை நிறைவேற்றுவதன் மூலம் கடவுளது அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றோம் என்று எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலின் அழைப்பை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.  
         

*பதிலுரைப்பாடல்*


உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.  பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.  பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.  அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள அனைவரும் தயவுசெய்து,  நன்றி,  மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான அர்த்ததோடும், அன்பான மனநிலையோடு கூறி எங்கள் குடும்ப உறவுகளை மேன்மை படுத்தி தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலமக்களிடம் பிரிவு மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு சிறந்து விளங்கிடவும், மனித நேயமும், சரியான சமுக நீதியும் வழங்கப்பட்டவும், அனைவருக்கும் எல்லா உரிமைகள் கிடைத்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

4. சமூக மாற்றத்தின் நாயகனே எம் இறைவா! நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.



                                                           www.anbinmadal.org

Thursday, August 31, 2017

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 03.09.2017

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 03.09.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எரேமியா 20: 7-9 
உரோமையர் 2:1-2
மத்தேயு 16:21-27




 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று தத்தம் சிலுவைவைச் சுமந்து கொண்டு இயேசுவின் சீடர்களாய் பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருப்பலியில் கலந்து கொண்டு, கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாகத் தங்களைப் படைக்க வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொல்லிக் கிறிஸ்துவிடம் பாராட்டுப் பெற்ற திருத்தூதர் பேதுருவை “என் கண்முன் நில்லாதே சாத்தானே” என்று கடிந்து கொள்கின்றார் இறைமகன் இயேசு. தன்னைச் சிலுவையிலிருந்து பிரிக்க நினைத்த பேதுருவைக் கிறிஸ்து "சாத்தானே" என்று அழைத்தார். அன்று கிறிஸ்துவைக் கோபுரத்திலிருந்து குதிக்கச் சொன்னச் சாத்தான், அவரைக் கடைசியாகச் சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னான். ஆனால் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை. மாறாகச் சிலுவையில் தொங்கி நம்மை மீட்டார். சிலுவையின் மூலம் விடுவிப்பார்.!.
கிறிஸ்து சிலுவையால் மாட்சிமை அடைந்தார். சிலுவையில் அவர் உயர்த்தப்பட்டார். சிலுவையிலிருந்து மாந்தர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார். ஒவ்வொரு துன்பமும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி மாட்சிமை அடையச் செய்கிறது என்ற நம்பிக்கையில் பக்குவப்பட்டவர்களாய் இறைவார்த்தை நமக்கு உறுதியையும் ஊக்கத்தையும் தர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.



*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது. ‘ஏன் எனக்கு வம்பு’ என்று பேசாமல் இருந்தாலும் உமது வார்த்தைகள் என் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார் எரேமியா. ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். நானும் ஏமாந்து போனோன் என்று  மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் எசாயா நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.             

.

*இரண்டாம் வாசக முன்னுரை*


திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகிறார். கடவுளுக்கு உகந்த, துய, உயிருள்ள பலியாக உங்களை ஒப்புடையுங்கள் என்கிறார் பவுலாடியார். கிறிஸ்தவ வாழ்வுக்காக நம் உள்ளத்தை புதுப்பித்துக் கொள்ள அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். 
          

*பதிலுரைப்பாடல்*


திபா 63: 1. 2-3. 4-5. 7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.  ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.   அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.  நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி
*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*

1. எங்களுக்குத் துணைச் செய்பவரும் , விடுதலை அளிப்பவருமாகிய எம் இறைவா! எம் திருத்தந்தை , ஆயர்கள், குருக்கள், துயவியர், பொதுநிலையினர் அனைவரும் உமக்குச் சாட்சியம் புரிய, உன்னத மக்களாகத் திகழ்ந்திட, திருஅவை எதிர்நோக்கும் சவால்களையும், துன்பங்களையும் ஏற்றுத் துணிவுடன் திருஅவையைப் பேணிக்காக்கத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. துன்பங்களை வென்ற நாயகனே, எம் இறைவா! துன்பங்களை நாம் கண்டு துவண்டுவிடாமல் அதளை மேற்கொள்ளத் தனிமனித முயற்சியோடு உம் இறைநம்பிக்கை அதிக முக்கியம் என்பதனை உணர்ந்து நாங்கள் துன்பப்படுவோர்க்கு, எப்போதும் உதவிகரம் கொடுக்கக் கூடிய நல்மனதையும் கடவுளுக்க ஏற்புடைய நற்காரியங்களை மேற்கொள்ளத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3.அனைத்தையும் அமைத்தாளும் எம் இறைவா, எங்கள் அருகிலிருக்கும் ஏழைகள், துன்புறுவோர், கைவிடப்பட்டோர், தனிமையில் வாழ்வோருக்கு நாங்கள் உதவ முன்வர எங்களுக்குத் தன்னலமற்ற சேவைச் செய்வும், அவர்களின் பொருளாதாரத் தேவைகளைச் சந்திக்கவும் இரக்கமுள்ள நல்ல இதயத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அருள்கொடையின் நாயகனே எம் இறைவா! இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

5. சமூக மாற்றித்தின் நாயகனே எம் இறைவா! தழிழகம் எங்கும் வறட்சியால் தவிக்கும் இவ்வேளையில் பிறர்நலனில் அக்கறை கொண்ட எம் விவசாயிகளின் பல்வேறு அகிம்சை வழிப் போராட்டங்கள் வெறும் வெட்டு முழக்கங்கள் அல்ல, மாறாகத் தலைமுறைகளுக்குத் தங்கள் எதிர்காலவாழ்வை முன்னிறுத்தி அவர்கள் செய்யும் அனைத்து முயற்சிகளையும் எங்கள் ஆட்சியாளர்கள் உம் தூய ஆவியின் ஆற்றலால் உணர்ந்து எம் விவசாயிகளின் வாழ்வு மலர உழைத்திட வேண்டிய நல்வரங்களைப் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 
www.anbinmadal.org


Thursday, August 24, 2017

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 27.08.2017

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 27.08.2017




*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.


 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு. இன்றைய திருப்பலியில் இறைஞானத்தால் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவரே இறைமகன் என்று அறிக்கையிட அழைக்கப்பட்டு தெய்வத்தின் திருவடியில் அமர வந்துள்ள இயேசுவின் அன்பிற்குரியவர்களே! உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நமது விசுவாத்தின் தொடக்கமும் முடிவும் இறைவனே! அந்த இறைவனின் உதவியின்றி இயேசுவே ஆண்டவர் என்று நம்மால் அறிக்கையிட முடியாது. இன்றைய வாசகங்கள் இயேசுவைச் சரியாகக் கண்டுணர நம்மை அழைத்துச் செல்கின்றன. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்டக் கேள்விக்கு அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவியக் கருத்துக்களைப் பிரதிபலித்த்தபோது, பேதுரு மட்டும், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார் கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்.
இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். எனவே இறைகொடைகளைத் தடையின்றிப் பெற்றுவரும் நாம் அவற்றின் வழியாக இறைமாட்சியடைய நம் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு இறைபிரசன்னத்தை உணர்ந்து நம் வாழ்வைத் தொடர இன்றைய திருப்பலியில் ஒருமனதோராய் மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இறைவனின் செய்திகள் மக்களிடம் சென்றடைய இறைவன், குருக்களையும், இறைவாக்கினர்களையும் ஏற்படுத்துகின்றார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோர் தங்கள் கடமைகளில் தவறும்போது இறைவனால் இறைக்கி வைக்கப்படுகின்றனர். தீயோரை அகற்றிவிட்டு நல்லவருக்கு இறைவன் அதிகாரம் அளிப்பார். இவ்வாறே செபுனாவுக்கு  கண்டனம் தெரிவித்து விட்டு, எலியாக்கை அழைத்து அவர் கைகளில் தன் மக்களை ஒப்படைத்தார். இரக்கப் பெருக்குமிக்க இறைவனின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் எசாயா நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.           
.

*இரண்டாம் வாசக முன்னுரை*


திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் இறைவனின் இரக்கப்பெருக்கத்திற்கு எல்லையில்லை. கடவுள் மனித அறிவுக்கு எட்டாதவர். நமது குறுகிய அறிவால் அவரை அறிந்துகொள்ள முடியாத ஒரு புதிர் . அவருடைய அறிவும் ஞானமும் ஆழமானவை. நம் அறிவுக்கு எட்டாதவை என்று வியப்புடன் எடுத்துரைக்கும் இவ்வார்த்தைகளை வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் நம்மைக் கைவிடமாட்டர் என்ற விசுவாசத்தோடு மனதில் பதிவு செய்வோம்.


*பதிலுரைப்பாடல்*


திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

*மன்றாட்டுகள்*


1. இரக்கப்பெருக்கத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்ககவும், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருந்தாலும் திருச்சபைவயை அன்புச் செய்யவும், கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்கவும் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா! ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3.துன்பத்தில் நல்தேற்றுதல் தரும் எம் இறைவா, எம் நாட்டில் உமக்கும், உம் மக்களாகிய எங்களுக்கும் எதிராக மததீவிரவாதம் மேலோங்கிக் குறிப்பாக வட இந்தியாவில் அதிகரித்து, துன்புறும் உம் மக்களுக்குப் பாதுகாப்பு, உம்மில் ஆழமான விசுவாசம், உம் பணியாளர்களுக்குச் சவாலை எதிர்க்கொள்ளும் உறுதியான மனநிலைத் தந்து, உமது வல்லமையான கரங்களால் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில்  இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

www.anbinmadal.org

Wednesday, August 16, 2017

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 20.08.2017







*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 56:1,6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15: 21-28


 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு தடைகள் பல தாண்டி இன்றைய திருப்பலியில் கலந்து இறைவனின் அருளைப் பெற்றுச் செல்ல வந்துள்ள இறைகுலமே உங்களை அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய திருப்பலி வாசகங்களில் நமக்குத் தரப்பட்டுள்ளது.. இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கைத் தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
கானானியப் பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். இயேசுவின் கடினமான சொற்களையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
தடைகள் எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கண்ட மகத்தான அந்த நம்பிக்கை முழுமையாகப் பெற்றுக்கொள்ள, இன்றைய திருப்பலியில் இயேசுவைப்போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெற இறையருள் வேண்டிடுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*

இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்: என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும். நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகளைக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

திருத்தூதர் பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் ஒருவன் பிறமறையைச் சார்ந்தவன் என்பதற்காக இயேசு அவனைப் புறக்கணிப்பதில்லை என்பதைத் தெளிவாக்கப் பிறர் இனத்தாராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமைகொள்கிறேன் என்கிறார். இதனை மனத்தில் கொண்டு இயேசுவிடம் செல்லும்போது சாதி, மதம், குலம் போன்றவற்றை விலக்கிவிட்டு விசுவாசத்திற்கு முதலிடம் கொடுத்து இறைவனின் அருளுக்கும் ஆசிருக்கும் உரியவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.


*பதிலுரைப்பாடல்*

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.


கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -*பல்லவி* 

 
வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -*பல்லவி *

 
கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -*பல்லவி*


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!


*மன்றாட்டுகள்*


1. நன்மைத் தனத்தின் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையில் பணியாற்றும் அனைவரும் உம்மைப்போலத் தாராள மனதுடனும், திறந்த மனதுடனும் சாதி, சமய, இன வித்தியாசங்களை மறந்து இறையரசின் பணிகளை அன்புடன் அனைவருக்கும் நிறைவாய் செய்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ”உங்கள் நம்பிக்கைப் பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும்” என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க, அன்பை வளர்க்க இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா, எம் இல்லங்களில், குடும்பங்களில் வேற்றுமைகள் களையப்பட்டு, அனைவரும் இறைவனின் படைப்புகளே என்ற உயரிய எண்ணங்கள் வளர்ந்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்லவும், மனித மாண்பு ஓங்கிடவும் எமக்குத் தேவையான ஞானத்தையும், நற்பண்புகளையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! கானானியப் பெண்ணின் மகளைப்போல் இன்று தங்கள் பிள்ளைகள் பலர் இவ்வுலகின் தீய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு இறைவனின் பாதையிலிருந்து விலகியிருப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டிக் கண்ணீர் விட்டுச் செபிக்கும் பெற்றோர்க்களின் செபத்தைக் கேட்டு அவர் தம் பிள்ளைகள் மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம். 



                                                                 www.anbinmadal.org

Wednesday, August 9, 2017

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 13.08.2017

 * (பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 13.08.2017) *



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அவர் தம் கரம்பிடித்த நிலைவாழ்வை நோக்கி நடந்திடக் கடலில் நடந்திட உற்சாகமாக வந்த பேதுருவைப் போல ஆலயம் வந்துள்ள இறைமக்களே உங்கள் வரவு நல்வரவாகுக.
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தையாம் கடவுளோடு அமர்ந்துச் செபித்த பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார். இயேசு அடிக்கடித் தனிச் செபத்தில் நீண்டநேரம் செலவழிப்பவர். ஏன் மத்தேயு இங்கே இதனைக் குறிப்பிடுகிறார் ? இந்தச் செபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?
நமது குடும்பத்திலும், வேலையிடத்திலும், சமூகத்திலும், இறைவனுக்காக, நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல உள்ளன. நாம் சோர்வில்லாமல் தொடர்ந்து இறைவனுக்காகப் பணியாற்ற, நாம் இழந்த சக்தியை மீண்டும் பெற்றிட இறைவனை மன்றாடுவோம்.
நமது ஆற்றலைப் புதுப்பிக்க, அடிக்கடிச் செபத்தில் நமது நேரத்தைச் செலவிட்டு, இறைவனைப் பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறார் என அறிந்து, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ளச் செபம் நமக்குப் பெரிதும் உதவுகிறது.
நாம் தனியாக இறைவனிடம் செபிக்கும் வேளையில், அவரிடமிருந்து நாம் பெறும் ஆசியும், அருளும், நமக்கான அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படித் துன்பம் என்னும் கடலில் நடப்பது என நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
இன்றைய திருப்பலியில் இயேசுவைப்போல் நாமும் தந்தையாம் இறைவனிடம் ஒருமனப்பட்டுச் செபிக்கவும், அவருக்காய் நாம் செய்யும் பணிகள் வெற்றிப் பெற இறையருள் வேண்டிடுவோம்.


*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகத்தில் தன் உயிருக்கு ஆபத்து வந்தபோது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எலியா ஓடுகின்றார். தான் அழைத்த குரலுக்குச் செவிமெடுத்த இறைவன், இத்துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கமாட்டாரா? என்ற நம்பிக்கைகூட இறைவாக்கினரிடம், இல்லாமல்போய்விட்டது. ஆனாலும் இறைவன் ஒரேப் மலையில் மெல்லிய ஓசையாக, இனியதென்றலாகத் தம்மை எலியாவுக்கு வெளிப்படுத்தியதை இன்றைய முதல் வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களை அவருடைய மக்களாக்கிக் கொண்டு, அவரின் மாட்சிமையை அவர்கள் நடுவே விளங்கச்செய்தார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்களை மீட்கத் தன் மகனையே அனுப்பினார். இனத்தாலும், உறவுகளாலும் ஒன்றான இஸ்ரயேல் மக்களுக்காகப் பெரிதும் கவலைக் கொள்ளும் திருத்தூதர் பவுலடியார் கூறுவதை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!

*மன்றாட்டுகள்*

 

1. அருளிரக்கத்தின் நாயகரே எம் இறைவா! எம் திருஅவையை இந்நாள் வரை எல்லாவித இக்கட்டுக்கள், இடையூறுகள், பிரச்சினைகள், கட்சி மனப்பான்மை இவற்றிலிருந்து விடுபட்டு உம் விண்ணக வாழ்வைச் சொந்தமாக்கிக் கொள்ளத் திரு அவையின் நல்மேய்ப்பர்களுக்கும், தூயஆவியின் துணையால் தொடர்ந்து உம் இறைபணி ஆற்றிடத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. கொடைவள்ளலே எமட இறைவா, எம் தமிழகத்தில் குறிப்பாக வெயிவின் வறட்சியால் அனைத்து மாவட்டங்களிலும் நீரின்றித் தவிக்கும் எம் மக்களின் தாகத்தைப் போக்கி நீர்வளம், நிலவளம் பெறுகவும் நல்ல மழைபொழிவித்து ஏழைவிவசாயிகளின் வாழ்வு வளம் பெற வேண்டி மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஆதரித்தாளும் எம் இறைவா, எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றதுமானச் சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடித் தம்மைக் காத்துக் கொள்ளவும், ஐயம் நீங்கி உம்மில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைத் தேட வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..

                                                   www.anbinmadal.org

Thursday, August 3, 2017

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 06.08.2017


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

தானியேல் 79-10,13-14
2 பேதுரு 1:16-19
மத்தேயு 17: 1-9

 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு. இயேசுவின் தோற்ற மாற்றம் விழா கலந்து கொண்டு இயேசுவைப்போல் நாமும் மாட்சிமை மிகுந்த மாற்றம் அடைய விரும்பி இவ்வாலயதிற்கு நல்வரவுத் தந்துள்ள அனைத்து இறைமக்களை அன்புடன் இனிதே வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தி நிகழ்வான இயேசுவின் தோற்றமாற்றத்தைப் பற்றி எல்லா நற்செய்தியாளர்களும் இயேசு எருசலேம் செல்லும் வழியில் இந்நிகழ்வு நடந்த்தாகவும் இயேசு தம் பாடுகளை முன் அறிவித்த பின்பு இந்நிகழ்வு நடந்த்தாகும் கூறியிருப்பது சற்றுக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். துன்பத்தின் முடிவில் இன்பம் உள்ளதைத் தோற்றமாற்ற நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகின்றது. சிலுவையின்றி உயிர்ப்பு இல்லை. அதுபோல் துன்பம் இன்றி மகிழ்ச்சி இல்லை.
இயேசு எந்த அளவுக்கு இறைத்தன்மையோடு விளங்கினாரோ அதே அளவு மனித் தன்மையோடு விளங்கினார். நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவருக்கு இருந்தன. அவரும் தன் வாழ்வில் ஒரு சராசரி மனிதனாக இன்பத் துன்பங்கள் வேதனை, சோதனைகள், மனக்குழப்பம், விருப்பு வெறுப்புகள் என்றும் அனைத்தையம் எதிர்கொண்டார்.
இயேசு தந்தையோடு செபவாழ்வில் ஒன்றித்திருந்ததே அவரின் வெற்றிக்குக் காரணம். எனவே நாமும் இத்தைகையச் செபஉறவில் தந்தையோடு நிலைத்திருந்து இயேசுவின் பாதையில் வழி நடந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இரவில் தான் கண்டக் காட்சிகளைப் பற்றி விவரிக்கின்றார். இன்றைய நற்செய்தி நிகழ்வுகளுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் மானிட மகன் அங்கு வரப்பட்டதும், அவருக்கு ஆட்சியுரிமையும் மாட்சியும் வழங்கப்பட்டது மற்றும் அவரது உடை வெண்பனி போலவும் இருந்தது எனப் பல நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகம் இன்றைய நற்செய்தி ஆண்டவரின் தோற்றமாற்றத்திற்குச் சாட்சியாக அமைகின்றது. ஏனெனில் திருத்தூதர் பேதுரு தன் காட்சிகளை மக்களுக்கு “பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அஃது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது” என்று விவரிக்கின்றார். தந்தை தன் மகனில் பூரிப்படைந்ததையும், அவர்கள் கண்ட மாட்சிமையையும், இறைவாக்கினர்களின் கூற்று மெய்யானது என்று மகிழ்வுடன் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
திருப்பாடல் 97: 1-2. 5-6. 9

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். *பல்லவி*
ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. *பல்லவி*
ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


*அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் அல்லேலூயா!*

*மன்றாட்டுகள்*


1. மகிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா! கிறிஸதுவும் தன் மனிதவாழ்வில் எதிர்கொண்ட இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்பு, வேதனைகள், சோதனைகள் அனைத்தையும் இறைவேண்டல் மூலம் எப்படி வென்றாரோ போல உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் உமது இறைஆசியாலும் தமது இறைவேண்டுதலாலும் இயேசுவின் மகிமையிலும் மாட்சிமையிலும் பங்கு கொள்ளத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. என் அரசு இவ்வுலகைச் சார்ந்த்து அல்ல என்றுரைத்த எம் இறைவா! எம் இந்தியத் தேசத்தில் , குறிப்பாக வட மாநிலங்களில் உம் இறைப்பணிக்கு எதிராக வன்முறைகள் நடைப்பெற்றாலும் எம் இறைப்பணியாளர்கள் தியாக வாழ்வில் இறைபணிக்காக அர்ப்பணித்து, தங்கள் சொல்லாலும், செயலாலும் சான்றுபகரும் எடுத்துக்காட்டான வாழ்வ வாழவும், காயப்படுத்தியவர்களைத் தண்டிக்காமல் அவர்கள் உம் அன்பின் வழியைப் பின்பற்றி மனமாற்றம் அடைந்தவர்களாக வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புத் தந்தையே எம் இறைவா! புனித வியான்னி ஆர்வமிக்க மேய்ப்புப் பணியாளராகவும், பங்குதந்தையாகவும் வாழ்ந்து போல் எம் பங்குதந்தையாகள் அர்ப்பணத்திலும், அருள் வாழ்விலும், சிறந்த மேய்ப்புப் பணியாளராக வலம் வரவும், எங்கள் பங்குகளிலே பங்குத் தந்தையருக்கும் மக்களுக்குமிடையே நல்லுறவு நாளும் வளரச் செய்யவும் உம் அருள் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இன்பத்திலும் துன்பத்திலும் எங்களோடு இருக்கும் எம் இறைவா! துன்பத்தின் முடிவில் இன்பம் உண்டு என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களின் துன்ப வேளைகளில் இயேசுவைப் போல் உம்மோடும் செபத்திலும் இன்பவேளையில் நன்றியுடன் மகிழ்ச்சியில் உம்முடன் ஒன்றித்து வாழவும், அன்பில் எல்லோரிடமும் கலந்து இறைமகன் இயேசுவின் சாட்சியாய் வாழ உமதருள் வேண்டி மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

5. அமைதிக்கும் ஆறுதலுக்கும் ஊற்றாகிய எம் இறைவா, எம் இளையோர் தம் இளமையில் உம்மைத் தேடவும் துன்பவேளையில் வழிதவறிவிடாமலும், பொறுமையுடன் இருந்து இன்பத்தை வெற்றிகனியாகத் தம் வாழ்நாட்களில் பெற்றுப் பிறருக்குப் பலன் தரும் கனியாக மாறிட ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                                     www.anbinmadal.org