Monday, August 17, 2026

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 23.08.2026

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 23.08.2026
Jesus é o Senhor!: EVANGELHO SÃO MATEUS 16:13-20 - 21° DOMINGO O TEMPO  COMUM - ANO "A" 2014 - 24/08/2014

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "அதிகாரம்" மற்றும் "அறிக்கை" ஆகிய இரண்டு முக்கியக் கருத்துகளை நமக்குத் தருகிறது. நற்செய்தியில், "மானிட மகனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு, பேதுரு "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று மிகச்சிறந்த விசுவாச அறிக்கையைச் செய்கிறார். இதற்காக இயேசு பேதுருவைப் பாராட்டி, திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பையும், விண்ணரசின் திறவுகோல்களையும் அவரிடம் ஒப்படைக்கிறார்.
முதல் வாசகத்தில், தகுதியற்ற செபுனாவிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, எலியாக்கிமிடம் ஒப்படைக்கப்படுவதைக் காண்கிறோம். அதிகாரம் என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கல்ல, அது பொறுப்புடன் சேவை செய்வதற்கே வழங்கப்படுகிறது. கடவுளின் ஞானம் அளவிட முடியாதது என இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் வியக்கிறார். நாம் இயேசுவை எப்படி அடையாளம் காண்கிறோம்? அவரே என் வாழ்வின் மெசியா என்று சொல்லும் துணிவை வேண்டிக் கொண்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எருசலேமின் மேலாளராக இருந்த செபுனா தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதால், ஆண்டவர் அவரைப் பதவியிறக்கம் செய்கிறார். அவருக்குப் பதிலாக எலியாக்கிம் என்பவரைத் தேர்ந்தெடுத்து, அதிகாரம் மற்றும் பொறுப்பின் அடையாளமாகத் தாவீது குடும்பத்தின் திறவுகோலை அவர் தோள்மேல் வைக்கிறார். அதிகாரம் என்பது கடவுள் தரும் கொடை என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் செல்வம், ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? அவரது முடிவுகள் யாராலும் ஆராய முடியாதவை. அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன என்று கடவுளின் மாட்சியைப் புனித பவுல் அடியார் போற்றும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா” என்கிற வாக்குறுதியோடு திருஅவையை நிறுவிய இறைவா! எங்கள் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய எங்கள் அனைவரையும், தீமை அனைத்திலுமிருந்து விடுவித்து, நம்பிக்கையிலும், எதிர்நோக்கிலும், அன்பிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்துலகின் அரசரே இறைவா! அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன; உம்மாலேயே உண்டாயின; உமக்காகவே இருக்கின்றன என்பதை உணர்ந்து, எமை ஆளும் தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், உமக்கே பணிந்து வாழவும், நீதி, நேர்மை, வாய்மை ஆகிய விழுமியங்களைப் பேணி, பகைமையற்ற அமைதியான உலகை உருவாக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் முன்னெடுப்புகளால், மனிதமும் புனிதமும் மங்கி வருகின்ற இவ்வேளையில், “கடவுளின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!” என்பதை உணர்ந்து, எம்பிள்ளைகளும், இளையோரும், கருத்தாய் கற்று வாழ்வில் உயர்வதோடு நில்லாமல், அறிவைக் கடந்த ஞானத்தையும், ஞானத்தின் தொடக்கமாகிய இறையச்சத்தையும் கொண்டு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விண்ணகத்தின் திறவுகோலையும், மன்னிக்கும் அதிகாரத்தையும் திருஅவைக்கு தந்தருளிய இறைவா! குட்டித் திருஅவையாகிய ஒவ்வொரு குடும்பத்திலும், மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும்    புரிந்துகொள்ளுதலும் இருந்தால் மகிழ்ச்சியின் திறவுகோலும் எம்மிடம் இருக்கும் என்கிற உணர்வோடு, நாங்கள் அனைவரும், எங்கள் குடும்பங்களையும், அன்பியங்களையும், பங்குத்தளத்தையும் அன்பிலும் ஒப்புரவிலும் கட்டியெழுப்ப  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “ஆண்டவரே! நீர் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப்பாடலாக ஜெபித்த எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்களையும், இங்கே கூடியுள்ள எங்கள் அனைவரது அவசரத் தேவைகளையும் நீர் தாமே சந்தித்து, ஆசி அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment