Monday, January 30, 2023

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு 05.02.2023

 பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு  05.02.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 58:7-10
1கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்மைச் சுவையுள்ளவர்களாகவும், அனைவருக்கும் ஒளியாகவும் இருக்க அழைக்கின்றது. திருமுழுக்கின்போது நாம் உவர்ப்புடையவர்களாக உப்பைச் சுவைப்பதின் மூலமாக மாற்றப்படுகிறோம். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் வாழ்வான அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவைக் கூட்டி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உப்பின் உவர்ப்புத் தன்மை மாறினால் அதை என்ன செய்வது என்று இயேசு கேட்கிறார். அதற்குப் பதில் கடவுள் நம்மை மீண்டும் உப்பாகக் கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்.
திருமுழுக்கில் நாம் கையில் மெழுகுவர்த்தியைப் பெறும்போது அனைவருக்கும் ஒளியாக இருக்கிறோம். இயேசு நம்மை ஒளியாக இருக்க அழைக்கிறார். அது மற்றவர்களுக்குத் தெரியும்படியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மற்றவர்களின் வாழ்வில் இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். இருள் நடுவே நம் ஒளி உதிக்க வேண்டும். நற்செயல்களால் கடவுளுடன் இணைந்திடுவோம். இவரின் ஞானத்தையும் வல்லமையையும் பெற்றிட இத்திருப்பலியில் உப்பாய் ஒளியாய் கலந்திடுவோம் வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

நாங்கள் உண்ணா நோன்பிருந்தபொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று இறைவனிடம் முறையிட்டப் போலிப் பக்தர்களுக்கு, பசித்தோருக்கு உணவளித்தும் உறைவிடம் இல்லாதோருக்குத் தங்க இடமளிப்பதும், உடையற்றோருக்கு உடையை வழங்குவதுமே இறைவன் விரும்பும் நோன்பு உண்மையான நோன்பின் குறிக்கோளை விளக்கும் இறைவாக்கினர் எசாயா மூலம் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர்க்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மளிர்வர்.
திருப்பாடல்: 112: 4-5, 6-7, 8-9
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.  மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.  தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.  அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்… பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

நமது நம்பிக்கையின் அடிப்படைக் கடவுளின் வல்லமையே தவிர மனித ஞானம் அல்ல. இதன் அடிப்படையில் தூய பவுலடியார் தனது பணிவாழ்வை மேற்கொண்டார். போர்வீரனாக இருந்த அவர் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகவோ அல்லது ஞானம் பெற்ற அறிஞராகவோ இருந்தது இல்லை. ஆயினும் அவர் பறைசாற்றிய நற்செய்திகள் அனைத்தும் தூய ஆவியாரின் வல்லமையான செயல்களே என்று அழுத்தமாகப் பதிவுச் செய்யும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.  இருளில் ஒளியென ஒளிர்ந்திடு என்று அழைத்த எம் இறைவா! உம் திருச்சபையைத் தயவாய் கண்ணோக்கி, எம்திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் உலகின் மீட்புக்குத் தெளிவான அடையாளமாக உலகின் உப்பாகவும், ஒளியாகவும் எமது நற்செயல்களால் மற்றவர்களுக்கு உம் சாட்சிகளாக அமைத்தருள உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
2. வல்லமையும் ஞானமும் கொண்ட எம் இறைவா! மாந்தரின் அன்பரே, மனித முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏழைமக்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமைந்திடவும், உலகத் தலைவர்களும், நாட்டுதலைவர்களும் இவ்வுலகில் உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வின் வழிகாட்டியான எம் இறைவா! இன்றைய சூழலில் தேர்வுகள் எழுதத் தம்மைத் தயார் செய்து வரும் அனைத்து மாணவச் செல்வங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குத் தேவையான அமைதியான சூழ்நிலையும், நல்ல ஞாபகச்சக்தியையும், நல்ல உடல், உள்ள உறுதியையும் தந்து, அவர்கள் சிறப்பாகச் செயல்படப் பெற்றோர்களையும் ஊக்கிவிக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. வளங்களின் நிறைவே எம் இறைவா! எம்பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்னப நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும் திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும் ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையாக வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்
5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று உலகில் உம் திருஅவைக்கும், அதன் மக்களுக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகள், குற்றசாட்டுகள், இறையச்சம்யின்மையால் நேர்ந்திடும் ஆபத்துகள் போன்ற எல்லா இன்னல்களிலிருந்து எம்மைக் காத்து உலகமாந்தர்கள்  எங்களை இயேசுவின் சீடர்களாய் எம்மைக் கண்டு கொள்ளவும், உமது ஒளியில்  அனைவரையும் ஒன்று சேரும்படி இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தையும் உள்ள உறுதியையும் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, January 23, 2023

பொதுக் காலம் நான்காம் ஞாயிறு 29.01.2023

பொதுக் காலம் நான்காம் ஞாயிறு 29.01.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

செப்பனியா2:3, 3:12-13
1கொரிந்தியர் 1:26-31
மத்தேயு 5:1-12

திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! உங்கள் அனைவரையும் ஞாயிறுத் திருவழிப்பாட்டின் நாயகனாம் இறைஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்.
இன்றைய வழிபாடானது ஏழ்ழை வாழ்வும், எளிய மக்களின் குறைகளையும், வென்றெடுக்க, இறைவாக்கினர் செப்பனியா வழியாக யாவே கடவுள் அவரின் கட்டளைக் கடைபிடிக்கவும், நேர்மையையும், நீதியையும் நாம் வாழும் சமூகத்தில் நிலை நாட்டவும் தீமையை அறவே விட்டுவிட அழைப்பு விடுக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் திருத்தூதர் பவுலின் வழியாகக் கடவுள் எதற்காக நம்மை இவ்வுலக வாழ்விற்கு அழைத்திருக்கின்றார்? அந்த அழைப்பினை நாம் உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? கடவுள் திருமுன் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்முடைய ஞானமெல்லாம் கிறிஸ்துவினிடமிருந்தே வருகின்றது.
ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்ட கிறிஸ்து மலைமீது அமர்ந்து, ஏழைகள் இவ்வலகில் வாழச் இச்சமூகத்தில் தகுதி இல்லாதவர்கள் எனக் கருதபட்ட, அனைவரும் கடவுளின் பார்வையில் தகுதியுடையவர்களாகவும், பாராட்டுக்குறியவர்களாகவும் நற்சான்றுப் பெற்றவர்கள் என ஆறுதல் கூறும் அனைத்து வழிபாட்டு வாசகங்களும், இறைவன் தரும் இம்மாபெரும் விருந்திற்கு அழைக்கின்றார். அழைப்பின் குரலுக்குச் செவிச் சாய்த்துப் பங்கேற்போம் திருப்பலியில், வார்த்தைகளால் அல்ல! வாழ்வாகத் தொடர்வோம். வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் செப்பானியா எசாயாவிற்கு முன் வாழ்ந்தவர். இவருடைய காலத்தில் ஏழைகள் சமுதாயத்தில் அடிமைகளாக்கப்பட்டு அவதிக்குள்ளானர்கள். இத்தகைய சுழலில் செப்பானியா இறைவாக்கினர் எழைகளை நோக்கி விடுத்த அறைகூவல் தான் இன்றைய முதல் வாசகம். ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிக்க நேர்மையை நாட, மனத்தாழ்ச்சியோடு ஆண்டவரைத் தேட அழைக்கின்றார். மேலும் ஆண்டவரின் அழிவின் நாளில் ஏழைகளுக்கு அழிவு நேராது என்றும் ஆறுதல் சொல்லும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல்: 146: 7. 8-9a. 9bc-10
பல்லவி : ஏழையரின் உள்ளத்தோர் பெறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே.
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

யூதமக்கள் கிறிஸ்துவின் சிலுவை மீட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சிலுவை அவமானத்தின் சின்னம். ஆனால் அதன் மூலமாக வெற்றிக் கொண்டார். கிரேக்கர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உயிர்ப்பின் மூலம் மீட்பைத் தந்தார். நம்மை மீட்க மடமை என்று கருதியதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இறைமகன் தாழ்ச்சி கொண்டார். உலக ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமையைப் பாராட்டாமல் மனத்தாழ்ச்சி கொண்ட இயேசுவின் பெருமைப் பாராட்ட அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாரின் மன்றாட்டுகள்:-

1. எளிய உள்ளத்தோர் பேறுபெற்றோர் எனெனில் விணிணரசு அவர்களது என்று மொழிந்த எம் இறைவா! எம் திருஅவையின் அனைத்தும் வெறும் நிறுவனங்களாக அல்லாமல் உம் அன்புப் பணியினை அகில உலகின் எல்லா மாந்தர்க்கும், வேறுபாடின்றிப் பணியாற்றிடவும், துணைபுரியும் உதவிக்கரமாக நின்று செயல்படத் தேவையான எளிய மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்
2. துயருறுவோர் பேருபெற்றோர் என்று கூறிய எம் இறைவா! இன்று அகில உலகில் வல்லரசு நாடுகள் தங்கள் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தை ஏழைநாடுகள், வளரும் நாடுகள்மீது தங்கள் ஆதிக்கத்தை அதிகாரத்தைச் செலுத்தாமல் அவர்களின் எல்லா நல்ல திட்டங்களிலும், முன்னேற்றங்களிலும் துணையாளராக இருந்து அவர்களின் நல்வாழ்வுச் சிறந்து விளங்கிட உம் வார்த்தையை வாழ்வாக்கிடத் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கனிவுடையோர் பேறுபெற்றோர் என்று கூறிய எம் இறைவா! இன்றைய சூழலில் இரக்கம் நிறைந்த செயல்கள் குறைந்து, இரக்கமற்ற செயல்கள் அதிகரிக்கும் இவ்வேளையில் சிசுக் கொலைகள், வரதட்சனைக் கொடுமை, குழந்தையின்மையினால் திருமணௌறவுகள் பிரிந்து, ஆதரவற்றவர்களாய் வாழ்பவர்களுக்கு ஆறுதல் அளித்து உமிரக்கப் பெருக்கை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நீதிநிலை வேட்கைக் கொண்டோர் பேறுபெற்றோர் என்று உரைத்த எம் இறைவா! கிறிஸ்துவ வாழ்வில் போராட்டங்கள் உறுதி என்பதை உணர்ந்த நாங்கள், இன்றைய போராட்டமான வாழ்க்கைச் சூழலில் எங்கள் வாழ்வுக்குத் துணையாகவும், சோர்வுற்றுத் தடுமாறும் தருணங்களில் எங்களைத் தாங்கி, நாங்கள் நடக்க வேண்டிய பாதையைக் காட்டி உமது அன்பின் வழியில் வாழ்ந்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இரக்கமே உருவான எம் இறைவா! இக்காலச்சூழலில் இரக்கம், தூய்மை உள்ளம் படைத்தோர், நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர், இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத் துன்புறுத்தப்படும்போது உமது இரக்கப்பார்வை அவர்கள்மீதுப் பொழியட்டும். அடிமைதனத்திலிருந்து அன்று எம்முன்னோரை மீட்டவரே இன்று உம்மை மட்டுமே நம்பி வாழும் அனைத்து மக்களையும், இடிந்துபோன எம்வாழ்வை உமது பேராற்றால் வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கத்தை எம்மீதுப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, January 16, 2023

 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 22.01.2023

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு  22.01.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

எசாயா 9:1-4
கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23

முன்னுரை:-

பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இறைசாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பணிக்காக அழைக்கப்படுகிறோம். இயேசு தனது விருப்பங்களை இந்த மண்ணுலகில் மனித உறவுகளில் நிறைவுக் காணத் தனது சீடர்களை அழைக்கின்றார். மனமாற்றத்தைக் காணத்தான் இயேசு அழைக்கின்றார். உண்மை அழைத்தல் என்பது வெளிக்குறத் தோற்றத்தை வைத்துத் தீர்மானிப்பது அல்ல. மாறாக அடிப்படையில் மனநிலை மாற்றம் காண்பதோயகும்.இதனையே இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை மாற மனமாற்றம் முதலில் தேவை என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்.
அன்புள்ளம் கொண்டு நம்மைக் கரம் பிடித்து அழைத்த இயேசு கிறிஸ்து நம்முடன் கடைசி வரை இருக்கின்றார். இறைவனில் அழைத்தல் இல்லறமோ துறவறமோ எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்து நின்று வாழத் தேவையான வரங்களை இத்திருப்பலி வழியாக இறைவனிடம் மன்றாடுவோம். வாரீர்!

வாசகமுன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் பாழ்படுத்தப்பட்டதன் விளைவாக அம்மக்கள் அடிமைகளாய் முகவரி இல்லா மக்களாய் வாழ்ந்தபோது இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் அவர்களின் சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றினார். இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் பேரொளியை உதிக்கச் செயதார். மக்கள் அக்களிப்பதுபோல் களிகூர்ந்தனர் என்று இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்:-

பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.
திருப்பாடல்: 27: 1,4, 13-14
ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்?ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதிகொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

கொரிந்து நகர் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளால் யார் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்களும் தன்னலம் மிகுந்தபோக்கும் நிறைந்துபோனது. இவ்வாறு ஏற்றப்ட்டப் பிரிவினையால் வருந்தியத் திருத்தூதர் பவுல் நம் அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். எனவே நமக்குள் பிரிவினைப் பேதங்கள் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து மனமாற்றம்பெற முயற்சிப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நம்பிக்கையாரின் மன்றாட்டுகள்:-

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ, ஆதிதிருச்சபைக் கொண்டு வந்த அர்த்தமுள்ள, கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா! இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருளுள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மை அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம்போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று எம்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், விவசாயிகளின் தற்கொலைகள், வேலையில்லாத் தீண்டாட்டம், அதனால் ஏற்படும் பொருளாதார இன்னல்கள், ஆதரவற்ற முதியோர்கள், ஏழைகள்மீது உமது இரக்கத்தைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, January 9, 2023

பொதுக்காலம்இரண்டாம் ஞாயிறு 15.01.2023

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 49:3,5-6
1கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34

திருப்பலி முன்னுரை

இன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
“கடவுளின் ஆட்டுடிக்குட்டி” என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை “நானும் கண்டேன்” என்று பதிவுச் செய்கிறார்.
இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.
பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும், இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்’ (எசா 49:6) என ஒவ்வொருவரும் பணிபுரிய அழைக்கப்படுகிறோம் என இறைவாக்கினர் எசாயா, இன்றயை முதல் வாசகத்தின் மூலம் அறைகூவல் விடுக்கின்றதைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9
பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.  எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி
என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;  என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;  உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

 கொரிந்து திருச்சபை நேர்மறையான புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக்கேடானவர்களுக்கும், பிரிவினைச் சிந்தனை உள்ளவர்களும், நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராகச் சண்டையிட்டுக்கொண்ட மனிதர்களும் அடங்கிய திருச்சபை. இருப்பினும் புனித பவுல் அவர்களைத் "தூயவர்கள்’ என்று அழைக்கிறார். அதாவது நாம் எவ்வளவுதான் தீமைகளிலும், பாவத்திலும் வாழ்ந்தாலும் இறைவனது பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் இருப்பதையே சுட்டிக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்…


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்

1. சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா! உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம்மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் அனைவரையும் இயேசுவின் சீடர்களாய், அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம்மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம்குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. எங்களைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழும் எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாய் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும்  அருள் வரம் தர வேண்டுமென்று இறைவாஉம்மை மன்றாடுகிறோம்.


4. உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா! உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. எம்வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா! எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Sunday, January 1, 2023

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா -08/01/2023

ஆண்டவரின்  திருக்காட்சி - பெருவிழா


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1.ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!
நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர்.
பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்க வேண்டும்” என்கிறார்.
அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப் போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...

வாசக முன்னுரை

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின்போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். கடவுளின் மாட்சிமை ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் அந்த ஒளியைத் தேடிவருவார்கள். செல்வங்கள் தேடிவரும். மக்கள் பொன், நறுமணப் பொருள் ஏந்தி வருவதைக் கண்டு எருசலேம் நகர் அகமகிழ்ந்திடும். அவர்கள் கடவுளைப் புகழ் பாடுவார்கள் என்று முன்னுரைத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  பல்லவி.
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார்.  பல்லவி
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  பல்லவி
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.  பல்லவி

இரண்டாம் வாசகம்

 திருத்தூதர் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளைப் பற்றி எடுத்துரைக்கின்றார். நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்று இயம்பும் இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா! உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா! நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப் போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்தில் உள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள்  உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமைப் படைத்து ஆளும் எம்தலைவா! இயற்கை சீற்றத்தால் நாள்தோறும் அவதிக்குள்ளாகிய விவசாயப் பெருமக்களுக்கு வேண்டிய உதவிகள் விரைவில் அவர்களுக்கு முழுமையாகச் சென்று அடையவும், அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிட, மீண்டும் அவர்கள் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்பிட உம் வரங்களை  அருள்மாரிப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, December 27, 2022

 புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி 01-01-2023

 புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி

அன்னை மரியாள் இறைவனின் தாய்

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. எண்ணிக்கை6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

 திருப்பலி முன்னுரை

அன்பு இறைமக்களே!
புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.
பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாளென மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.
ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!
இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்:
நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இரையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!
ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நிறை அமைதியைப் பெறுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!

 வாசக முன்னுரை

 முதல் வாசகம்

 புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. ஒன்று கடவுளை ஆண்டவர் என்று திரும்பத் திரும்ப அழைப்பதால் வரும் ஆசீர்!  இரண்டு அவரது முகத்தின் திருவுருவின் காட்சி ஓர் ஆசீர்! மூன்று நிறைஒளி ஆசீர்!  அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில் அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1-2, 4, 5,7
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

 இரண்டாம் வாசகம்

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம்தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

2 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்முறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

3.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளுமின்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

4. எம்பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், நாடு இழந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட, உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துப் படைப்பின் மேன்மை உணர்ந்து, இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி. எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து, எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராகக் கொடுத்து, அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...


www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, December 19, 2022

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2022

 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா-
இரவில் திருப்பலி



இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

இரவுத் திருப்பலி வாசகங்கள்

I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,
இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?
துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.
நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!

வாசக முன்னுரை-

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11)
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்றத் தம்மையே ஒப்படைத்தத் தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியாரின்  வார்த்தைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸ்து கொடுத்த எம் இறைவா! விண்ணகம், மண்ணகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த 2023ஆம் ஆண்டில் உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் எமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.

2. ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா! இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்களைக் கடும் வெயில், வறட்சி, புயல், பெரும்மழை போன்ற பல்வேறு இயற்கைசீற்றங்கள் அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்! இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம்முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலையும் வாழ்வுக் கொடுக்க இறங்கி வந்த எம் இறைவா இன்று இவ்வுலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர் மற்றவருக்கு உதவக்கூடிய பிறரன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வு வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்தனைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து, இவையெல்லாம் நம்வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

✨நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.✨

விடியற்காலத் திருப்பலி

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:

விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செயல்கள் வழிவகுக்கும்.!
இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமார கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,6. 11-12
பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

✨நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.✨

பகல் திருப்பலி

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:

விடியற்காலையில் வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செயல்கள் வழிவகுக்கும்!
இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமார கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளைக் காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை அழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதைக் காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
 
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவுள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

✨நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.✨

💌 வாட்ஸ்ஆப் வாழ்த்து மடல்கள் 💌
உங்கள் நண்பர்களுக்கான வாழ்த்துமடல்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புதற்காக...
whatsapp-greetings in Tamil


மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.


அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்! 

www.anbinmadal.org


Print Friendly and PDF