Wednesday, January 31, 2018

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு – 04-02-2018


*பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு – 04-02-2018*


*இன்றைய வாசகங்கள்*:


*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறைகுலமே, இறைஇயேசுவில் நலம் பெற உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
ஒருவர் குணம் அடைவது, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன. துன்பத்தின் சுமைத் தாங்க முடியாமல் தனிமையில் புலம்பிய யோபு இறுதியில் இறைவனிடம் சரணடைந்தார். அவர் வேதனைகளும், சோதனைகளும் சுகமாய் மாறின. நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு என்று பனித பவுல் உரைத்ததைத் தன் வாழ்வாக மாற்றி இம்மண்ணில் மறைச்சாட்சியாக மரித்த புனித அருளானந்தரை இன்று நினைவுகூறுவோம்.
கடந்த நான்கு வாரங்களாகக் குணமளித்த இயேசுவைப்பற்றி நற்செய்தியில் கேட்டு வந்த நாம் இன்றும் அவரை குணமளிக்கும் வல்லவராகக் காண்கிறோம். ஆம் இயேசு வெறும் வார்த்தைகளால் மட்டும் நற்செய்தியைப் பறைச்சாற்றவில்லை. மாறாகத் தம் செயல்களால், வாழ்வால் அதை அறிவித்தார். அவரின் குணமளிக்கும் வல்லமையால் உடல் நோயிலிருந்து புறவிடுதலையோடு பாவத்திலிருந்து அகவிடுதலையும் தந்தார்.
இவ்வாறு தனது இறையரசுப் பணியில் இம்மை வாழ்வையும், மறுமை வாழ்வையும் ஒன்றிணைத்து வாழ்வாலும் வார்த்தையாலும் போதித்துத் தானே நடமாடும் நற்செய்தியானார். நாமும் இயேசுவைப் பின்பற்றி நடமாடும் நற்செய்திகளாக மாற இன்றைய திருப்பலியில் மனதார வேண்டிடுவோம்.

*முதல் வாசக முன்னுரை*:


வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத துன்பத்தில் எல்லோருமே சிக்கித் தவிக்கிறோம். இவ்வாறே இன்றைய வாசகத்தில் துன்பத்திக் சுமை தாங்க முடியாமல் தனிமையில் புலம்பி அழும் யோபு இறுதியில் இறைவன் என்னைக் கொன்றாலும் அவரிடத்திலே நம்பிக்கை வைப்பேன் என்று தஞ்சமடைகிறார். எல்லாம் மறைந்துச் சுகமான சுமைகளாகவே மாறின. இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவனில் நாமும் நம்பிக்கைக் கொள்வோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*:


நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு. எத்தனை இடர்கள் வந்தாலும் அதிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன். அப்பணியில் என்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டு நான் எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்று கூறும் புனித பவுலடியார், இறைச்செய்தியை வார்த்தைகளால் போதிக்காமல் தன் வாழ்வால் போதித்தது போல அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் நற்செய்தியாவோம்.

*பதிலுரைப்பாடல்*


திபா 147: 1-2, 3-4, 5-6
பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.

நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி

நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி
 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்.  அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*:


1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையான பக்தியும் அமைதியும் அளிக்கும் இறைவா! எம் பங்கில் அன்பியங்கள் வழியாக உமது இறைநம்பிக்கை வளரத் தலைவர்களும், உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுப்பதிலும், மன்னிப்பதிலும், சமுக, பொருளாதர உதவிகள் செய்வதிலும், வேதனைகளிலும், சோதனைகளிலும் ஆறுதலாகவும் இருந்து எங்களுக்கு அடுத்திருப்போருக்கு இயேசுவின் நற்செய்திகளாய் வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் பேரின்பமாகிய இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை, வேலையின்மை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றென்றும் இரக்கமுள்ள இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், இறைநம்பிக்கையில் வளரவும்  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment