Wednesday, January 10, 2018

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - 14-01-2018

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு  - 14-01-2018


பொங்கல் பெருவிழா

இன்றைய வாசகங்கள்:


1 சாமுவேல் 3: 3b-10, 19   ++  1 கொரிந்தியர் 6: 13-15,17-20 ++  யோவான் 1: 35-42

திருப்பலி முன்னுரை:


இன்று தமிழகத்திலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர் சமுதாயங்களிலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து இறைவனின் கருணையால் நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது.

பொங்கிவரும் மகிழ்வில் நீர் தெளித்து அடக்கிவிடும் கடந்த கால நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில் நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம். வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. மாறாக அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

நம்மிடையே உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும்  வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில் நாம் ஒருவரை ஒருவர் இறைவனுக்கு அறிமுகம் செய்வதற்கு இறைவன் நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடுவோம். உடன்பிறந்தோரும், உறவுகளும், ஏன் இந்த உலகம் முழுவதுமே உன்னதமான வரலாறு படைக்க வேண்டும் என்றும் இந்தப் பொங்கல் திருநாள் திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


மனுக்குலத்தை மீட்க விழைந்த இறைவன் சாதாரண மனிதர்கள் வாயிலாகவே அதனை நிறைவேற்ற விழைகிறார். இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை இறைவன் பெயர் சொல்லி அழைக்கிறார். இறைவனின் அழைத்தலுக்குத் திறந்த மனத்துடன் தான் கீழ்படியத் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாமுவேல் ஆண்டவரே! பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று குரு ஏலியின் தூண்டுதலோடு பதில் கூறுவதைப் போலவே நாமும்  இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளும் மனதினைப் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


பாவ வாழ்வை விட்டு இறைவனை முழுமையாகப் பற்றிக் கொண்டு வாழ வேண்டும். உங்கள் உடல் தூய ஆவியின் ஆலயம் என்கிறார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல். கடவுள் நம்மை கிறிஸ்து என்னும் விலையைக் கொடுத்து மீட்டுள்ளார். நம் உடல் கிறிஸ்துவின் உறுப்பு. எனவே கிறிஸ்துவை நம் உடலின் மகிமைப்படுத்த வேண்டும் என்ற இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

திபா 40: 2,3. 6-7. 7b-8. 9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். -பல்லவி

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, `இதோ வருகின்றேன்.' -பல்லவி

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா.


மன்றாட்டுகள்:


1. விண்ணையும் மண்ணையும் ஆண்டு நடத்துகிறவரே! எம் இறைவா! எம் திருஅவையில் துறவு வாழ்வுக்கும் குருத்துவ வாழ்வுக்கும் அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் இடத்தில் இருந்து இறைமக்களுக்குப் போதிக்கவும், புனிதப்படுத்தவும் ஆயர்களாக இருந்து வழிநடத்தவும் அவர்களது வாழ்வாலும், வார்த்தையாலும் இறையனுபவம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லாம் வல்ல இறைவனே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உமது அழைப்பின் மேன்மையை உணர்ந்துத் தங்களின் வாழ்வில் உமது குரலைக்கேட்டு உமக்குச் சாட்சிகளாக, அதன் மூலமாக மற்றவர்கள் உம்மை அறிந்து கொள்ள நேரிய வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எம்மை அரவணைத்து வழியில் நடத்திடும் எம் இறைவா! எம் நாட்டில் சிறுபான்மையினாகக் கருதப்படும் மக்கள் தம் விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள பல்வேறு அச்சுறுத்தல்களையும், இடையூறுகளையும் கடந்து மதசுதந்திரத்துடனும், ஒருவரை ஒருவர் அன்பினால் பிணைத்துக் கொள்ளவும், சிறப்புடன் வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், நடக்கவிருக்கும் இளைஞர்கள் அகிலஉலகப் பேரவைச் சிறப்புடன் நடைபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




பொங்கல் சிறப்பு திருப்பலிக்கு கீழ்கண்ட பக்கங்களையும் பார்வையிடவும்



No comments:

Post a Comment