Wednesday, January 17, 2018

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - 21-01-2018

*பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - 21-01-2018*


*இன்றைய வாசகங்கள்*:


யோனா  3:1-5 10
1 கொரிந்தியர் 7:29-31
மாற்கு 1:14-20
 

*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே, உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுமையாகச் சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. "காலம் நிறைவேறிவிட்டது" - 2000 வருடங்களுக்கு முன்பு அல்ல. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அல்ல, இப்பொழுதே உங்கள் வாழ்வில் இயேசு தேவையாக இருக்கிறார்.
"இறையாட்சி நம் கைகளில்" - கடவுளிடமிருந்து நமக்கு என்ன தேவையோ, அஃது இங்கே நம் கைகளில் தயாராக இருக்கிறது.
"மனம் மாறி , கடவுளின் நற்செய்தியை நம்புங்கள்" என்பதற்கு அர்த்தம், "என் பின்னால் வாருங்கள், என்னிடமிருந்து கற்றுக் கொண்டு, என்னைப் போல் மாறுங்கள்" என்பதாகும். முதல் சீடர்களுக்கு , உங்களிடம் உள்ளது அனைத்தையும் துறந்து விட்டு, எல்லா நேரத்திலும், இயேசுவோடு, முழு வாழ்வும் அவரோடு இணைந்து செயல்படவேண்டும்" என்று சொல்லப்பட்டது. அதையே தான் நமக்கும் இன்று நற்செய்திக் கூறுகிறது: இயேசுவின் பின் நாமும் செல்ல வேண்டும்.
இன்றைய நாகரீக உலகில், இயேசுவை விட , நவீன எலக்ட்ரானிக் கருவிகளோடு தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம், மேலும் அதையே நம்பியிருக்கிறோம். நம்மில் பலர், திருப்பலியில் கூட ஒன்றிணையாமல் தங்கள் செல்போனிலேயே கவனமாக இருக்கின்றார்கள். இன்று போல் நாளை இராது. எனவே இன்று நாம் ஞாயிறன்று, இயேசுவோடு நேரம் செலவழித்து, நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ளவோம்.
இவ்வுலகிலேயே இறையரசின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள, நாம் மனமாற்றம் அடைந்து இயேசுவைப் பின் செல்ல இத்திருப்பலியில் இறைவனிடம் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.


*வாசக முன்னுரை*:


*முதல் வாசக முன்னுரை*:

இன்றைய முதல் வாசகத்தில் தன் ஊழியன் யோனா மூலம் நினிவே நகரத்து மாந்தார்களுக்கு மனமாற அழைப்பு விடுக்கின்றார் கடவுள். நினிவே மக்கள் இறைவாக்கினரின் எச்சரிக்கையை ஏற்று நினிவே நகர மக்கள் சாக்கு உடையணிந்து நோன்பு இருந்ததால் கடவுள் அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். அவர்கள் மனமாறமடைய வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இந்த இரக்கத்தின் ஆண்டவருடைய அழைப்பைத் தரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:

புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் பொருந்து நகரமக்களுக்கு உலகச் செல்வங்களைப் பயன்படுத்துவோர், உலகக் காரியங்களில் ஈடுபடுவோர் அவற்றில் மூழ்கிவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இப்போது இருப்பதுபோல் அது நெடுநாள் இராது என்று அறிவுறுத்துகின்றார்.  இந்த வாசகத்தின் கருத்து அன்று மட்டுமல்ல இன்று உண்மையாகவே உள்ளது. எனவே கவனத்துடன் கேட்போம் என்றும் மாறாத இறைவனின் அழைப்பை..


*பதிலுரைப்பாடல்*

திபா 25: 4-9, 6-7, 8-9
பல்லவி: ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*:

1. எம் அன்புத் தந்தையே ! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது மனமாற்ற நற்செய்தியினை உணர்ந்து தங்களின் வாழ்வால் மற்றவர்களுக்கு அழைப்பின் மேன்மையை உணரச் செய்யும் இயேசுவின் சீடர்களாய் ஒளிர்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரவணைக்கும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் நினிவே மக்களைப் போல் மனமாறி இவ்வுலக நாட்டங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டு புதுவாழ்வுப் பெற்றிட உம்மில் என்றும் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. கரிசனை அன்பு மிகுந்த தந்தையே! எம் இறைவா! உலகெங்கும் துன்புறும் திருஅவைக்காகவும், உம் பணியாளர்கள் படும் வேதனைகளிலும், அவர்களின் நோயிலும், அச்சுறுத்தலிலும் உடனிருந்து அவர்களைக் காத்து நலமுடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருஅவையின் அச்சாணிகளாய் இளைஞர்களை உருவாக்க அவர்களின் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறவும், தம் தூயவாழ்வால் இவ்வுலகம் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்ற இயேசுவின் சீடர்களாய் மாறிடத் தேவையான ஞானத்தையும், திறமைகளையும், மன உறுதியையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment