Tuesday, October 23, 2018

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

                            ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு 
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெறும் இஸ்ரயேல் மக்களை இறைவன் எப்படி வழிநடத்திச் செல்வார் என்று எரேமியா இறைவாக்குரைக்கிறார். அழுகையோடு அவர்கள் வந்தாலும், ஆறுதலோடு அணைத்துக் கொள்வார் இறைவன் என இறைவனின் புதிய வாக்குறுதியை முன்வைக்கின்றார் எரேமியா.

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் இத்திருமடலின் ஆசிரியர் அவர் எப்படித் தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். இயேசுவுக்கு இந்த அழைப்புக் கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர்.' என்று கடவுள் அவரைத் தேர்ந்துக் கொள்கிறார். தான் தெரிந்து கொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்து முடிக்கின்றார்.

'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்குப் பயன்படுத்தாத ஒரு தலைப்பை இங்குப் பயன்படுத்துகிறார் மாற்கு. . 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்ற மன்னிப்பு வழிபாடு உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்துதான். 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வைப் பெறுவதற்குமுன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார்.

ஆக, மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும். இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்குத் தெளிவு என்னிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகம்


இன்றைய முதல் வாசகத்தில் பாரவோன் அடிமைத்ததனத்தில் அல்லலுற்றத் தன் மக்களை இறைவன், மோசேயின் தலைமையில் ஒன்றிணைத்துப் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். அழைத்தவர் விடுத்த கட்டளைகளை மறந்தார்கள். அவர்களுக்குப் புது வாழ்வுத் தர இறைவாக்கினர் எரேமியாவை அழைத்தார். அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவோன் என்று கூறும் நம் கடவுள் நம்மை ஆதரித்து வழிநடத்தும் உண்மைத் தந்தை இந்த நம்பிக்கைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.இரண்டாம் வாசகம்


இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படித் தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். நம் வலுவிக்மையைப் போக்க இயேசுவுக்கு அழைப்பு வந்ததைப் போன்று நாமும் பிறருடைய துன்பங்களைப் போக்க இயேசு நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்திபா 126: 1-2. 2-3. 4-5. 6

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

"ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி
விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியி்ன் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தாரும், பொதுநிலையினர் அனைவரும் மனம் திரும்புவதற்கு நற்செய்தி விடுக்கும் அழைப்பை ஏற்று, எளியோருள் எளியோராக மாறி, பணிபுரிய வேண்டும் என்ற இயேசுவின் அழைப்பைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்த வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் நம்பிக்கையான எம் இறைவா! நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்றுக் கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் நண்பனே எம் இறைவா! இன்று எம் பாரதநாட்டில் ஏழைகள் நசுக்கப்பட்டு அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் இல்லாமல் விவசாயம் நலிந்து அவர்கள் நேரிடையாக விற்பனைச் செய்யமுடியாத நிலை, அரசால் கொடுக்கப்படும் மானியம் மறுக்கப்படுதல் மின்பற்றாக்குறை இவற்றால் அவதிப்படும் என் மக்களுக்கு நல்வாழ்வு ஏற்றம் பெற்று அவர்கள் சிறப்புடன் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.இன்றைய நவீனக் காலத்தில் உலகில் இவ்வுலக மகுடங்களைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், சிலுவையை மகுடமாகவும், தன் உயிரைப் பிறருக்கு வழங்குவதை வாழ்வின் நோக்கமாகவும் இயேசு முன்வைத்தார் என்பதை உணர்ந்து எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நாம் சிறப்பிக்கும் 92வது மறைபரப்புப்பணி நாளான இன்று, "இளையோருடன் இணைந்து, நற்செய்தியை அனைவருக்கும் கொணர்வோமாக" என்ற தலைப்பில் இளையோரை மையப்படுத்தி, உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றுவரும் வேளையில் இளையோருடன் இணைந்து, நற்செய்தியை உலகெங்கும் கொண்டு சேர்க்க, திருஅவை எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பெற்று இறைசாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment