Monday, October 29, 2018

அக்டோபர் 31 2018 செபமாலை மாத நிறைவு நாள் திருப்பலி

அக்டோபர் 31 2018 செபமாலை மாத நிறைவு நாள் திருப்பலி.


திருப்பலி முன்னுரை


இன்று செபமாலை மாதம் முடியும் தறுவாயில் அன்னை மரியாளுக்கு மரியதையும், வணக்கமும் செலுத்த வந்துள்ள இறைமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வானத்தூதரின் மங்களச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மரியாவின் அச்சமும் அதற்கு வானத்தூதரின் பதிலும், மரியாவை உம் வார்த்தையின்படியே என்று ஏற்றுக் கொள்ளவைத்தது. வானத்தூதரின் வார்த்தையை ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிக்கொண்டார்”. இந்த மகத்தானச் செயலுக்கு மரியாவின் தாழ்ச்சித் தான், இவ்வுலகின் பெரும் மாற்றத்தை உருவாக்கி, ஒட்டு மொத்த மனித இனத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து நமக்கும் இவ்வார்த்தை அளிக்கப்படுகின்றது. நாமும் அடுத்தவருக்காக நம்மையே அளிக்க முன்வருவோம். செபமாலையைத் தொடர்ந்திடவும். அன்னையின் சீடர்களாய், அவரது மகன் இறைஇயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட இன்றைய திருப்பலியில் செபிப்போம்.


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் ஆகாசு அடையாளம் கேட்க மறுத்தபோதிலும் ஆண்டவராகிய கடவுள் நமக்கு மீட்புக்கு ஓர் ஆண்மகவைத் தருவதாக வாக்களிக்கின்றார். கடவுளகிய நான் எள்றும் உங்களோடு இருப்பேன் மரியாளை முன்குறித்துக் கூறியதைக் கவனமுடன் கேட்போம்.


முதல் வாசகம்
எசாயா 7: 10-15,8:10இ



அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார். அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.


*பதிலுரைப்பாடல்*



யூதி 13: 18அஆ  19-20அ  (பல்லவி 15:9ஈ)

*பல்லவி:  நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!*


1.“மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி!  பல்லவி

2.கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது. இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக;  பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பவுல் இறைமகன் இயேசு பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் இருப்பார். இதன் மூலம் நாம் கடவுளின் உரிமைப்பேறு உடையவர்களாக இருப்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகம்:
கலாத்தியர் 4:4-7


சகோதரர் சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.


*நற்செய்திக்கு முன் வாழ்த்துரை*


அல்லேலுயா, அல்லேலுயா அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்.பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்! அல்லேலுயா, அல்லேலுயா

நற்செய்தி 
லூக்கா 1:39-47


அக்காலத்தில் அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது”.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய இறைவா! திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் அன்னை மரியாளின் கருசணை அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.அன்னை மரியாளை முன்மாதிரியாகத் தந்த இறைவா!, செபமாலை மாதம் முழுவதும் பெற்ற மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் பகிர்ந்துக் கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பைப் பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த அன்னை மரியாளின் பண்புகளை ஏற்று வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற அன்னை வழியாக அழைத்த இறைவா! நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

*குறிப்பு : இன்றைய வாசகங்கள் திருப்பலிப் புத்தகத்திலிருந்து அன்னை மரியாளுக்கான திருப்பலிகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.*






No comments:

Post a Comment