Tuesday, August 6, 2019

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


சாலமோனின் ஞானம் 18:6-9
எபிரேயர் 11:1-2,8-19
லூக்கா 12: 32-48

திருப்பலி முன்னுரை:

 

தெய்வத்தின் திருப்பாதங்களில் அமர்ந்துப் பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் கலந்துக்கொள்ள வந்துள்ள அன்புள்ளங்களே! இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்...
கிறிஸ்துவ வாழ்வின் மையமே நம்பிக்கைத் தான். அந்த நம்பிக்கைத் தான் ஆபிரகாமைக் கடவுளோடு ஒன்றிணைத்தது. அதே நம்பிக்கைதான் நோய்களைக் குணமாக்கியது. பாவிகள் மன்னிப்புப் பெற்றதும், இறந்தவர் உயிர் பெற்றதும் இந்த நம்பிக்கையில்தான்..
இன்றைய காலக்கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின் அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலைமாறத் தான் எங்கிருந்தோ ஓர் ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை நடசத்திரமாக இயேசு தோன்றுகிறார். ”சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம் உங்கள் பரம தந்தையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்” என்று அழைக்கின்றார்.
நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதியான நம்பிக்கையில் விழிப்போடு செயல்படும் பணியாளர்களாக மாறவும் உயிரேட்டம் நிறைந்த செயல்பாடுள்ள வாழ்வு வாழ்வதற்காக வேண்டிய ஞானத்தையும் அருளையும் பெற்றுக்கொள்ள இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம்.. வாரீர்.

வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:

 

இறைவனின் நம்பகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு அவரின் வாக்குப்பிறழாமை. அதற்கு ஓர் உதாரணம் தருகின்றது இன்றைய முதல் வாசகம். எங்கே நம்பிக்கை உண்டோ, அங்கே அச்சமோ, பயமோ, அதிர்ச்சியோ, குழப்பமோ இருக்காது. நல்லவர்கள் இறைவனின் மீட்பைப் பெறுகின்றனர். கடவுளின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள் என்று சாலமோனின் ஞானம் கூறுவதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:

 

'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கைக்கு வரையறைத் தருகின்ற திருத்தூதர் பவுல் தொடர்ந்து, ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கைப் பற்றி எழுதுகின்றார். நாடு, மக்கட்பேறு, மகன் என மூன்றும் அவருக்குக் கிடைத்தது அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் பயனாலே என்கிறார். இறைவனின் நம்பகத்தன்மை உணர்ந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கைக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்


ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

திருப்பாடல் 33: 1,12. 18-19. 20, 22

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

 

1. ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா! திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும், செயலாலும், தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று, பணிபுரியவே என்று எம் கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் நாயகரே! எம் இறைவா! உம் நாட்டை ஆளும் தலைவர்கள் இனம், மொழி, சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும், ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம் தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும், தீவிரவாதம், சாதியின் பெயரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி, அவர்களின் செல்வங்களைச் சுரண்டி, தங்களின் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப் போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே! எம் இறைவா! விதவைகள்,அனாதைகள், கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும், உதவிக் கரம் நீட்டிஅவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 இரக்கத்தின் ஆற்றலையே! எம் இறைவா! இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும்,இளையோர் இவ்வுலக மாயைகள், சிற்றின்பங்களுக்குத் தங்களேயே அடிமைபடுத்திக் கொள்ளாமல், கிறிஸ்துவே! எனது ஓப்பற்ற ஆதாயம் என்று உமக்குச் சாட்சிகளாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
www.anbinmadal.org

No comments:

Post a Comment