Tuesday, August 27, 2019

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு

  https://commons.wikimedia.org/wiki/File:FootWashing.jpg


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14திருப்பலி முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டியில் பங்கேற்க ஓர் இனமாய் ஆலயம் வந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இயேசு குறுகலான பாதையின் வழியாகச் சென்ற வாரம் நிறைவாழ்வுக்கு அழைத்தவர், இன்று பணிவு, தாழ்ச்சி, தன்னடக்கம் ஆகிய மகத்தானச் செயல்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் மாபெரும் கொடையாய் கடவுள் முன்பாக உயர்த்தப்படுவதை இன்றைய வாசகங்கள் மூலம் எடுத்துரைக்கின்றார்.
தாழ்ச்சியுள்ளவர்கள் மற்றவர் மீது குறிப்பாக ஏழைகள் மீது அக்கறை காட்ட முடியும். தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகின்றது. இவர்கள் ஆண்டவரை மாட்சிப்படுத்தும் பேறுபெற்றவர்கள். மரியாள் இதற்கு ஒரு சாட்சியாக உள்ளார். இறைவனின் அடிமை நான் என்று தன்னைத் தாழ்த்தியவர் அடைந்த உன்னத நிலையை நாம் அறிவோம்.
விட்டுக் கொடுப்பவர் வீழ்ந்ததில்லை. தாழ்ச்சியுடையோர் நிறைவாழ்வில் இறைவனால் உயர்த்தப்படுகின்றனர் என்பதை மனதில் பதிவு செய்து தாழ்வுமனப்பான்மையை ஒழித்துவிட்டு நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன் என்ற இயேசுவின் அமுதமொழியை வாழ்வாக்க இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


சீராக்கின் ஞானநூலின் ஆசிரியர் ”குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்புக் காட்டுவர்.” என்று கூறுகிறார். மனிதர் முன் உயர்ந்தவர் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் போல் தோன்றினாலும் கடவுள் முன்னிலையில் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே பணிவோடு நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


ஒரு காலத்தில் கடவுள் அச்சம் தரும் நெருப்பிலும், இருண்ட மேகத்திலும், கொடிய இருளிலும், சூழல்காற்றிலும் வெளிப்பட்டார். ஆனால் நமது காலத்தில் வானதூதர்களாலும், நீதிமான்களாலும் சூழப்பட்ட அமைதியின் கடவுளாக, தாழ்ச்சியின் கடவுளாகக் காட்சியளிக்கின்றார் என்று சினாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் உள்ள வித்தியாசங்களின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இறைவனோடு ஒப்புறவாகி உள்ளார் என்பதை வலியுறுத்தும் திருத்தூதர் பவுலின் எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..


பதிலுரைப்பாடல்


ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்: 68: 3-10

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். - பல்லவி

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி

கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:1. மூவொரு கடவுளே! இறைவா! பரம்பொருளே! உமது கனிவையும் மனத்தாழ்ச்சியையும் உம் திருஅவையிலுள்ள அனைவரும் மேற்கொண்டு பணிவு, தாழ்ச்சி ஆகிய உயரிய நோக்கங்களைத் தன் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்து உம் வார்த்தையின் ஆழத்தைப்புரிந்துச் செயலாற்ற வேண்டிய ஞானத்தையும், அன்பையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணுக்கும் மண்ணுக்கும் ராஜாதிராஜனே! அமைதியின் அரசரே! எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் தொண்டு உள்ளம் கொண்டு அனைத்து மக்களையும் சமமாக நடத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார உதவிகள் ஆகியவற்றை உம்மைப்போல் கனிவுடன் செய்து நல்லாட்சிப் புரிந்திடத் தேவையான ஞானத்தை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பரிவன்புமிக்க எம் இறைவா! எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணை நிறைந்த இறைவா! கிறிஸ்துவின் சீடர்கள் எனப் பெருமை கொள்ளும் நாம் இயேசுவின் பணிவு, தாழ்ச்சி, பிறருக்குப் பணிச் செய்வது, தாராள உள்ளத்தோடு உதவிடும் நிலைகளை எடுத்துரைத்த இன்றைய வாசகங்களை உள்வாங்கி, அதன்படி நம் வாழ்வில் இயேசுவின் சீடராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.அழகிய இவ்வுலகைப் படைத்த எமக்குத் தந்த இறைவா! எங்கள் தவறுகளால் எரிந்துப் பாழகிப் போதும் இயற்கையைப் பாதுகாத்து உலகத்தின் முச்சுக்காற்றைக் காக்கவும், மீண்டும் மனிதத் தவறுகளால் அழிவைச் சந்திக்காமல் இருக்கவும் தேவையான ஞானத்தை அனைத்துலக மக்களுக்கு இறைவா நீர் தரவேண்டுமென்று உம்மைக் கொஞ்சி மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment