Tuesday, August 13, 2019

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

 

இன்றைய வாசகங்கள்:-


திருவெளிப்பாடு. 11:19, 12:1-6,10 | 1கொரிந்தியர். 15:20-26 | லூக்கா. 1:39-56 

 திருப்பலி முன்னுரை:-


இன்று நாம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமான தன் காரணம் நம்பிக்கை! 

அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.

ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.


எபிரேயருக்கு எழுதிய நூலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்றுப் பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).


மரி(அன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் இந்த நாளில் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று, அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். 


மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போது தான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமைச் செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 

வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:


ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா. அவருக்கு ஏற்ற மாட்சியையும், துன்பங்களையும் அதன் வழியாக நாம் கண்ட மீட்பையும் எடுத்துக் கூறும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.பதிலுரைப் பாடல்
திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி 
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி 
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:


இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். இந்த நிகழ்வு அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது மரியாளின் விண்ணேற்பு வழியாக. சாவே கடைசி பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்று இயேசுவின் இரண்டாம் வருகையை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-


1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் மகிழ்ச்சியும், எம் புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும். மரியாளைப்போல தாழ்ச்சியிலும், இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்க அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த சுதந்திரக்காற்றை  அனுபவிக்கவும் தேவையான வரங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் இந்தியத் திருநாட்டில் அனைத்து விவசாயப் பெருமக்களும் படும் வேதனைகளைப் பாரும். தங்கள் வாழ்வை இழந்து, நீர்வளம், நிலவளம் வரட்சியால் தவிக்கும் எம் மக்களின் கவலைகளைப் போக்கி நல்ல மழையைப் பொழிவித்த அவர்களின் வாழ்வை மேம்படச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

             
www.anbinmadal.org

No comments:

Post a Comment