Monday, February 15, 2021

தவக்காலம் முதல் ஞாயிறு

     தவக்காலம் முதல் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


தொடக்க நூல் 9:8-15 |   1பேதுரு 3: 18-22  |   மாற்கு 1: 12-15  

திருப்பலி முன்னுரை:


ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்கத் திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் புத்துயிர் தரும் வசந்தகாலம். ஆம் பழைய வாழ்விலிருந்து புது வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு நல்லகாலம். சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம்.

சோதனைகளுக்கும், அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். உண்மை தான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.

“சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு.” இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளைச் சந்திக்கும்போது, அந்த இறைமகன் சொல்லித்தந்த பாடங்களையும், அவர் சொல்லித்தந்த அந்த அற்புத செபத்தின் வரிகளையும் நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்." என இன்றைய திருப்பலியில் இயேசுவை போலச் சோதனைகளை வென்றிட இறையருள் வேண்டிடுவோம்.

முதல் வாசக முன்னுரை:


அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் ஓர் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் கவனமுடன் கேட்போம்.



பதிலுரைப்பாடல்


திபா 25: 4-5. 6-7. 8-9
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

 

இரண்டாம் வாசக முன்னுரை:


கடவுள் இரக்கமுள்ளவர். நேர்மையானவர். எளியோரை நேர்வழியில் நடத்தி அவர்களுக்குத் தம் புதிய வழித்தடங்களைக் கற்பிப்பவர் என்று எண்பித்தார். கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரின் இறப்பின் வழியாக நாம் அனைவரும் வாழ்வு பெற்றோம். அந்த வாழ்வில் இறுதிவரை நிலைத்திருக்கப் புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அந்த அழைப்பிற்கு செவிமெடுப்போம்



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவா! தவக்காலத்தைத் தொடங்கியுள்ள உம் திருஅவையில் உள்ள அனைவரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்மைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் திறந்த மனதையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! ஒரே குடும்பமாகக் கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மைப் பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறை கொண்டு வாழவும், சோதனைகளைச் சுகமான சுமைகளாக மாற்ற உம் வார்த்தைகளின் படி வாழ்ந்திடும் மனத்திடனை அவர்களுக்கு நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா! எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ இத்தவக்காலம் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், சோதனைகளை வென்றடுத்த இயேசுவை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. சோதனைகளிலிருந்து எங்களை விடுவிக்க வல்லவரே எம் இறைவா!இந்த பெரும் தொற்றுநோய் காலத்தில்  எல்லா சோதனைகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும்  எங்களை விடுவித்து நலமும் வளமும் பெற்று, எமக்கடுத்திருப்பவர்களுக்கு உதவிடும் நல் மனம் தந்து, அனைவரையும் அன்புப் பாராட்ட தேவையான வரங்களை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

  www.anbinmadal.org


2 comments:

  1. Your Service is very helpful to us. My Deep Hearted Thankings and Prayers

    ReplyDelete
  2. Great job....May God bless your mission ....🌷🌷🌷

    ReplyDelete