Thursday, April 8, 2021

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2



இன்றைய வாசகங்கள் 


I திருத்தூதர் பணிகள் 4: 32-35
II 1 யோவான் 5: 1-6
III யோவான் 20: 19-31

முன்னுரை


அன்புடையீர்,
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும், இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. இயேசுவின் வார்த்தைகளை அருகிலிருந்து கேட்டுணர்ந்தச் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்தபோது, மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை அறிவித்தும், நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். இரக்கத்தின் தேவனாகிய இயேசு அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஒளியை ஏற்றி, தான் இரக்கத்தின் தேவன் என்பதை உணரச் செய்தார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காய் சாட்சிப் பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.

ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களை விடக் காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திடச் சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை


நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்து, அனைவரோடும் அன்புப் பாராட்டிச் சமத்துவம், சகோதரத்துவம், பொதுஉடமை போன்ற தத்தவங்களை அறிவுறுத்தும் திருத்தூதர் லூக்காவின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகத்திற்குச் செவிமெடுத்து நாம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 118: 2-4. 16ab-18. 22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!


‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! - பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. கடவுளையும் பிறரையும் நாம் அன்புச் செய்யும்போதும் நாமும் கடவுளாலும், பிறராலும் அன்பு செய்யப்படுகிறோம் என்பதை உணரத்தும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகம் வழியாக அழைக்கப்படுகிறோம் மனதில் பதிவு செய்து வாழ முயற்சிப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாகச் செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். இன்று வரை தொடரும் இந்தத் திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொண்டு, இதனை உணர்ந்து உம் திருஅவையைச் சிறப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு கூடிவரும் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவிச் செய்ததோடு, நம்பிக்கைக் குன்றியவர்களுக்குத் துணிவையும் தந்து, எங்களின் குடும்பம் பின்புலம், சமூக அந்தஸ்து, வேலைப் போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அரசர்களுக்கெல்லாம் அரசராகிய எம் இறைவா! எம் நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அணிகள் சேர்த்துக் கொண்டு மற்றவர்களை வெறுத்து ஒதுக்கமால் அனைவரும் இந்நாட்டு மக்கள், அனைவருக்கும் சேவைச் செய்யவே தெரிந்துக் கொள்ளப்பட்டோம் என்பதனை உணர்ந்திடக் கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.விண்ணும் மண்ணும் அழிந்துப் போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா, மீண்டும் வந்துள்ள தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்திச் சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து நல்ல உடல்நிலைத் தரவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

No comments:

Post a Comment