Thursday, April 15, 2021

பாஸ்கா காலத்தின் 3ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் 3ஆம் ஞாயிறு



இன்றைய திருப்பலியின் வாசகங்கள்


திருத்தூதர் பணிகள் 3:13-15, 17-19
1 யோவான் 2:1-5
லூக்கா 24:35-48

திருப்பலி முன்னுரை


வெற்றி வேந்தனாம் உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசுவின் பெயரால் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு.
நம்‌ ஆண்டவர்‌ உயிர்த்த பின்‌ தன்‌ சீடர்களுக்குக்‌ காட்சித்‌ தந்தார்‌. அவர்களோ ஐயோ! இது ஆவி என்றெல்லாம்‌ அச்சம்‌ அடைந்து நடுங்கினார்கள்‌. இயேசு காட்டிய அடையாள அட்டை என்ன? என்‌ கைகளைப்‌ பாருங்கள்‌. கால்களைப்‌ பாருங்கள்‌. என்னைத்‌ தொட்டுப்‌ பாருங்கள்‌, எனக்கு எலும்பும்‌ தசையும்‌ இருப்பதைக்‌ காண்கிறீர்களே! இவை ஆவிக்கு கிடையாதே என்றார்‌ (லூக்‌. 24:89). என்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌ என்று இயேசு கூறவில்லை. தன்‌ கைகளிலும்‌, கால்களிலும்‌ ஏற்பட்டத்‌ தழும்பைப்‌ பார்க்கும்படி சொல்கிறார்‌. ஏனெனில்‌ மகிமையுடன்‌ உயிர்த்த நம்‌ ஆண்டவர்‌ இயேசு பாடுகளின்‌ தழும்புகளுடன்‌ உயிர்த்தார்‌ என்பதை ஒருபோதும்‌ மறக்க முடியாது. அவரது விழுப்புண்கள்தான்‌ நமக்கு வாழ்வு தந்தது.

உயிர்த்த இயேசு பலஉருவங்களில் காட்சியளித்தார். ஆனால் சீடர்கள் மந்த‌ புத்தியுடன்‌ மதி மயங்கியவர்களாக இருந்தார்கள்‌. எனவே அவர்கள் இயேசுவை கண்டுக்கொள்ளவில்லை. அவர்களின் மனக்கண்களை திறந்தார். தன்னைப் பற்றிய மறைநூலில் கூறப்பட்டவைகளை கூறி இவைகள் அனைத்துக்கும் நீங்கள் சாட்சிகள் என்று அறிவிக்கின்றார்.

இன்றும் இயேசு நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு வடிவங்களில் தோன்றி, "நான்தான்" என்கிறார். நாமே அவரை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு நமது பயஉணர்வு, பகைமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு. தன்னலம், ஆணவம், முன் சார்பு எண்ணங்கள் போன்றவை நமது விசுவாசப் பார்வையை மறைக்கின்றன.

இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை மறைநூலிலும் அருளடையாளங்களிலும் அப்பம் பகிர்வதிலும் இன்னும் சிறப்பாக ஏழை எளிய மக்களிலும் நமது இன்பதுன்பங்களிலும் கவலை கண்ணீரிலும் ஏக்கங்கள் ஏமாற்றத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்பழகிக் கொள்வோம்.

மனமாற்றம் காண்போம். இயேசுவின் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்..

வாசக முன்னுரைகள்


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் யூதர்களின் செபக்கூடத்தில் திருத்தூதர் பேதுரு இயேசு உண்மையிலே உயிர்த்தார் எனச் சான்று பகர்கிறார். நீங்கள் அறியாமையால் இயேசுவைக் கொன்று விட்டீர். பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி  இயேசுவிடம் திரும்புங்கள் என்று அழைப்பு விடுவதை உணர்ந்தவர்களாக நாமும் மனமாற்றம் பெறுவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)

பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே. அல்லது: அல்லேலூயா.

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். - பல்லவி

இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நம் பாவங்களுக்கு மட்டுமல்ல; அனைத்துலக பாவங்களுக்கும் கழுவாய் அவரே’ என்கிறார் யோவான். செம்மறியான கிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களுக்காகச் சிந்தப்பட்டது என்பதை நாம் அறிந்தும், பாவச் செயல்களில் மீண்டும் ஈடுபடுகிறோம். இறை இயேசுவின் அன்பினால் பாவம் அகற்றப்பட்டது போல நமது அன்பினால் உறவுகளும், உண்மையும் உறுதியாக்கப்படட்டும்.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவையில் அதன் பணியாளர்களாகிய திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருட்கொடை வள்ளலே எம் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment