Friday, April 30, 2021

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்:


திருத்தூதர் பணிகள் 9: 26-31
1யோவான் 3: 18-24
யோவான் 15: 1-8

திருப்பலி முன்னுரை:


அன்பார்ந்த இறைமக்களே!
இன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - மரத்தோடு கிளைகள் இணைந்திருந்தால் மட்டுமே கனி தரமுடியும். அவ்வாறே இயேசுவோடு நாம் இணைந்திருந்தால் தான் நாமும் நம் வாழ்வில் பலன் அளிக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றது இன்றைய நற்செய்தி.

நெருக்கடியான ஒரு சூழலில் இயேசு தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்திப் பேசுகிறார், இன்றைய நற்செய்தியில். இயேசு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை. அந்த இறுதி இரவுணவு கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்குக் காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

திராட்சைத் தோட்டத்திலிருந்து இறுதியில் கிடைப்பது சுவைமிக்க திராட்சைக்கனி. திராட்சைக் கனியும், இரசமும் எவ்வளவுக்கு எவ்வளவு சுவையாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் பின்னணியில் கவனம், கரிசனை, கடின உழைப்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம். இறுதி முடிவு இனிமையாக அமைய வேண்டுமென்றால், எத்தனையோ இடர்களை, சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்.

நமது வாழ்வெனும் திராட்சைத் தோட்டத்தில் இறைவனே நம்மைப் பயிரிட்டு, கண்காணித்து வளர்ப்பவர். இறைவனுடன் இணைந்து, அவரது கண்காணிப்பில் வாழும்வரை நாம் மிகுந்த கனி தருவோம். இந்த இறைநம்பிக்கையில் இத்திருப்பலியில் பங்கேற்போம்.

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை:

கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

பதிலுரைப் பாடல்


திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a)

பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!

அல்லது: அல்லேலூயா.

1. உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! - பல்லவி

2. பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி

3. வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:

நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். நாம் உண்மையைச் சார்ந்தவர்கள். இறைவனிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம். அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. இதன்மூலமாக நாம் கடவுளுடன் இணைந்திருப்பதை ஆவியானவரின் மூலமாக அறிந்துக் கொள்வோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருதூதர் யோவான் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வசனம்


அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



 1.அன்பின் இறைவா!  உம் அன்பு குழந்தைகளாகிய  திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்கமில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில்  விதைத்த புதியதொரு விண்ணகத்தை  இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அன்பே உருவான எம் இறைவா, இன்று உலகில் உள்ள தீவிரமான தொற்றுநோய் 2ஆம் அலை, 3ஆம் அலை என்று எங்களை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில் உமது வல்லமை மிக்க உறுதியான கரங்களால் மீட்டு இயேசுவின் இரத்தம் எங்களை காக்கும் என்ற நம்பிக்கையை நம் மனங்களில் பதிவு செய்து உலகமக்கள்  அனைவரும் நற்சுகம் பெற்று அமைதியில் வாழ தேவையான வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. இந்த தொற்றுநோய் காலத்தில் பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவர்கள் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் காண தேவையான  ஞானத்தையும், ஆற்றலையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

No comments:

Post a Comment