Thursday, June 10, 2021

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு -ஆண்டு 2

 பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு -ஆண்டு 2


 இன்றைய வாசகங்கள்


எசேக்கியேல் 17: 22-24  |  2 கொரிந்தியர் 5: 6-10  |  மாற்கு 4: 26-34


 திருப்பலி முன்னுரை :


இயற்கையுடன் இணையாமல் இயற்கைக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே இயற்கைப் பாடங்கள் சொல்லித் தருகின்றார் இறைவன்.

இயற்கை என்ற பள்ளியில் இறைவன் நமக்குச் சொல்லித்தர விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த இயற்கை வளங்களை இழக்கும் நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கிவிட்டு, இறந்து கொண்டிருக்கும் இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்று உலகநாடுகள் அனைத்தும் மாநாடுகள் நடத்தி வருகின்றது.

மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமையே இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் "தானாக வளரும் விதை" என்ற உவமை.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள் நாம் வாழும் அவசர உலகில் பெருமளவு காணாமற் போய்விட்டன.

இன்றைய நற்செய்தியில் வரும் விதை போன்றவர்கள் தாம் நாம். பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இறைவார்த்தைகள் உரமாக இருந்து, அருள்கொடைகள் எனும் நீர் ஊற்றி, விதை முளைத்து, செடியாக, மரமாக வளர்ந்து நிற்கும்போது, நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம்மால் நல்ல கனியைக் கொடுக்க முடியும், பகிர்ந்து கொள்ள முடியும். அக்கனிகள் வளரக் கடவுள் ஊட்டி வளர்த்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைவனின் நற்கனிகளாய் உருபெறச் சிறப்பாக மன்றாடுவோம்.

 வாசக முன்னுரை :

 முதல் வாசக முன்னுரை :


இறைவனின் உன்னத கொடையே நம் உயர்வும், வளர்ச்சியும் ஆகும்.  மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல். வளர வைப்பதும், வளர்ந்ததை உலர வைப்பதும் இறைவனின் வல்லமை. இறைவனின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளை கவனமுடன் கேட்போம்.

  பதிலுரைப் பாடல்


திபா 92: 1-2. 12-13. 14-15
 பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். - பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை :


நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும்.ஆம் இறுதிநாளில் இயேசுவின் நீதிமன்றத்தில்  நாம் தோன்றும் போது நாம் உடல் வாழ்க்கையின் போது நாம் செய்த நற்செயல்கள், தீச்செயல்களுக்கு உரிய   பலனைத் தரும் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா!  இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான்.  அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதியாகத் திகழும் திருச்சபை கேதுருமரம் போல் தளிர்விட்டு தழைத்து மேலோங்கிட இறைநம்பிக்கையால் தேர்ந்து கொள்ளப்பட்ட திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவரது ஒளியில் மிளிரும் ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர். தாம் தேர்ந்து கொண்ட அழைப்பிற்கேற்ற வாழ்க்கை வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. எம்மைப் படைத்தாளும் எம் இறைவா! அனைத்தையும் சுற்றிவளைத்து அபகரித்துக் கொள்ளும் சுயநலத்தைக் களைந்து, மென்மையான மனதுடன், படைப்பு அனைத்தையும் பேணிக் காக்கும் மனதை எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கி நீர் படைத்த இயற்கையோடு ஒன்றித்துவாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுவோம்.

3. அன்பு இறைவா, நல்ல பெற்றோர்களாக நாங்கள் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல முன் மாதிரியாகத் திகழ்ந்து, ஆன்மிக வாழ்விலும், அருள் வாழ்விலும் எங்கள் குழந்தைகள் வளர்ந்திட உமதுஅருள் வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பிறரின் சுமைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட இறைவா! துன்பத்தில் பங்கேற்ற சீமோனைப் போன்ற நாங்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பிறருடன் அவரவர் தேவைக்கேற்ப எங்கள் உடைமைகளையும், உணர்வுகளையும், ஆறுதல் தரும் வார்த்தைகளையும் பகிர்ந்து வாழக் கூடிய நல் மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org 

No comments:

Post a Comment