Thursday, June 17, 2021

பொதுக்காலம் 12 ஆம் ஞாயிறு - ஆண்டு 2


பொதுக்காலம்  12 ஆம் ஞாயிறு - ஆண்டு 2



இன்றைய வாசகங்கள்:

முதல் வாசகம்: யோபு 38:1.8-11
இரண்டாம் வாசகம்:  2கொரிந்தியர் 5: 14-17
நற்செய்தி: மாற்கு 4:35-41
 

திருப்பலி முன்னுரை:

இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று பொதுக்காலம் 12ம் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்னும் ஆழ்ந்த உறுதிப்பாடு நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். துன்பங்கள் புயல் போல எழலாம். கவலைகள் கடல் அலைபோல நம்மை மூழ்கடிக்க வரலாம். தொற்றுநோயின் தாக்கம் நம்மைப் பயத்தில் முழ்கடிக்கலாம். ஆனால் இயேசுவின் உடனிருப்பு அந்த ஆபத்துக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். இது உறுதி.

திருஅவை என்னும் மாபெரும் கப்பல் பயணம் போகின்ற வேளையில் புயற்காற்றும் அலையும் எழுந்து அதைப் பயமுறுத்தலாம். ஆனால் அதை எல்லாம் வென்று திருஅவை இன்றும் அமைதியாகப் பயணிப்பதற்குக் காரணம் இயேசுவின் உடனிருப்பு மட்டுமே என்பதை நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம். அந்த நம்பிக்கை என்றும் எல்லோரையும் வழிநடத்தும்.

அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் என்ற இயேசுவின் அழைப்பை ஏற்று நிலைவாழ்வு என்று அக்கரைக்கு நம்பிக்கையுடன் பயணிப்போம். வாரீர்.


வாசக முன்னுரை:

முதல் வாசகம்

  இறைவனே பெருமிதம் கொண்ட யோபுவின் நம்பிக்கையே கொஞ்சம் ஆட்டம் கண்டபோது ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளியப் பதிலே முதல் வாசகம். வாழ்வினில் இழப்புகள், இடர்பாடுகள், விபத்துக்கள், வேதனைகள் போன்ற சூழலில் இறைவனின் அன்பை, ஆற்றலை, உடனிருப்பை மறந்து விடக்கூடாது என்பதே இன்றைய வாசகம் சொல்லும் செய்தி. யோபு இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்ட செய்தியை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 107: 23-24. 25-26. 28-29. 30-31

சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.  அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். பல்லவி

அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.  அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. பல்லவி

தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. பல்லவி

அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.  ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! பல்லவி

இரண்டாம் வாசகம்

நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்துப் போவதில்லை: குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை: துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை: வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. கிறிஸ்துவோடு ஒன்றிணைக்கப்பட்டு நாம் புதுப் படைப்பாக இருக்கிறோம் என்ற ஆழமான மன உறுதி இருந்த புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தை வாசிக்கக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா

நம்பிக்கயாளரின் மன்றாட்டு:


பரம்பொருளே! எம் இறைவா! திருச்சபையை ஆளும் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் உமது இறையரசுப் பணியைச் செவ்வனே ஆற்றிடப் போதுமான ஆற்றல்களையும், நல் ஆரோக்கியத்தையும் அவர்கள் மீது பொழிந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என் அன்புத் தந்தையே! இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மனித நேயமிக்க நல்லாட்சிப் புரிந்து இறைமக்கள் அனைவரையும் சமத்துவத்துடனும் அன்புடனும் வழி நடத்திடவும், தொற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும் எல்லாப் பணிகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தவும் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உன்னதரே! எம் இறைவா! மனிதர்களாகிய நாங்கள் உணர்வற்று உறங்கும்போது தம் இதயத்தை இயக்குபவராகிய எம் இறைவா உம் மீது நம்பிக்கைக் கொண்டு வாழும்போது உம் திருமகன் படகில் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் மக்களை மீட்கிறவராகச் செயல் பட்டுக் கடலின் இறைச்சலைக் கடிந்து அமைதிபடுத்திய நிகழ்வு நாளும் எங்களுக்கு உற்சாகத்தைத் தர வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா! திடத்துடன் வாழவும், வாழும் திருச்சபையாக வாழவும், இந்தத் தொற்றுநோயை வெற்றிக்கொள்ளவும் யோபுவின் துன்பங்களை நாங்களும் படித்துணர்ந்து, சோதனைகளில் துவண்டுப் போகமால் ஆழ்ந்த நம்பிக்கையில் வாழ்ந்த யோபுவைப் போன்று எமது திருச்சபை வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

 

www.anbinmadal.org

No comments:

Post a Comment