பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு - ஆண்டு 2
இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞானம் 1:13-15; 2:23-24
2 கொரிந்தியர் 8: 7, 9, 13-15
மாற்கு 5:21-43
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவின் அன்புக்குரியவர்களே!
ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ளோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு பெண்கள் நலமடைந்த புதுமைகளை கேட்கவிருக்கிறோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இரு புதுமைகள் நிகழ்கின்றன.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது, எவ்விதத் தொடர்பும் இல்லாத இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.
இருபெண்கள் குணமடைகின்றனர்... நோயுள்ள ஒரு பெண்ணும், இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரைக் கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வருபவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிர் இழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச் சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.
ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பித்த அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.
இந்நிகழ்வை நம் ஆழ்மனதில் பதிவுசெய்து நாம் எப்பொழுதும் இறைமகன் இயேசுவை மையமாக கொண்டு நம் வாழ்வை வளமாக்கவும், தொற்றுநோய் விரைவில் மறைந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஊடகங்கள் தரும் உலகையும், விவிலியம் தரும் உலகையும் இணைத்துச் சிந்திக்கும்போது, , இந்த உலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் நாம் அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சுடுகாட்டின் மத்தியில், கல்லறைத் தோட்டத்தின் நடுவில் கவிதை வரிகளாய் இன்றைய முதல் வாசகம் ஒலிக்கிறது: "கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது" என்பது தான் இவ்வரிகள். முதல் வாசகமாக வரும் சாலமோனின் ஞானம் இப்பகுதியை கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10,11,12
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் சேமிப்பைப் பற்றியும் பகிர்வைப் பற்றியும் திருத்தூதர் பவுலடியார் "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை " என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! என்ற எடுத்துக்காட்டுடன் இயேசுவின் அன்பை அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசு அவர் செல்வராயிருந்தும் ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். பவுலடியாரின் இக்கருத்துக்களை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1.உயிரினும் மேலான பேரன்பு கொண்ட தந்தையே எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இறையரசை அறிவிக்க தங்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் சாட்சியம் பகர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2.எம் நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் அனைத்தும் உம்மையே மையமாகக் கொண்டு, உம் மேல் முழு நம்பிக்கை வைத்து எங்கள் வாழ்க்கையை உமக்கு உகந்ததாக வாழவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், நிலைவாழ்வைப் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
3.எல்லாரும் தஞ்சம் தரும் எம் இறைவா! புலம்பெயந்து துன்புரும் எல்லாநாட்டு மக்களையும் கண்நோக்கியருளும். அவர்களுக்கு அடைக்கலம் தரும் நல்ல உள்ளத்தையும், மனிதநேயத்தையும் தந்து, அம்மக்களை ஆதரிக்க உலகநாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவும், வாழ்வும், வளமும், ஏற்றமும் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
4.என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! இந்திய திருநாட்டில் தொற்று நோயின் காரணமாக அருள்பணியாளர்களை இழந்து தவிக்கும் உம் திருஅவையைக் கண்ணோக்கும். அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியை அருளும். புதிய தேவஅழைத்தல் தந்து உம்மை வழிநடத்திட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
5. அனைவரையும் ஆதரிக்கும் தந்தையே எம் இறைவா! ஏழைகள், கைவிடப்பட்டோர், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோரை கண்டு அவர்களுக்கு உதவிட தங்கள் உழைப்பாலும், பொருளாதார உதவியாலும் வாழ்வில் மகிழ்வு, உடல்நலமும் பெற்று அமைதியான வாழ்க்கை அளித்திட இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களை பாதுகாக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
www.anbinmadal.org
Thank you so so much
ReplyDelete