பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
இணைச்சட்டம் 6:2-6
எபிரேயர் 7:23-28
மாற்கு 12:28-34
திருப்பலி முன்னுரை:
இன்று ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.
கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் அன்பு. உலகின் உண்மையான மதங்கள் அனைத்துக்கும் ஆணிவேர் அன்புதான். இந்த அன்பு முப்பரிமாணம் கொண்டது. இந்த முப்பரிமாண அன்பைப்பற்றி இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார். "இஸ்ரயேலே கேள்" என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு இம்மூன்றுக் கட்டளைகளைக் கூறுகிறார்.
இறைவனை அன்புச் செய்! தன்னையும் அன்புச் செய்! பிறரையும் செய்!
மூன்று கட்டளைகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். இறையன்பு, பிறரன்பு என்ற இரு கட்டளைகளைத்தானே இயேசு அளித்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்பலாம். இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், ஈர் அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். 'ஒருவர் அடுத்திருப்பவர் மீது அன்பு கொள்ள வேண்டும்' என்று மட்டும் இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘ஒருவர் தன் மீது அன்புக் கூர்வதுபோல் அடுத்தவர் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
எனவே இன்றைய வாசகங்களைக் கவனமுடன் கேட்டு இறைவனை அன்புச் செய்யவும், தன்னே அன்புச் செய்யவும், பிறரையும் அன்புச் செய்யவும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அன்புக் கட்டளையை யூதர்கள் தங்களது கதவு நிலைகளில் மட்டுமல்ல தங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தாங்கி வாழ்ந்தனர். இக்கட்டளைகளில் கடவுளை மனிதர்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும் என்று அழைக்கின்றது. கலைமான் நீரோடைக்காக ஏங்கித் தவிப்பதுபோல உயிருள்ள இறைவன் மீது தாகம் கொண்டு அவரைத் தேடி அன்பு செய்ய மோசேயின் வார்த்தைகள் வழியாகக் கடவுள் நம்மை அழைப்பதைக் கவனமுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.
பதிலுரைப் பாடல்
திபா 18:1-2, 2-3. 46,50
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி
என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண், போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதர்கள் சாவுக்கு ஆளாவதால் தங்கள் குருத்துவப் பணியில் நிலையாய் இருக்கமுடியவில்லை. ஆனால் இயேசுவோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; நம் தலைமைக் குருவும் அவரே! தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி நம்மை மீட்டுள்ளார். என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார். என்று இயேசுவின் குருத்துவ மேன்மையை எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1.எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் சான்றுவாழ்வுக்காக எங்களிடம் எதிர்பார்க்கப்படுவது பொறுப்புணர்வும், தாராள உள்ளமும், எம் திருஅவையில் நிறைவாய் இருந்திடவும், எதிர் காலக் கலக்கம் எதுவுமில்லாத நல்வாழ்வு நடத்தவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.உம் பேரன்பால் பூவுலகை நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போலப் பணிகளைச் செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, அவரின் உடனிருப்பை உணர்ந்து வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
3.எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ReplyDeletePothukalam 32 sunday