ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
சாலமோன் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30
திருப்பலி முன்னுரை:
இன்று ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்திச் செல்வந்தரின் மனநிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. சாலமோன் கடவுளிடம் தனக்கு ஞானத்தைக் கேட்டார். ஏனென்றால் ஞானம் கடவுள் தரும் கொடையாகும். ஞானம் கிடைத்துவிட்டால் அத்துடன் அனைத்துச் செல்வங்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையின் ஒளியில் நடப்பதே சாலச்சிறந்ததாகும்.
இன்று இயேசுவிடம் வந்த செல்வந்தன் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய விரும்பினான். ஆனால் இயேசுவோ 'கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது' என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றார். எனவே நிலைவாழ்வுக்குச் செல்லப் பற்றற்ற வாழ்வே தேவை என்பதை உணர்ந்துப் பரம்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுவோம். பின்பு 'வந்து பாரும்' என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப்
பரிசாகப் பெற்றுக்கொள்வோம். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளை மனதில் பதிவு செய்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்போம்..
வாசகமுன்னுரை:
முதல் வாசகம்:
பிறப்பிலும், வளர்ச்சியிலும் எல்லாரையும் போல ஒத்திருத்த சாலமோன், எல்லாரும் பெற்றிருக்கும் ஒன்றைவிடத் தான் சிறந்ததைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இறைவனிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகின்றார். தான் மன்றாடியதால் இறைவனின் ஞானத்தின் ஆவித் தன்னிடம் பொழியப்பட்டது என்று சொல்லும் அவர் ஞானத்தின் மேன்மையை இன்றைய முதல் வாசகப் பகுதியில் விவரிக்கின்றார். . ஞானம் வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 90: 12-13. 14-15. 16-17
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்;
எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி
16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி
இரண்டாம் வாசகம்:
இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்குக் கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இதன் பின்னணியில் கடவுளுடைய வார்த்தையின் இயல்பு என்ன என்பதைப் பதிவு செய்கின்றார். நல்லது எது, தீயது என முடிவு செய்பவர் நானோ, எனக்கு அடுத்திருப்பவரோ, நான் சார்ந்திருக்கும் மதம் அல்ல. மாறாக, என்னைப் படைத்தவரே. அவரின் முடிவை நான் எப்படி அறிந்துகொள்வது? அவரின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் வழியாகவே என்ற இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. ஞானமென்னும் அருட்கொடைகளை சாலமோனுக்கு கொடுத்த எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசுகிறிஸ்துவை எம் நிலைவாழ்வாகப் பெற்றவும், நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களைத் தூண்டவும், இறைவார்த்தையால் ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
3. உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்து தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்க விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றி பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நற்பெயர் ஈட்ட முயலவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அகமுவந்தழைக்கும் அன்புத்தந்தையே இறைவா! இயேசுகிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செல்வங்களைப் பெற்றவர்களாய் வலம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்ற காலத்தில், ஏற்ற இடத்தில் ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment